Published : 19 Feb 2016 11:49 AM
Last Updated : 19 Feb 2016 11:49 AM
ஞாயிற்றுக்கிழமை காலை.
‘இன்னைக்கு லீவு நாளுதானே? இன்னைக்காச்சும், கடைக்குப் போயி காய்கறி வங்கி வந்து குடுத்தா, உங்க குடும்ப கவுரவம் என்ன குறைஞ்சா போயிடும்?'
‘நான் கொஞ்ச நேரம் பேப்பர் படிக்கறது பொறுக்காதே உனக்கு? சரி, உள்ள இருந்து ஒரு நூறு ரூபா எடுத்துக் கொடு. கடைக்குப் போயிட்டு வர்றேன்'.
நீண்ட பட்டியலை மனதுக்குள் சொல்லிக்கொண்டே, கடைக்குப் போய் விலைவாசியைக் கேட்கிறபோதுதான், எவ்வளவு வாங்கலாம் என்பது பெரிய குழப்பத்தில் முடியும். சில நொடிகள் யோசித்துவிட்டு, ‘கால் கிலோ பத்து ரூபாயா? அரை கிலோ வாங்கலாம்னு பார்த்தேன். ம்ஹும். சரி. கால் கிலோ குடுங்க, போதும். வேற என்ன பண்றது?'
விலை குறைவாக இருப்பதைக் கூடுதலாகவும், விலை கூடுதலாக இருப்பதைக் குறைவாகவும், ‘என்ன விலை விக்குதுப்பா!' என்பது மாதிரியான பொருட்களை வாங்காமலும், கடை வேலையை முடித்துக்கொண்டு திரும்புகிறோம். இப்படி, நம் கையில் இருக்கிற பணத்துக்குள், நமது பட்டியலைச் சுருக்கிக்கொள்கிறோம் அல்லவா?
இதற்குப் பெயர்தான் யதார்த்தம். இதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்!
சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, தமது தேவைகளை உடனுக்குடன் மாற்றிக்கொள்கிற மனப்போக்கு, பொருளாதாரத்தில் மிக முக்கியமான பாடம். யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே நாம் இதில் தேர்ந்த விற்பன்னர் ஆகிவிட்டோம்.
எது சாத்தியமோ, அதை மட்டுமே செய்ய வேண்டும் என்பதைப் பொருளாதாரம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
‘இல்லைப்பா. நம்ம சக்திக்கு இதெல்லாம் சரி வராதுப்பா. அதிகமா ஆசைப்பட்டு, நாளைக்குக் கஷ்டப்பட வேணாம்ப்பா' இப்படிச் சொல்கிற மகள்களைப் பெற்றோர் தாராளமாக உச்சி முகர்ந்து பாராட்டலாம். காரணம், பொருளாதார நோக்கில் மிகச் சிறந்த சிந்தனை இது.
இந்தியாவில் வாழும் பல கோடி சாமான்யர்களுக்கும், இயல்பாகவே அமைந்துவிட்ட இந்த யதார்த்தம்தான், பல நாடுகள் நம்மைக் கண்டு வியந்து பாராட்டுகிற சித்தாந்தம்.
நம்மிடம் உள்ள பணம், திறமை, உழைப்புத் திறன் போன்ற வளங்கள், நம்முடைய அளப்பரிய தேவைகள், பொருள் வரத்தில் அவ்வப்போது ஏற்படும் மிகை அல்லது பற்றாக்குறை, ஏறி இறங்கியபடி மாறிக்கொண்டே இருக்கும் விலைவாசி, வருமானத்துக்கும் செலவுக்கும் இடையே உள்ள முரண்கள், நமக்கு எது சாத்தியமாகிறதோ அதை மட்டுமே செய்கிற யதார்த்தம்... இவற்றால் ஆன கோலம்தான் பொருளாதாரம்.
உள்ளூரிலிருந்து உலகப் பொருளாதாரம் வரை அத்தனையும், மேற்சொன்னவற்றில் அடங்கும்.
இதுவரை, சில அடிப்படைக் குறிப்புகளைப் பார்த்தோம். இனி, சற்றே விரிவாகப் பார்ப்போமா?
நான்கு பேர். இவர்கள்தான் பொருளாதாரத்தில் முக்கியமான நபர்கள்.
இவர்கள் யார் யார்? இவர்களின் பணி என்ன? பங்கு என்ன? என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதன் பிறகு, இவர்களில் கதாநாயகன் யார், வில்லன் யார், ‘காமெடி' செய்வது யார் என்பதையெல்லாம், அவரவரே முடிவு செய்துகொள்ளலாம்.
உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர், நுகர்வோர் ஆகியோர்தான் இந்த நால்வர்.
அந்த ‘நாலு’ பேர்
பெயர்களிலிருந்தே இவர்களைப் பற்றிச் சற்றே யூகிக்க முடிகிறது அல்லவா? இருக்கட்டும். இவர்கள் நான்கு பேராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரே ஒருவராகவும் இருக்கலாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
‘இருக்கிறது கால் காணி நிலம். அதுல விளைஞ்சு வர்றது, எங்க குடும்பத்துக்கே சரியாப் போவுது. இதுல, விலைக்கு எங்கண விக்கறது?' ஓர் ஏழை விவசாயி இப்படிச் சொல்கிறபோது என்ன புரிகிறது? அவர்தான், உற்பத்தியாளர். அவரேதான் நுகர்வோரும். இடையில் விற்பனையாளர் என்று யாரும் இல்லை.
அடுத்தது, இரண்டு பேர் மட்டுமே, நால்வரின் பணிகளையும் செய்வது.
இதுவும் நமக்கு நன்கு பரிச்சயமானதுதான். மண்பாண்டம் செய்து விற்கிற குயவர் பெருமக்கள்.
ஒரு குயவர் என்ன செய்யறாரு? பானை செஞ்சி, அதை தன்னோட வீட்டு வாசல்லயே வரிசையா அடுக்கி வைக்கிறாரு. அந்த வழியா போறவங்க, நேரடியா குயவர்கிட்டயே வாங்கிட்டுப் போயிடறாங்க.
இந்த உதாரணத்தில், உற்பத்தியாளர், நுகர்வோர் இருவர்தான் இருக்கிறார்கள். இடையில், விற்பனையாளர் என்று தனியாக யாரும் இல்லை.
மூன்று பேர் மட்டும்? வெகு எளிதாகச் சொல்லிவிடலாம். மொத்த விற்பனையாளரே, சில்லரையிலும் விற்றால், மூன்று பேர்தானே இருப்பார்கள்?
சரி. ஒரு கேள்வி. மேலே சொன்ன உதாரணங்களில், ஒவ்வொருவரின் பொருளாதார நிலைமை பற்றி ஏதேனும் புரிந்துகொள்ள முடிகிறதா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் புரிந்துவிடும்.
நால்வருக்குப் பதிலாக, ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருந்தால், உற்பத்தியாளர், அநேகமாகப் பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் இருப்பவராகத்தான் இருப்பார். ஏழை விவசாயி, குயவர் ஆகியோர் செல்வந்தர்களா? இல்லை.
இவர்கள் வேலை என்ன?
சரி. இனி, நால்வர் அணியின் செயல்பாடுகளைப் பார்ப்போம்.
முதலில் வருபவர் உற்பத்தியாளர். அதாவது, ‘தொழிலதிபர்'. இவர்தான் ‘முதல்' போடுகிறவர். அதனால் இவர் முதலாளி. இவரால்தான் பொருளாதாரம் உயிர் வாழ்கிறது என்று சொல்பவர்கள் உண்டு.
இவரை மையமாக வைத்து, நகர்கிற பொருளாதாரம், ‘முதலாளித்துவம்'. அதாவது, முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுகிற முறை. இம்முறையின் சாதக பாதகங்கள் என்ன?
சாதகமான சூழல் நிலவுகிறபோது, அதிக அளவில் முதலீடு செய்யப் பலர் முன்வருவார்கள். பல புதிய தொழிற்சாலைகள் உண்டாகும். அதனால் வேலை வாய்ப்பு பெருகும். சந்தைகளில், பணப் புழக்கம் அதிகரிக்கும்.
அதன் விளைவாக, கடைக்கோடி மனிதன் வரை, பணம் சென்று சேரும். பொதுவாக, சமுதாயம், ஒருவித ‘தெம்புடன்' இருக்கும்.
பாதகமும் இருக்கிறது. முதலாளி - தொழிலாளி, ஏழை - பணக்காரன் இடைவெளி கூடும். சுரண்டல் அதிகரிக்கும். உரிமைகள் மறுக்கப்படும். செல்வந்தர், மேலும் செல்வந்தர் ஆவார். ஏழை, மேலும் ஏழை ஆவார்.
முதலாளித்துவத்தின் பாதகங்களை இயன்ற மட்டும் களைந்து, சாதகங்கள் மட்டும் சாமானியர்களைச் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கில், அரசாங்கம் திட்டமிடுகிறது. அதனால்தான், ஒரு புறம் சலுகைகளை அறிவித்து, பெரிய முதலீட்டுடன் தொழில் முனைய வருவோரை ஈர்க்கிறது.
மறுபுறம், பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து, சாமானியர்களின் உரிமைகள் பறிபோகாமல் காக்கிறது.
நாட்டில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர், வேலை தேடித் தெருவுக்கு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் வேலை கிடைக்க வழிவகை காண வேண்டிய பொறுப்பு, அரசுக்கு இருக்கிறது. அரசு மட்டுமே இத்தனை பேருக்கும் வேலை தருவது என்பது, நடைமுறையில் சாத்தியம் இல்லை. வேறு என்னதான் செய்வது?
ஒரு வழி இருக்கிறது. நிதி வைத்திருப்பவர்கள், அதை முதலீடு செய்து தொழில் தொடங்கச் செய்ய வேண்டும். சிறிய கடையாக இருக்கட்டும். மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம் ஆகட்டும். அதன் மூலம் ஏதோ ஒரு வகையில், சிலருக்கேனும் வேலை கிடைக்குமா இல்லையா? அதுதான் முக்கியம். தனியார் துறையை ஊக்குவிப்பதன் மூலம், வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பது பொருளாதார நிபுணர்களின் நம்பிக்கை. சரி. ஒட்டு மொத்தப் பொருளாதார நடவடிக்கைகளில், ஒரு ‘முதலாளி'யின் பங்கு என்ன?
‘தொழில் தொடங்கணும். ஒரு கடை வைக்கணும். ஏதேனும் வியாபாரம் பண்ணணும். அதுக்கு என்ன வேணும்?'. ஏதாவது ஒரு சின்னஞ்சிறிய கிராமத்துக்குச் சென்று, படிப்பு வாசனையே இல்லாத ஒருவரிடம் கேட்டால்கூடச் சட்டென்று பதில் சொல்வார்: ‘பணந்தேன்!'.
(வளரும்)
- தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT