Published : 31 Aug 2021 03:33 AM
Last Updated : 31 Aug 2021 03:33 AM
நூற்றாண்டைக் கடந்த ஒலிம்பிக், அரை நூற்றாண்டைக் கடந்த பாராலிம்பிக் வரலாற்றில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பிரம்மாண்ட சாதனையைப் படைத்திருக்கிறார் இந்திய வீராங்கனை பவினாபென். ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் நிகழ்வுகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இதுவரை ஒரு பதக்கம்கூட இந்தியா வென்றதில்லை என்ற குறையைப் போக்கியிருக்கிறார் பவினா. டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் இவர்.
அதிரடி முன்னேற்றம்
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் எப்போதுமே சீனா ஆதிக்கம் செலுத்தும். முதல் சுற்று போட்டியிலேயே உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் ஹோ யிங்கை எதிர்த்து பவினா விளையாடினார். தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் பவினா, இந்தப் போட்டியில் 0-3 என்ற தோல்வியைத் தழுவினார். ஆனால், அதன் பிறகு பவினா எழுச்சி பெற்றார். இரண்டாவது சுற்றுப் போட்டி, காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதிச் சுற்று, அரையிறுதிச் சுற்று எனத் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் அதிரடியாக விளையாடி அழுத்தமாக வெற்றியைப் பதிவுசெய்தார் பவினா.
இதில் காலிறுதிச் சுற்றில் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் செர்பியாவின் பெரிக் ரான்கோவிக்கையும், அரையிறுதிச் சுற்றில் தரவரிசையில் மூன்றாம் இடத்திலிருக்கும் சீனாவின் ஜாங் மியாவோவையும் தோற்கடித்தார் பவினா. இதன்மூலம் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் வீராங்கனையானார் பவினா. தரவரிசையில் பின்னனியில் உள்ள பவினா, முன்னணி வீராங்கனைகளை அநாயாசமாகத் தோற்கடித்ததன் மூலம், இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என நாடே எதிர்பார்த்தது.
முடங்காத வாழ்க்கை
முதல் சுற்றுப் போட்டியில் யாரை எதிர்த்து விளையா டினாரோ, அதே வீராங்கனையை எதிர்த்துதான் இறுதிச் சுற்றிலும் விளையாடினார். ஆனால், நம்பர் ஒன் வீராங்கனையான ஹோ யிங், பவினாவை மீண்டும் 0-3 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார். இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் பவினா வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதித்திருக்கிறார். தற்போதைய இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தீபா மாலிக், 2016 ரியோ ஒலிம்பிக்கில் குண்டெறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்குப் பிறகு பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை பவினாபென்தான்.
குஜராத்தைச் சேர்ந்த பவினா, 12 மாதக் குழந்தையாக இருந்தபோது போலியா நோயால் பாதிக்கப்பட்டவர். அந்தக் கொடூர நோய் பவினாவை முடக்கிப் போட்டது. ஆனால், வீல்சேரே வாழ்க்கை என்று வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், கணினி படிப்பில் ஆர்வம் காட்டி படித்துவந்தார். 2004-ஆம்ஆண்டில் பயிற்சியாளர் லாலா தோஷியைச் சந்தித்த பிறகுதான் டேபிள் டென்னிஸ் விளையாட்டு அவருக்கு அறிமுகமானது. ஐந்தே ஆண்டுகளில் இந்த விளையாட்டில் படிப்படியாக முன்னேறி, 2009-ஆம்ஆண்டில் சர்வதேச போட்டியில் அறிமுகமானார் பவினா.
2011 தாய்லாந்து பாரா ஓபனில் வெள்ளி, 2013 பாரா ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, 2015 தாய்லாந்து பாரா ஓபனில் வெண்கலம், 2017 பாரா ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம். 2019 பாங்காங் பாரா ஓபனில் தங்கம், 2020 எகிப்து பாரா ஓபனில் தங்கம் எனப் பதக்கங்களை அள்ளிய பவினா, முத்தாய்ப்பாக தற்போது பாராலிம்பிக்கிலும் வெள்ளி வென்று, டேபிள் டென்னிஸ் பயணத்தில் புதிய மைல்கல்லைக் கடந்திருக்கிறார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT