Last Updated : 07 Sep, 2021 03:13 AM

 

Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

சொக்கத் தங்க சாம்பியன்கள்!

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது. இதற்கு முன்பு அதிகபட்சமாக ரியோ பாராலிம்பிக்கில் இருவர் தங்கம் வென்றதே சாதனையாக இருந்தது. ஆனால், டோக்கியோ பாராலிம்பிக்கில் ஐவர் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார்கள். அந்தத் தங்கங்கள் யார்?

அவனி லேகாரா (துப்பாக்கிச் சுடுதல்)

துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஒலிம்பிக் ஏமாற்றினாலும் பாராலிம்பிக் அந்தக் கவலையைப் போக்கிவிட்டது. துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் ஐந்து பதக்கங்கள் கிடைத்துள்ளன. பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் முதன்முறையாகத் தங்கத்தைச் சுட்டவர் 19 வயதான அவனி லேகாரா. எஸ்எச்1 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் 249.6 புள்ளிகளைக் குவித்துத் தங்கத்தை வென்றார் அவனி லேகாரா. இதேபோல எஸ்எச்1 50 மீ. ஏர் ரைபிள் பிரிவிலும் அவனி லேகாரா வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் ஒரே பாராலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனையானார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த அவனியின் வாழ்க்கை 11 வயதில் கார் விபத்தால் முடங்கியது. அதிலிருந்து மீள விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார். முதலில் வில்வித்தையில் பயிற்சி பெற்ற அவனி, ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ராவால் ஈர்க்கப்பட்டு, துப்பாக்கிச் சுடும் விளையாட்டுக்கு மாறினார். இன்று நாடே பெருமைப்படும் அளவுக்குச் சாதித்திருக்கிறார் அவனி.

சுமித் அண்டில் (ஈட்டி எறிதல்)

இந்த முறை தடகளத்தில் மட்டும் எட்டுப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. அதில், ஈட்டி எறிதலில் தங்கம் ஈட்டியிருக்கிறார் 23 வயதான சுமித். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஆம், இருவருமே ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள். ஈட்டி எறிதல் எஃப்64 பிரிவில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய சுமித், அந்தச் சுற்றில் 68.55 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தைத் தட்டினார். இது புதிய உலகச் சாதனையாகவும் பதிவானது.

ஏழு வயதிலேயே தந்தையை இழந்த சுமித், அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். 17 வயதில் பைக் விபத்தில் சிக்கி, தன் இடது காலை இழந்தார். காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத சுமித், 2017 முதல் பாரா தடகளப் போட்டிகளில் ஈடுபடத் தொடங்கினார். நான்கே ஆண்டுகளில் தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

மணீஷ் நார்வால் (துப்பாக்கிச் சுடுதல்)

துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் பிஸ்டல் எஸ்.எச்1 பிரிவில் புதிய வரலாற்றை இந்தியா படைத்தது. இச்சுற்றில் 19 வயதான மணீஷ் நார்வால் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இப்பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய மணீஷ், 218.2 புள்ளிகளைக் குவித்துத் தங்கம் வென்றார். இதே பிரிவில் 39 வயதான சிங்ராஜ் அதானா வெள்ளிப் பதக்கம் வென்றதும் முத்தாய்ப்பானது. ஒரே போட்டியில் இரு இந்தியர்கள் பதக்கங்களை வெல்வது இதுவே முதன்முறை.

ஹரியாணாவைச் சேர்ந்த மணீஷ் நார்வாலுக்கு ஐந்து வயதானபோது வலது கை செயல்படாமல் போனது. கால்பந்துப் பிரியரான மணீஷ் நார்வால், முதலில் அதைத்தான் விளையாடினார். ஆனால், குறைபாடு காரணமாக கிளப் அணியை அவரால் தாண்ட முடியவில்லை. பின்னர்தான் துப்பாக்கிச் சுடும் விளையாட்டுக்கு மாறினார். இன்று அதற்குக் கை மேல் பலன் கிடைத்திருக்கிறது.

பிரமோத் பகத் (பாட்மிண்டன்)

ஒலிம்பிக் பாட்மிண்டனில் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. பாராலிம்பிக்கில் அந்தக் குறை நீங்கிவிட்டது. பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த 33 வயதான பிரமோத், அப்பிரிவில் இடம்பெற்றிருந்த சக நாட்டு வீரரான மனோஜ் சர்காரை 2-1 என்கிற செட் கணக்கிலும், உக்ரைனின் ஒலெக்சண்ட் சைர்கோவ்வை 2-0 என்கிற செட் கணக்கிலும் வீழ்த்தினார்.

அரையிறுதிச் சுற்றில் ஜப்பானின் டெய்சுகி ஃபுஜிஹராவை 2-0 என்கிற செட் கணக்கிலும், இறுதிச் சுற்றில் பிரிட்டனின் டேனியல் பெத்தலை 2-0 என்கிற கணக்கிலும் தோற்கடித்துத் தங்கப் பதக்கத்தை பிரமோத் வென்றார். இதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். துப்பாக்கிச் சுடுதலுக்குப் பிறகு பாட்மிண்டனில் ஒரே நேரத்தில் இந்தியர்கள் பதக்கம் வென்று சாதித்தனர்.

ஒடிசாவைச் சேர்ந்த பிரமோத், நான்கு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். இக்குறையால் வீட்டில் முடங்கவில்லை. பாட்மிண்டன் போட்டிகள் எங்கே நடந்தாலும் சென்றுவிடுவார். 13 வயதில் அவரும் அந்த விளையாட்டை விளையாடத் தொடங்கினார். தொடக்கத்தில் நல்ல உடல்நிலையோடு இருப்பவர்களுடன் விளையாடித்தான் பாட்மிண்டனைக் கற்றுக்கொண்டார். இன்று பாரா பாட்மிண்டனில் முதல் நிலை வீரராக உருவெடுத்திருக்கிறார்.

கிருஷ்ணா நாகர் (பாட்மிண்டன்)

பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரமோத் பகத் தங்கம் வென்றார் என்றால், ஆடவர் ஒற்றையர் எஸ்எச்6 பிரிவில் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். ‘பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த கிருஷ்ணா, பிரேசில் மற்றும் மலேசிய வீரர்களை முறையே 2-0, 2-0 என்கிற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்குச் சென்றார். அரையிறுதிச் சுற்றில் பிரிட்டனின் கிர்ஸ்டன் கோம்ஸை 2-0 என்கிற நேர் செட்களிலும், இறுதிச் சுற்றில் ஹாங்காங்கின் சூ மே கையை 2-1 என்கிற செட் கணக்கிலும் வென்று கிருஷ்ணா தங்கப் பதக்கத்தை வென்றார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயதான கிருஷ்ணா, உடல் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இவரது உயரம் 4.5 அடி மட்டுமே. குறைபாடு இருந்தாலும் அதையெல்லாம் மனத்தில் ஏற்றிக்கொள்ளாதவர். பாட்மிண்டன் விளையாட்டில் முன்னேறி, 2018 முதல் சர்வதேச பாரா போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஐந்து தங்கங்களும் சாதித்திருக்கிறார்.

உயர்ந்த சாதனை!

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலு மீண்டும் சாதித்துக் காட்டினார். டி63 உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் கடும் போட்டி நிலவியது. சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளி வென்றார். ரியோ பாராலிம்பிக்கில் டி47 பிரிவில் தங்கம் வென்றிருந்த மாரியப்பன் மீண்டும் வெள்ளி வென்று அசத்தியிருக்கிறார். இதன்மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை பெற்ற தமிழகத்தின் முதல் வீரர் என்கிற பெருமையை மாரியப்பன் பெற்றிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x