Published : 12 Feb 2016 12:51 PM
Last Updated : 12 Feb 2016 12:51 PM

காதலும் கடந்து போகும்!

ஒரு ஆண் இளைஞனாக இருக்கும்போது, மகளிர் கல்லூரிகளின் வாட்ச்மேனைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். மகளிர் பேருந்துகளின் ஆண் நடத்துந‌ர்கள் மீதும் பயங்கரப் பொறாமையாக இருக்கும். நடிகைகளைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் டைரக்டர்களைப் பார்த்து, காதில் புகை வரும். ஏராளமான பெண் தோழிகள் கொண்ட நண்பர்களைப் பார்த்து, வயிற்றில் எரியும் நெருப்பில் ஒரு நகரத்தையே எரித்துவிடலாம். இந்தப் பொறாமைகளின் மையம் பெண்கள்!

ஏனெனில் இளம் வயதில் ஒரு பெண் என்பவள், ஆணுக்கு அவ்வளவு அபூர்வமான உயிராக இருக்கிறாள். ஒரு தீரா போதையாக இருக்கிறாள். ஒரு ஒற்றைப் பார்வை அவனைக் கவிஞனாக்குகிறது. ஒரு ஒற்றைப் புன்னகை அவனைப் பித்தனாக்குகிறது. ஒரு ஒற்றைக் கேள்வி (சாப்டியா?) அவனைக் காதலனாக்குகிறது. “இந்த ஷர்ட் உங்களுக்கு நல்லாருக்கு” என்று நான்கு வார்த்தைகள், அவனிடம் ஒரு வாழ்நாள் கனவை உருவாக்குகிறது.

அந்தப் பெண்ணை அடைவதற்காக அவன் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறான். ஒரு நிமிடம் பார்ப்பதற்காக நாள் முழுவதும் காத்துக் கிடக்கிறான். கண்ணாடி முன் நீண்ட நேரம் நிற்கிறான் (தாடியை இன்னும் கொஞ்சம் ‘ட்ரிம்' பண்ணியிருக்கலாமோ?). அவளிடம் வாங்கிய பேனாவைத் திருப்பிக் கொடுப்பதற்காக, நாற்பது கிலோமீட்டர் பயணம் செய்து செல்கிறான். “இதுக்கா இவ்ளோ தூரம் வந்த?” என்று சிரிப்பவளிடம், “இப்ப நீ சிரிச்சியா? ஹார்ட்டுக்குள்ள ஒரு கிலோ ஐஸ்கட்டிய வச்சு ஆபரேஷன் பண்ண மாதிரி இருக்கு” என்று கவிதையாகப் பேசுகிறான். டி.வி.யில் காதல் பாடல்கள் பார்த்துக் கிறங்குகிறான். தவிக்கிறான். மிதக்கிறான்.

ஆனால் கடைசியில் அவன் காதல் நிராகரிக்கப்பட்டு, அனைத்தும் பொய்யாய், வெறும் கனவாய் முடியும்போது தகர்ந்துபோகிறான். இந்தச் சூழ்நிலையில் நம்மில் பெரும்பாலானோர் கொஞ்சம் கண்ணீர்... கொஞ்சம் தாடி… கொஞ்சம் குடி... கொஞ்சம் கவிதை… என்று கழித்துவிட்டு, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி இயல்பாக நகர்ந்துவிடுகிறோம். ஆனால் சிலருக்கு அந்த நிராகரிப்பு, மனதில் மாபெரும் வன்மமாக வளர்ந்து, ஆசிட் வீச்சு… கத்திகுத்து… தற்கொலை என்று முடிகிறது.

உலகில் ஆண்டுக்குச் சராசரியாக ஆயிரத்து 500 ஆசிட் வீச்சுகள் நடைபெறுவதாகவும், ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுபவர்களில் 75 முதல் 80 சதவீதத்தினர் பெண்கள் என்றும், இதில் 30 சதவீதத்தினர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த 18 வயதுக்குட்பட்ட ஆசிட் வீச்சுகளுக்குப் பெரும்பாலும் காதல் விவகாரம்தான் காரணம். அதே போல‌ காதலிக்க மறுக்கும் பெண்கள் கொலையும் செய்யப்படுகிறார்கள்.

ஒரு பெண்ணை ஒரு தலையாக உருகி உருகிக் காதலித்துவிட்டு, பின்னர் அவள் தனது காதலை நிராகரிக்கும்போது ஏற்படும் கோபத்தில் நிகழ்த்தப்படும் வன்முறை. காதல் என்பதில் முன் திட்டமிடல் இருக்கக்கூடாது. அதாவது ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு, அவள் அழகாய் இருந்தால் ‘சரி இவளைக் காதலிப்போம்' என்று காதலிக்கக்கூடாது. அல்லது 'நண்பர்கள் அனைவரும் காதலிக்கிறார்கள். நாமும் ஒரு பெண்ணைக் காதலித்தே ஆகவேண்டும்' என்று நினைத்து (தற்காலத் தமிழில் சொல்வதென்றால் ‘கெத்து'க்காக) காதலிப்பதும் கூடாது.

ஒரு ஆணும், பெண்ணும் இயல்பாக நட்புடன் பழகிக்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு கட்டத்தில், அந்தப் பெண்ணின் மனதில் தானாக காதல் அரும்பவேண்டும். ஒரு பூ மீது விடியற்காலை பனி படர்வது போல், மிக மிக இயல்பாக நடக்கவேண்டும். அவ்வாறு காதல் அரும்பிய பெண்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். அவர்கள் நம்மைக் காணும்போது, முதலில் கண்களில் இரண்டு தீபங்களை ஏற்றிக்கொள்வார்கள். பிறகு, புன்னகையில் ஒரு நிலவைக் காட்டிவிடுகிறார்கள். கன்னங்களில் கொஞ்சூண்டு சிவப்பைச் சேர்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட, “ச்சீய்ய்…” என்ற சிறு சிணுங்கலில், அத்தனைக் காதலையும் அவர்களால் சொல்லிவிடமுடியும்.

இப்படி எவ்வித அறிகுறிகளையும் காட்டாத‌ பெண்ணைத் துரத்தி துரத்தி, நம் காதலை அவள் மீது வலிந்து திணிப்பதால் அந்தப் பெண்ணுக்கு உங்கள் மீது வெறுப்பு வளருமே தவிர, சினிமாக்களில் வருவது போல‌ காதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. வேண்டுமென்றால் ஒரு முறை நாகரிகமாக தன் காதலைச் சொல்லிப் பார்க்கலாம். அதை அவர்கள் நிராகரிக்கும் பட்சத்தில், அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை.

காதல் நிராகரிக்கப்படும் ஒரு ஆணின் மனவலியை, ஒரு ஆணாக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு காதல் நிராகரிக்கப்படும்போது, ஒரு ஆணின் ‘நான்’ என்ற சுயம் நிராகரிக்கப்படுகிறது. ஒரு கனவு நிராகரிக்கப்படுகிறது. ஒரு வாழ்க்கை நிராகரிக்கப்படுகிறது. காதல் நிராகரிக்கப்படும் இந்த வலியை எப்படிக் கடந்து வரலாம்?

பொதுவாக வாழ்க்கை என்பதே, நிராகரிப்புகளின் வழியாகத்தான் உருவாகிறது. உலகின் மகத்தான சாதனையாளர்கள் பலரும், ஏராளமான நிராகரிப்புகளை, இழப்புகளை, அவமானங்களைக் கடந்தே சிகரத்தை எட்டியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையில் நாம் கடந்து வந்த நிராகரிப்புகளை நினைத்துப் பார்ப்போம். அந்த நிராகரிப்புகளை எல்லாம் தாண்டித்தான், நாம் இப்போதுள்ள நிலைக்கு வந்திருக்கிறோம். அதேபோல‌ இந்த நிராகரிப்பையும் நம்மால் கடந்து செல்லமுடியும்.

அடுத்ததாக, காதலித்துவிட்டு, பிறகு பெற்றோரின் நெருக்கடியால் பின்வாங்கும் காதலிகளின் மீது வன்முறைகளை ஏவுவதும் தவறு. நமது பெண்கள் இப்போதுதான் சற்றே சுதந்திரமாக, ஆண்களுடன் பழகவும், வெளி உலகத்தில் நடமாடவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் சுதந்திரம் கிடைத்த ஒரு நாட்டில் இருக்கும் அத்தனைக் குழப்பங்களும், தடுமாற்றங்களும் ஒரு பெண்ணிடமும் இருக்கும்.

நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். பெற்றோரின் அழுத்தத்தால் காதலன்களை நிராகரிக்கும் காதலிகள், தம் காதலைத் துறப்பதில்லை. பெற்றோரின் நெருக்கடியால் காதலன்களிடமிருந்து விலகிக்கொள்கிறார்கள், அவ்வளவுதான். எப்படி அவர்களால் முடிகிறது? இதற்கான காரணம் மிகவும் எளிது. பெண்கள் என்பவர்கள், சிறு வயதிலிருந்தே ஆசைகள் அடக்கப்பட்டு, அடக்கப்பட்டு வளர்க்கப்படுபவர்கள். உடையிலிருந்து, வெளியில் சுற்றுவது வரை, பல சமயங்களில் அவர்கள் தங்கள் குடும்பத்தாருக்காகத் தங்கள் ஆசைகளை விட்டுக்கொடுத்தே வளர்கிறார்கள். அதே போல‌ காதலையும் கண்ணீருடன் அவர்களால் விட்டுவிடமுடிகிறது.

இவையன்றி வேறு காரணங்களுக்காகவும் காதலிகள், காதலன்களிடமிருந்து விலகிக்கொள்ளலாம். அது போன்ற தருணங்களில், ஆத்திரத்தில் வன்முறையாகச் சிந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, பின்வருமாறு சிந்திப்போம்:

இளம் வயதில் காதல், பெண் போன்றவை நாம் மிகவும் நேசிக்கும் விஷயங்களாக இருக்கும். இதே போல் நமது கடந்த கால வாழ்க்கையில், நாம் எவற்றையெல்லாம் மிகவும் நேசித்தோம் என்று யோசித்துப் பாருங்கள். பத்து வயதில் பம்பரம் விடுவதே வாழ்க்கை என்று திரிந்திருப்போம். நாம் விட்ட பட்டம், தந்திக் கம்பத்தில் சிக்கிக் கிழிந்தபோது கண்ணீர் விட்டிருப்போம். விடலைப் பருவத்தில், ஒரு மொக்கைத் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக வரிசையில் நின்று நசுங்கி, மூச்சுத் திணறியிருப்போம். ஒரு முட்டை பரோட்டோ சாப்பிடுவதற்காக, மூன்று கி.மீ. சைக்கிளை மிதித்துக்கொண்டுச் சென்றிருப்போம்.

ஆனால் 25 வயதில் யோசிக்கும்போது இந்த பம்பரம், பட்டம், முட்டை பரோட்டா இவை எல்லாமே மிகவும் சாதாரண விஷயங்கள். அது போல‌ இளம் வயதில் காதலும், அதன் இழப்பும் மிகவும் முக்கியமான விஷயங்களாகத் தோன்றும். இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகள் கழித்து ஒரு பம்பரம் போல், ஒரு பட்டம் போல் அதுவும் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடக்கூடும்.

எனவே உங்கள் காதல் நிராகரிக்கப்படும் போது, பெண்களின் மீது வன்முறையைச் செலுத்தாதீர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டு விலகிவிடவும். காதல், வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதுவே வாழ்க்கை அல்ல. சிறிது காலம் கடினமாகத்தான் இருக்கும். அத்தருணத்தில் முடிந்த அளவு தனியாக இருப்பதைத் தவிர்க்கவும். பெற்றோரின் பிரியத்தில் உங்கள் காதல் தோல்வியின் வலியைத் தணிக்கவும். நண்பர்களுடன் வெளியூருக்குப் பயணம் செல்லுங்கள். நல்ல இசையைக் கேளுங்கள். நல்ல திரைப்படங்களைப் பாருங்கள். நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.

உங்கள் வாழ்க்கையின் லட்சியம், நிச்சயம் ஒரு பெண்ணைக் காதலிப்பதாக இருந்திருக்காது. வேறு ஏதேனும் ஒன்றுதான் உங்கள் லட்சியமாக இருக்கும். அந்த லட்சியத்தை நோக்கி உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள். அதில் நீங்கள் தீவிரமாகப் பயணிக்கும்போது, பயணத்தின் இடையில் வந்த ஒரு பேருந்து நிறுத்தம் போல், காதலும் கடந்து போகும்.



ஒருவரைப் பிடிக்கக் காரணம் இருக்கும்...

மனநல மருத்துவர் தகவல்

அரசு ஸ்டான்லி மருத்துவமனை மனநல மருத்துவத்துறையின் முன்னாள் பேராசிரியரும், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநல மருத்துவருமான ஜி.எஸ்.சந்திரலேகா ‘கண்டவுடன் காதல்' எவ்வளவு தூரத்துக்கு சரிவரும் என்பதைச் சொல்கிறார்:

ஒரு ஆணையோ, பெண்ணையோ பார்த்தவுடன் ஒருவருக்குப் பிடித்துப் போவதற்கு ஏதாவது ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். காரணம் இல்லாமல் யாரையும் பிடிக்காது. பார்த்தவுடன் பிடித்தது என்பதற்காகக் காதலிப்பது, ஆபத்தில் முடியும். அதுபோன்ற காதல் பெரும்பாலும் தோல்வியில் முடியும். இருவரும் கொஞ்சம் பழக வேண்டும். ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதன்பின் காதலித்தால் நல்லது. அப்போதுதான் காதல் தோல்வியில் முடியாது. திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். காதலுக்கு வயது முக்கியமில்லை என்றாலும், 21 வயதுக்குப் பிறகு காதலிப்பது சிறந்தது. அழகு தோற்றத்தில் இல்லை. மனசுதான் உண்மையான அழகு. இதனை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

- சி.கண்ணன்

- கட்டுரையாளர் சிறுகதை எழுத்தாளர்.
இவரின் ‘ஆண்கள்' சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.
தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x