Published : 17 Aug 2021 03:14 AM
Last Updated : 17 Aug 2021 03:14 AM
இந்தியா சுதந்திரமடைந்து 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டது. இந்தச் சுதந்திரம் சும்மா கிடைத்துவிடவில்லை. நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்கள் கணக்கில் அடங்காதவர்கள். அவர்களில் இளம் வயதிலேயே விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்தவர்களும் உண்டு. அவர்களில் சிலரைப் பற்றிய தொகுப்பு இது:
குதிராம் போஸ்
ஒரு மனிதன் நீண்ட ஆயுளோடு வாழ்வது பெருமையல்ல; எப்படி வாழ்ந்தான் என்பதே பெருமை. அந்த வகையில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடி 18 வயதிலேயே தூக்கு மேடை ஏறியவர் வங்கத்துச் சிங்கம் குதிராம் போஸ். மிட்னாபூரில் 1889ஆம் ஆண்டில் பிறந்த குதிராம் போஸ், சிறுவயதிலிருந்தே நாட்டுப் பற்றோடு வளர்ந்தார். 13 வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். ‘யுகாந்தர்’ என்கிற புரட்சிக்குழுவில் இணைந்து பிரிட்டிஷ் காவல் நிலையங்களைத் தெறிக்கவிட்டார்.
பிரிட்டிஷாருக்குப் பாடம் புகட்ட, மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்ட் மீது குண்டு வீசினர். ஆனால், அந்த வாகனத்தில் கிங்ஸ்போர்டுக்குப் பதில் வந்த வழக்கறிஞர் குடும்பத்தோடு உயிரிழந்தார். இந்த வழக்கில் குதிராம் போஸுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1908 ஆகஸ்ட் 11 அன்று குதிராம் போஸ் முசாபர்பூர் சிறையில் ‘வந்தே மாதரம்’ என்று முழங்கியபடி தூக்கு மேடை ஏறினார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மிக இளம் வயதில் இன்னுயிரை ஈந்தவர் குதிராம்போஸ்.
மங்கள் பாண்டே
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் எனப்படும் சிப்பாய்க் கலகத்துக்குக் காரணமானவர் மங்கள் பாண்டே. 1827இல் உத்தர பிரதேசத்தில் நாக்வார் கிராமத்தில் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் இவர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைப்பிரிவில் பணியாற்றிய அவரை மாற்றிய நிகழ்வு நடந்தது.
கொல்கத்தா பாரக்பூரில் 34ஆவது படைப்பிரிவில் புதிய துப்பாக்கிகள் வீரர்களுக்கு வழங்கப்பட்டன. அதன் தோட்டாக்களில் விலங்குகளின் கொழுப்பு தடவப்பட்டது. இது மத நம்பிக்கையைச் சீண்டும் விதமாக இருந்ததால், பெரும் கலகம் வெடித்தது. இதை முன்னின்று நடத்தியவர் மங்கள் பாண்டே. இக்கலகத்தில் அவர் ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றார். பெரும் போராட்டத்துக்குப் பிறகு சுட்டுப்பிடிக்கப்பட்ட மங்கள் பாண்டே, பிறகு தூக்கிலிடப்பட்டார். மங்கள் பாண்டே உயிரிழந்தபோது அவருக்கு 29 வயதுதான். ஆனால், இந்தக் கலகம் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
ராணி லட்சுமி பாய்
ஜான்சி ராணி லட்சுமி பாய், முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தளகர்த்தர். சிறு வயதிலேயே தாயை இழந்தாலும் வாள்வீச்சு, குதிரையேற்றம் என வீரப்பெண்ணாக வார்க்கப்பட்டார். 1842இல் ஜான்சி என்கிற பகுதியை ஆண்ட மன்னர் கங்காதர ராவுடன் அவருக்குத் திருமணம் நடந்தது. 1851இல் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தை நான்கு மாதங்களிலேயே இறந்ததால், தன் உறவினரின் குழந்தையைத் தத்தெடுத்தார். அப்போது அவருடைய கணவரும் இறந்தார். மன்னரின் வாரிசாகத் தத்துக் குழந்தையை பிரிட்டிஷார் ஏற்க மறுத்ததால், லட்சுமி பாயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு 1857ஆம் ஆண்டில் லட்சுமி பாயின் படைக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே போர் வெடித்தது. இப்போரில் தத்துக் குழந்தையை முதுகில் சுமந்தபடி அவர் போர் புரிந்தது வரலாற்றின் பக்கங்களில் அவருடைய துணிச்சலையும் வீரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்போரில் அவர் இறுதி மூச்சை சுவாசித்தார். 1857 ஜூனில் உயிரிழந்தபோது அவருக்கு 30 வயதுதான்!
வாஞ்சிநாதன்
வட இந்தியாவில் குதிராம் போஸ் செய்ததைப் போலவே தென்னிந்தியாவில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அந்தச் சம்பவத்தை நடத்திக்காட்டியவர் வாஞ்சிநாதன். 1911ஆம் ஆண்டு ஜூன் 17 அன்று திருநெல்வேலி ஆட்சித் தலைவராக இருந்த ஆஷ், கொடைக்கானலில் படித்துக்கொண்டிருந்த தன்னுடைய குழந்தைகளைச் சந்திக்க மனைவியுடன் ரயிலில் புறப்பட்டார். மணியாச்சி ரயில் நிலையம் வந்தபோது, ஆஷ் இருந்த ரயில் பெட்டிக்குள் ஏறி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் வாஞ்சிநாதன். அதே ரயில் நிலையத்தில் அவரும் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். வ.உ.சிதம்பரனார், பாரதியாரின் பேச்சுகளைக் கேட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் வாஞ்சிநாதன். வ.உ.சி.யையும் சுதேசிக் கப்பலையும் அழிக்க பல தொல்லைகளை அளித்த ஆஷைச் சுட்டுக்கொன்றார் வாஞ்சிநாதன். வேறு காரணத்துக்காக ஆஷை கொன்றார் என்று கூறுவோரும் உண்டு. இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மட்டுமே போராடுவார்கள்; அதிகாரிகளின் உயிருக்கு ஊறுவிளைவிக்க மாட்டார்கள் என்று பிரிட்டிஷார் எண்ணியதை இச்சம்பவம் மாற்றியது. வாஞ்சிநாதன் உயிரிழந்தபோது 25 வயதுதான்.
வேலு நாச்சியார்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இளம் வயதிலேயே போராடிய முதல் தமிழ்ப் பெண், வேலு நாச்சியார். 1730ஆம் ஆண்டில் பிறந்த வேலு நாச்சியார் வீரப்பெண்ணாகவே வளர்ந்தார். அவருக்கு 16 வயதில் முத்துவடுகநாதருடன் திருமணம் நடந்தது. முத்துவடுகநாதர் 1750இல் சிவகங்கை அரசரானார். 1772இல் அவர் ஆர்க்காடு நவாப்புக்குக் கப்பம் கட்ட மறுத்ததால், பிரிட்டிஷாரும் நாவாப்பும் போர் தொடுத்தனர். போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார். கணவனை இழந்த துயரத்திலும் தன் நாட்டை மீட்டெடுக்க சபதம் செய்துவிட்டு அங்கிருந்து வேலு நாச்சியார் வெளியேறினார். சில காலம் கழித்து ஹைதர் அலி, மருது சகோதரர்கள் உதவியுடன் பிரிட்டிஷ் மற்றும் நவாப் படைகளை எதிர்த்துப் போரில் குதித்தார். தீரத்தோடு போராடிய வேலு நாச்சியார், எட்டு ஆண்டுகள் கழித்து சிவகங்கையை மீட்டார். 18ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நிலையாக ஆட்சியில் இருந்த ஒரே அரசி வேலு நாச்சியார்தான்.
திருப்பூர் குமரன்
தேசியக் கொடிக்கு இழுக்கு ஏற்படாமல் உயிர்த் தியாகம் செய்தவர் திருப்பூர் குமரன். 1904இல் பிறந்த குமரனின் சொந்த ஊர் ஈரோட்டில் உள்ள சென்னிமலை. வேலை தேடி திருப்பூருக்கு இடம்பெயர்ந்தது அவருடைய குடும்பம். குமரனுக்கு காந்தியின் கொள்கைகள் பிடித்துப்போக, காங்கிரஸில் சேர்ந்தார். அந்நியத் துணி எரிப்பு, கள்ளுக்கடை மறியல் எனப் பல போராட்டங்களில் பங்கேற்றார். இதற்காக திருப்பூரில் ‘தேசபந்து வாலிபர் சங்க’த்தை நிறுவினார். சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டபோது தமிழ்நாட்டில் பல இடங்களில் அறவழிப் போராட்டங்கள் நடைபெற்றன. திருப்பூரில் போராட்டத்தில் பங்கேற்கத் தேசியக் கொடியைக் கையில் ஏந்திச் சென்றதுபோது குமரனைக் காவலர்கள் தடிகொண்டு தாக்கினர். தேசியக் கொடியைப் பறிக்க முயன்றபோது அதை விட்டுக்கொடுக்காமல் வந்தே மாதரம் என முழங்கினார். காவலர்கள் மீண்டும் தலையில் தாக்க, தரையில் சரிந்தார். திருப்பூர் குமரன் இறந்தபோது அவருக்கு 28 வயது. இந்த உயிர்த் தியாகம் ஏராளமான இளைஞர்களைச் சுதந்திரப் போராட்டத்துக்குள் கொண்டுவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT