Published : 20 Nov 2015 01:24 PM
Last Updated : 20 Nov 2015 01:24 PM

உறவுகள்: வாழ்க்கை அழகாக... எண்ணங்கள் ‘போஸ்டர் ஆக!

அம்மா, நான் ஒரு கல்லூரி மாணவி. என் வ‌யது 21. இரண்டு மாதங்களுக்கு முன்னால் என் அப்பா இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை.

அம்மா இருந்தாலும், அப்பாவின் அளவுக்கு என் மேல் பாசம் காட்டுவதில்லை. எதற்கெடுத்தாலும் என்னைக் குறைசொல்லிக் கொண்டேயிருப்பார். எப்போதும் எனக்கு என் அப்பாவின் ஞாபகமே வந்துகொண்டிருக்கிறது. இதனால் இரவுகளில் நான் அழுதுகொண்டேயிருப்பேன்.

இதற்கிடையில், என் அக்காவும் அவருடைய கணவருடன் சண்டையிட்டு புகுந்த‌ வீட்டை விட்டு வந்துவிட்டார். எங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். ஆனால் அவர் எங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

மேலும், நான் வேறு மிகவும் ஒல்லியாக இருக்கிறேன். இதனால் கல்லூரியிலும் மற்ற உறவினர்களின் வீடுகளிலும் நான் கேலிக்கு உள்ளாகிறேன். 'நான் ஒல்லியாக இருப்பது எனக்குப் பிரச்சினையல்ல' என்று என் மனம் கூறினாலும், என்னுடைய வயது அதனை ஏற்றுக்கொள்வதில்லை.

இதனால் படிப்பு, வீட்டு வேலை உள்ளிட்ட எந்தப் பணிகளிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. இதிலிருந்து மீள்வதற்கு எனக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்கள் அக்கா.

தோழி, உங்களிடம் ஏற்கெனவே இருந்த எதிர்மறை எண்ணங்களைத் தந்தையின் இழப்பு தூண்டிவிட்டிருப்பதால், மனச்சோர்வடைந்திருக்கிறீர்கள். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றுதான். ஆனால் துக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு வாழும் அளவுக்கு நாளடைவில் பாதிப்பு குறைய வேண்டும். அப்பாவைப் பற்றி தோழிகளிடம் பேசுவதும் எழுதுவதும் மனபாரத்தைக் குறைக்கும்.

இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்கள் ஒல்லியாக இருப்பதுதான் ஃபேஷன்! ஒருவேளை உங்கள் உடம்பு பென்சில் மாதிரி, இருக்கிறதோ? அப்படியென்றால் உடற்பயிற்சிகள், தகுந்த உள்ளாடைகள் போன்றவை உடல் வளைவுகளைக் கூட்ட உதவும். இந்தப் பரிந்துரை, நீங்கள் உங்களைக் குறைத்து எடைபோடாமல் இருக்கவேயன்றி ‘பாய் ஃப்ரெண்ட்'டைக் கவர அல்ல!

பரிதவிக்கும் இந்த நேரத்தில் தோழிகள் ஆதரவாக இருந்தாலும், ஒரு ஆணின் ஆறுதலுக்காக மனம் ஏங்கலாம். எச்சரிக்கை தேவை. நலிந்த மனம், தவறான ஆணைத் தேர்ந்தெடுத்துவிடும். இன்னொரு பிரச்சினையாக அது உருவெடுத்தால், உங்களால் சமாளிக்க முடியாது. உங்கள் மனதில் ஓடும் எண்ணங்களை (உணர்வுகளை அல்ல) ஒரு வாரம் கவனித்து எழுதுங்கள். ஒரு சில எதிர்மறை எண்ணங்களே திரும்பத்திரும்ப வருவதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!

இப்படி இவை மண்டிக்கிடந்தால் மனச்சோர்வு ஏன் வராது? மனதில் உள்ள ஒட்டடைகளை அப்புறப்படுத்துங்கள். எப்படி? உங்களை வளப்படுத்தும் எண்ணங்களை அழகான ‘போஸ்டரா'கச் செய்து அறையில் ஒட்டிவையுங்கள். தினமும் அதைக் கடக்கும்போதெல்லாம் ஒருமுறை படியுங்கள். ‘நான் வெல்வேன்' என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள். இருந்த இடம் தெரியாது காணாமல் போய்விடும் ஒட்டடை! வாழ்க்கை அழகாகத் தெரிய ஆரம்பிக்கும்!

தடைகளையே உற்று, உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் உங்களால் எதையும் செய்யமுடியவில்லை. குறிக்கோளை உற்றுப் பாருங்கள், தடைகள் மறைந்துவிடும். உத்வேகம் வரும், தொடர்ந்து முன்னேற!

வணக்கம் அம்மா. நான் 23 வயது ஆண். கடந்த ஆண்டு நான் எம்.பி.ஏ. படித்து முடித்தேன். எங்களுக்கென்று சொந்தமாக ஒரு துணிக்கடை இருக்கிறது. என் அப்பா, அண்ணன், சித்தப்பா உள்ளிட்ட பலரும் அதில்தான் வேலை செய்கிறார்கள். இப்போது ‘இது நம்ம ஃபேமிலி பிஸினஸ்' என்று சொல்லி என்னையும் துணிக்கடைக்கு வேலைக்கு வா என்று அழைக்கிறார்கள்.

ஆனால் எனக்கு வேறு சில கனவுகள் உண்டு. மனித வளம் தொடர்பாக ஆய்வு செய்து அதில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனை என் வீட்டில் சொன்னால், ‘நீ படித்த வரைக்கும் போதும். வந்து கடையில் வேலை செய். குடும்ப பாரம் கொஞ்சம் குறையும்' என்கின்றனர்.

என்னைப் படிக்க வைப்பதற்குத் தேவையான பணம் இருக்கிறது. இருந்தும் என்னை வேலைக்கு வா என்று அழைக்கிறார்கள். ‘நான் துணிக்கடைக்கு வர விரும்பவில்லை. ஆனால் நகரத்துக்குச் சென்று நானே ஒரு வேலை தேடிக்கொள்கிறேன்' என்று சொன்னால், அதற்கும் அனுமதி மறுக்கிறார்கள்.

இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் என் பெற்றோர்கள் ரொம்ப கெடுபிடியாக இருக்கிறார்கள், மற்றபடி அவர்களுக்கு என் மேல் பாசம் அதிகம். எங்கே நான் துணிக்கடையில் வேலைக்குச் சேர கொஞ்சமும் பிடிக்கவில்லை. அங்கு வேலைக்குச் சேர்ந்துவிட்டால், என் வாழ்க்கை அதிலேயே முடிந்துவிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. இதனால் வீட்டைவிட்டு ஓடிப் போய்விடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு நான் வந்துவிட்டேன். எனக்கு ஒரு நல்ல வழி கூறவும்.

நண்பரே, இதற்கெல்லாமா ‘வீட்டைவிட்டு ஓடிவிடலாமா' என்று யோசிப்பீர்கள்? கமான்.. போராடுங்கள். தளர்ந்து போய்விடாதீர்கள்!

தொழிலைப் பற்றிய உங்கள் எண்ண ஒட்டம் தவறு என்று சொல்ல முடியாதே! உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை, உங்களுக்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாதே!

உங்களுக்குத் தேவை துணிச்சல். பெரியவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ளாது, மாற்றுக் கருத்தை சொல்வது மரியாதை இல்லாத நடத்தையாகாது. வீட்டில் ஒத்துழையாமையை ஆரம்பியுங்கள் ‘கடைக்கு வர மாட்டேன்' என்று!

தேவைப்பட்டால் ‘சரி என்று சொல்லும்வரை உண்ணாவிரதம்' என்று கொடிபிடியுங்கள். பெற்றோரிடம் கோபப்படாது அமைதியாக, அழுத்தமாகப் பேசி மனிதவளத் துறையில் மேலே படிக்க விண்ணப்பம் அனுப்பப் போகிறீர்கள் என்று தெரிவித்துவிடுங்கள். முடிந்தால் அந்தத் துறைக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று உங்கள் பெற்றோர் மதிக்கும் ஒருவரை அல்லது உங்கள் பேராசிரியரை விட்டுப் பரிந்துரைக்கச் சொல்லுங்கள்.

இறுதியில், ‘இவன் மசிய மாட்டான். எதையோ செய்து தொலைக்கட்டும்' என்று அலுத்துப்போய் பெரியவர்கள் உங்கள் விருப்பப்படி விட்டு விடுவார்கள். நாளை நீங்கள் நல்ல நிலைக்கு வரும்போது உங்கள் பெற்றோர் உங்களைப் பற்றிப் பிறரிடம் பெருமையாகப் பேசுவதைக் கேட்கத்தான் போகிறீர்கள்.

பெரிய கம்பெனிகளில், பெரிய நகரங்களில் வேலை பார்க்கும்போது அனுபவங்களின் வீச்சு கூடும். கிடைக்கும் சந்தர்ப்பங்களும் ஏராளம். உங்கள் குடும்பத்தாரை ஈர்க்க இதோ ஒரு பாயிண்ட்! நாளை உங்கள் குடும்பத்தின் சின்ன துணிக்கடை, உங்கள் முயற்சியால் பெரிய நகரங்களில் அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள பிரம்மாண்டமான துணிக்கடையாக உருவெடுக்கலாம்! கவனமாகக் காயை நகர்த்துங்கள்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124,

வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x