Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM
விளையாட்டுப் பிரியர்களைக் கட்டிப் போட்டிருந்த டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா முடிந்துவிட்டது. இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக அதிகபட்சமாக 7 பதக்கங்களுடன் நாடு திரும்பியுள்ளனர் வீரர், வீராங்கனைகள். இந்த ஒலிம்பிக்கில் சாதித்தவர்களும் நம்பிக்கை அளித்தவர்களும் யார்?
பளு தூக்குதல்
ஒலிம்பிக்கில் முதல் நாளையே அமர்க்களமாகத் தொடங்கி வைத்தவர் மீராபாய் சானு. ஒலிம்பிக்கில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு எனப் பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனை. அதில் வெள்ளியும் வென்று கொடுத்த மங்கை. சிட்னி ஒலிம்பிக்கில் கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு இப்பிரிவில் கிடைத்துள்ள பதக்கம் இது. ரியோ ஒலிம்பிக்கில் மூன்று முறையும் பளுவை தூக்க முடியாமல் போட்டியிலிருந்து வெளியேறியவர். இதனால் ஏற்பட்ட விமர்சனங்களால் விளையாட்டிலிருந்து விலக நினைத்தவர், இன்று விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றியை அடைந்திருக்கிறார்.
ஆடவர் ஹாக்கி அணி
பழம்பெருமைகளைக் கொண்டது நம் ஹாக்கி வரலாறு. ஒவ்வொரு முறையும் தொடர்ந்த ஏமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என்று தேசமே எதிர்பார்க்கும். அந்த எதிர்பார்ப்பு 41 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது. வெண்கலம் வென்றதன் மூலம் ஹாக்கி வரலாற்றை மீட்டெடுத்திருக்கிறது ஆடவர் அணி. ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் சிங் 6 கோல்கள் அடித்து அசத்தினார். வெண்கலத்துக்கான போட்டியில் பெனால்டி கார்னர்களைப் பெருஞ்சுவராக நின்று தடுத்து, அணியின் ஒட்டுமொத்த உழைப்பையும் காப்பாற்றி ஹீரோவானார் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்.
மல்யுத்தம்
கடந்த 20 ஆண்டுகளாகவே மல்யுத்தத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது இந்தியா. இந்த முறை வினேஷ் போகத், தீபக் பூனியா, பஜ்ரங் பூனியா ஆகியோர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. இதில் யாருமே எதிர்பார்க்காத ரவிக்குமார் அட்டகாசமாக விளையாடி வெள்ளியும், பஜ்ரங் பூனியா வெண்கலமும் வென்று இந்திய மல்யுத்தத்துக்கு மீண்டும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். வினேஷ் போகத், தீபக் பூனியா பதக்கங்களை வெல்லாவிட்டாலும் இருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தவறவில்லை.
குத்துச்சண்டை
ஒலிம்பிக்கில் ஒவ்வொரு முறையும் பதக்கம் எதிர்பார்க்கப்படும் பிரிவு இது. இப்பிரிவில் லவ்லீனா போர்கோஹெய்ன் மட்டும் வெண்கலம் வென்று நம்பிக்கை அளித்தார். பூஜா ராணி, சதீஷ்குமார் ஆகியோர் காலிறுதியில் தோற்றாலும், கடும் உழைப்பை வெளிப்படுத்தினார்கள். பதக்கம் நிச்சயம் என எதிர்பார்க்கப்பட்ட மேரிகோம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தது ஜீரணிக்க முடியாமல் போனது.
பாட்மிண்டன்
பாட்மிண்டனில் 3 ஆண்கள், 1 பெண் என நால்வர் பங்கேற்றபோதும், நாடே எதிர்பார்த்தது பி.வி.சிந்துவைத்தான். ரியோவில் ‘விடிவெள்ளி’யாக இருந்தவர், டோக்கியோவில் ‘சொக்கத்தங்க’மாக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. காலிறுதி வரை 4 போட்டிகளில் ஒரு செட்டைக்கூட இழக்காமல், நேர் செட்டுகளில் தனக்கு எதிரான வீராங்கனைகளைத் திணறடித்தார் சிந்து. அரையுறுதியில் தோல்வியடைந்தாலும், வெண்கலத்துக்கான போட்டியில் வென்று, நாட்டின் கனவையும் நம்பிக்கையையும் நிஜமாக்கினார். மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலம் என இரு பதக்கங்களை வென்ற வீராங்கனையாக ஜொலிக்கிறார் பி.வி. சிந்து.
தடகளம் - ஈட்டி எறிதல்
ஒலிம்பிக்கில் தடகளம் எப்போதுமே இந்தியாவுக்குத் தடுமாற்றம்தான். ஆனால், இந்த முறை ஈட்டி எறிதலில் நீரஜ்சோப்ரா மீது ஒரு கண் இருந்தது. எப்போதுமே அசால்ட்டாக 85 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறியும் திறன் கொண்டவர் நீரஜ். தகுதிச் சுற்றிலேயே 86.65 மீ. வீசி முதலிடம் பிடித்து நம்பிக்கையூட்டினார். அதனால், பதக்கக் கனவு அதிகரித்தது. அதை ஏமாற்றாமல் இறுதிச் சுற்றில் 87.58 மீ. வீசி களத்தையே கதிகலங்க வைத்தார். சுதந்திர இந்திய வரலாற்றில் தடகளத்தில் முதல் பதக்கம், அதுவும் தங்கப் பதக்கம் இது. தடகளத்தில் மில்கா சிங், பி.டி.உஷா ஆகியோர் நூலிழையில் தவறவிட்ட பதக்கத்தை வென்று தேசத்தின் கனவை நனவாக்கிய நாயகனாகியிருக்கிறார் நீரஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT