Published : 05 Feb 2016 11:46 AM
Last Updated : 05 Feb 2016 11:46 AM
உலகளவில் சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 2013 தரவுகளின் படி, இந்திய மாநிலங்களில் சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. மிக முக்கியமான சமூக பிரச்சினையான இதைப் பற்றி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது ‘24 ஹவர்ஸ்’ ஆவணப்படம். ‘எகம்பன் புரொடக்ஷன்ஸ்’ தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ஆர். சுரேந்திரன் இயக்கியிருக்கியிருக்கிறார்.
நாற்பது நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படத்தில் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான பின்னணி காரணங்கள், அவற்றை தடுப்பதற்கான தீர்வுகள் போன்றவை அலசப்பட்டிருக்கின்றன.
முழுநீள ஆவணப்படமாக இல்லாமல் குறும்பட பாணியில் சில அம்சங்களை இணைத்திருப்பது படத்தை சற்று சுவாரஸ்யமாக்கியிருக்கிறது. சாலை விபத்துகளில் இருசக்கர வாசன ஓட்டிகளே ஏன் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு இந்த ஆவணப்படம் பதிலளிக்கிறது. ஆவணப்படமெடுக்கும் மாணவி,போக்குவரத்துத் துறை காவல் ஆணையர் என இரண்டு கதாபாத்திரங்கள் மூலம் சாலை விபத்துகளுக்கான காரணங்களை அலசியிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.
அத்துடன், அடிப்படை சாலை விதிகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் செய்ய வேண்டிய விஷயங்கள் போன்றவை இந்தப் படத்தில் கிராஃபிக்ஸில் விளக்கப்பட்டிருக்கிறது. சாலை விபத்தால் பாதிக்கப்படுபவர்கள் வாகன காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவற்றை எப்படி பெறலாம் என்பதற்கான விடைகளையும் இந்தப்படம் அளிக்கிறது. இது தவிர, இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் உளவியல் நிபுணரின் கருத்துகள், சாலை விபத்துகள் ஏற்படுவதற்குப் பின்னால் இருக்கும் மக்களின் மனோபாவத்தைப் பதிவுசெய்கிறது.
இளைஞர்கள் ஏன் அதிகமான விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள், மக்களின் அவசரகதியான நகர வாழ்க்கைக்கும் சாலை விபத்துகளுக்கும் இருக்கும் தொடர்பு என பல முக்கியமான பிரச்சினைகள் மீது இந்த ஆவணப்படம் வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
இளமை திரை
‘இளமை திரை’ பகுதியில் உங்கள் ஆவணப்படமும், குறும்படமும் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் டிவிடிக்களை அனுப்ப வேண்டிய முகவரி - இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: ilamaiputhumai@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT