Last Updated : 26 Feb, 2016 12:10 PM

 

Published : 26 Feb 2016 12:10 PM
Last Updated : 26 Feb 2016 12:10 PM

ஆக்டராகும் சேட்டை!

‘சேட்டை' சேது பேரைச் சொன்னா மதுரையே சும்மா அதிரும்! தனியார் பண்பலை நிறுவனங்கள் மதுரையில் காலூன்றியபோது முதன் முதலில் ஒலித்தது சேதுவுடைய குரல்தான். அந்தக் குரல் ஒன்பதாவது ஆண்டாக மதுரையை ஆண்டு கொண்டிருப்பதில் அதிசயம் ஏதுமில்லை. எல்லோருக்கும் பேச்சில் நகைச்சுவை இழையோடினால், இவருக்கு நகைச்சுவையில்தான் பேச்சே இழையோடும்.

சூரியன் எஃப்.எம்.மில் தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ‘செம காமெடி’யும், 5 மணி முதல் 7 மணி வரை ‘செம ரகளை’யும் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

‘அதுக்கென்ன இப்போ'ன்னு கேட்கிறீர்களா? ‘மிர்ச்சி’ சிவா தொடங்கி செந்தில், பாலாஜி, மா.கா.பா. ஆனந்த் என அடுத்தடுத்து ‘எஃப்.எம். டு சினிமா' சென்ற ‘ஆர்.ஜே.'க்களின் லிஸ்டில் ‘சேட்டை' சேதுவும் இணைகிறார்.

ஆமாங்க, இவரும் இப்போ ஆர்.ஜே. டு ஆக்டர்! இன்னும் சில‌ வாரங்களில் வெளியாக உள்ள ‘இறைவி’ படத்தில் அறிமுகமாகிறார் சேது.

‘ஏதாவது காமெடி கேரக்டர் போல' என்று நினைத்தபடியே, படத்தின் ஸ்டில்ஸைப் பார்த்தால்... ‘ஷாக்'! ‘நான் கடவுள்’ பட ஆர்யா, கருப்பா பயங்கரமா இருந்தா எப்பிடியிருக்கும்? அப்பிடியிருந்தார் சேது.

“ஏம்ணே இப்பிடி?” என்று கேட்டால், சிரித்துக்கொண்டே சொன்னார், “படத்துல அண்ணன் கேரக்டர்ணே. அதாம் கெட்டப் சேஞ்ச்!” என்கிறார்.

இந்த கெட்டப்ல எப்படிண்ணே மதுரைக்குள்ள திரிஞ்சீங்க?

அட அதை ஏன் கேட்கிறீங்க? ஆபீஸ்ல என்னைய பார்க்கிறவங்கள்ல பாதிப் பேரு நான் அய்யப்பனுக்கு மாலை போட்டிருக்கிற‌தா நினைச்சிக்கிட்டு, ‘வணக்கம் சாமி’ன்னு சொல்லி வெறுப்பேத்துனாங்க. இன்னும் சில பேரு ‘என்ன சேது உடம்பு சரியில்லையா? ரெண்டு நாளைக்கு லீவு போட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வாயேன்’ன்னாங்க!

அந்தப் படத்தைப் பத்திச் சொல்லுங்களேன்..?

ரொம்ப வித்தியாசமான படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யான்னு மூணு ஹீரோ. படத்துல நகைச்சுவை நடிகர் கருணாகரனுக்கு அண்ணனா நடிச்சிருக்கேன்.

எஃப்.எம். அனுபவங்களைச் சொல்லுங்க...

ஒரு ஷோவுல ‘கால்' பண்ற நேயர்கள்ட்ட‌ பூராம் ‘நீங்க எப்பிடித் தூங்குவீங்க'ன்னு கேட்டேன். திடீர்னு ஒரு பொண்ணு, ‘சேட்ட சேதுவ கெட்டிப் பிடிச்சிக்கிட்டு தூங்குவேன்’னு சொல்லிடுச்சி. லைவ் நிகழ்ச்சிங்கிறதால ஒரு மாதிரியா சமாளிச்சேன். அடுத்த கால்ல அந்த அம்மாவோட புருஷன். ‘இப்ப போன் போட்ட பொண்ணு பேரு என்ன? என் ஒய்ஃப் குரல் மாதிரியே இருந்துச்சு. அவளுக்கும் உனக்கும் எப்பிடிப் பழக்கம்’ன்னு துருவித்துருவி கேட்டாரு. ‘அம்மா சத்தியமா அந்தப் பொண்ணு யாருன்னே தெரியாதுண்ணே’ன்னு சொல்லித் தப்பிச்சேன்.

ஒரு பொண்ணு ‘கட்டுனா சேதுவத்தாம் கட்டுவேன்’னு ஒத்தக்கால்ல நின்னாளாம். அந்தப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு அவங்க அம்மா, ஆபீஸ்க்கு வந்திட்டாங்க. ‘எம் பொண்ணுக்கு அறிவுரை சொல்லுங்க தம்பி’ன்னு சொல்லிட்டுப் பக்கத்துலேயே உட்கார்ந்துக்கிட்டாங்க. அப்புறம் என்ன, கவுண்டமணி மாதிரி, ‘நான் ஒரு கேப்மாரிம்மா, நான் ஒரு மொள்ளமாரி’ன்னு என் பெருமைய என் வாயாலேயே சொன்னேன். ‘இனிமே அம்மா பேச்ச கேட்கிறேன்’னு அந்தப் பொண்ணு சொன்னதும், 'நம்ம வார்த்தைக்கு இவ்வளவு மரியாதையா'ன்னு சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, போகும்போது ‘பை... அண்ணா’ன்னு சொன்னதத்தாம் என்னால ஜீரணிக்க முடியல.

ஒரு நாள் ஒரு போலீஸ்காரர் போன் போட்டு வஞ்சிப்புட்டாரு. யோவ் ஸ்டேஷன்ல ஒரு அக்யூஸ்ட்டை போட்டு அடிக்கிறேன். அவன் எஃப்.எம்.ல உன் பேச்சைக் கேட்டுட்டு ‘கெக்கே பிக்கே'ன்னு சிரிக்கிறான். எல்லாத்துக்கும் காரணம் நீதான்யா. லூசு மாதிரி சிரிக்கிறத நிப்பாட்டுய்யான்னு வஞ்சிப்புட்டாரு. ஆனாலும், அவரும் என் ரசிகர்தான்.

முதல்ல சினிமா, அப்புறம் ஹீரோ, அப்படியே சிஎம்... வாழ்த்துகள் சேது.

நான் சிரிக்கிறதப் பார்த்துட்டு, ‘எப்படிங்க எப்பப் பார்த்தாலும் சந்தோஷமாவே இருக்கீங்க. உங்களுக்கெல்லாம் கஷ்டமே வராதா? உங்க வீட்ல எல்லாம் யாருக்கும் உடம்பு சரியில்லாமலே போகாதா'ன்னு கேட்பாங்க சில பேரு. நீங்க கேட்கிறதும் அப்பிடித்தாம் இருக்கு. என்னைய நம்பி 2 பொண்டாட்டியும், ஒரு பிள்ளையும் இருக்காங்க. அய்யய்யோ உளறிட்டேன், ஒரு பொண்டாட்டியும், 2 குழந்தைங்களும் இருக்காங்க.

சாகுற வரைக்கும் ஆர்.ஜே.வா இருக்கணும். இப்பிடியே சிரிச்சிக்கிட்டே, மத்தவங்கள சிரிக்க வெச்சுக்கிட்டே இருக்கணும் அதுதான் என் ஆசை. ஆனால், ஒரு படத்தையாவது இயக்கணுங்கிற ஆசையும் இருக்கு. பேட்டி போதும் நீங்க கௌம்புங்க... பெரிய கும்பிடு போடுகிறார் சேது.

மதுரை மாவட்ட குக்கிராமம் ஒன்றில் பிறந்த சேது, ஒரு மாற்றுத் திறனாளி. மனதிலோ, குடும்பத்திலோ அந்தக் குறை எதிரொலிக்காமல் தன் சிரிப்பொலியால் சாதித்துக்கொண்டிருக்கிறார் சேது.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x