Published : 18 Dec 2015 04:40 PM
Last Updated : 18 Dec 2015 04:40 PM
“வாழ்க்கையைத் தெரிஞ்சுக்கிறதுக்கு வேறு எதுவும் தேவையில்லை. நிறைய பயணம் பண்ணுங்க!" என்றனர் அந்த நான்கு பேரும் கோரஸ் ஆக!
இப்படித்தான் இந்தக் கட்டுரை முடியப்போகிறது. ஆனால் அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை அறிய ஒரு சின்ன ‘ஃப்ளாஷ்பேக்'...
"நான் இசை பிரகாஷ். இவர் ராஜகோபால். இவர் ரத்னவேல். அவர் தர்மராஜ். நாங்க எல்லோரும் ஸ்கூல் டைம், காலேஜ் டைம்லருந்து ஃப்ரெண்ட்ஸ். பிறந்தது, படிச்சது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். சும்மா ஒரு நாள் ‘தமிழ்நாடு முழுக்க சைக்கிள்ல சுத்தி வரணும்னு ஒரு ப்ளான் போட்டோம்'. அந்த ப்ளானை சக்ஸஸ்ஃபுல்லா எக்ஸிக்யூட் பண்ணி, இதோ இப்ப உங்க முன்னாடி நிக்கிறோம்!" என்று கலகல 'இன்ட்ரோ' கொடுத்தார் இசை.
"ஸ்டேட் முழுக்க ரவுண்ட் அடிக்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு. ஆனா, எதுக்காக சும்மா ஒரு டிராவலா மட்டுமே இருக்கணும்? ஏதாவது ஒரு நல்ல கான்செப்ட்டை வெச்சு டிராவல் பண்ணுவோம்னு வெண்புள்ளிகள் பத்தி மக்கள் மனசுல இருக்கிற தவறான எண்ணங்களைப் போக்குறதுக்கும், கல்வியோட முக்கியத்துவம் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்கும் இந்தப் பயணத்தை அமைச்சுக்கலாம்னு முடிவு பண்ணோம். அப்படித்தான் எங்க டீமுக்கு ‘பயணி'னு பேர் கிடைச்சுது!" என்றார் ரத்னவேல்.
"மெலனின்' குறைபாடு காரணமா சிலரோட உடம்புல வெள்ளையா திட்டுத் திட்டா சில புள்ளிகள் உருவாகும். இதை வெண்புள்ளிகள்னு சொல்வோம். ஆனா பலர் இதை வெண்குஷ்டம்னு சொல்லி, இந்த பாதிப்பு உள்ளவங்களைத் தள்ளி வெச்சுடுறாங்க. என்னோட சின்ன வயசுல இந்த பாதிப்பு பத்தி தவறான எண்ணத்தை என் மனசுல ஏற்படுத்துனாங்க. அதனால, இதைப் பத்தி மக்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தனும்னு நினைச்சோம்.
அடுத்து கல்வி. ஒரு பையனோ, பொண்ணோ... வகுப்பறையில டீச்சர் முன்னாடி எழுந்து நின்னு பேசற தைரியத்தை உண்டாக்கிட்டா போதும். கேள்வி கேட்கிற மனநிலை அவங்களுக்குத் தானா வந்துடும். நாங்க போற இடத்துல இருக்கிற ஸ்கூலில் எல்லாம் இந்த ‘பப்ளிக் ஸ்பீக்கிங்' திறமையை வெளிக்கொண்டுவர்ற மாதிரி முயற்சிகள் எடுத்துக்கிட்டிருக்கோம்!" என்று தங்களின் டிராவல் ப்ளானை விளக்கினார் இசை.
இந்த வருடம் அக்டோபர் 11-ம் தேதி சென்னை பெசன்ட் நகரிலிருந்து தொடங்கியது இவர்கள் பயணம். சுமார் 62 நாட்கள் தமிழகம் முழுக்க சைக்கிளிலேயே பயணம் செய்திருக்கிறார்கள்.
"தமிழகம் முழுக்க பல மாவட்டங் களைப் பார்த்துட்டு நாகப்பட்டினம் ரீச் ஆனோம். அப்போதான் எங்களுக்குத் தகவல் கிடைச்சுது. கடலூர்ல வெள்ளம்னு. உடனே கடலூருக்குப் புறப்பட்டுட்டோம். எங்க ஃப்ரெண்ட்ஸோட கம்யூனிகேட் பண்ணி, சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குப் பாதுகாப்பா அனுப்பி வெச்சோம்!" என்றார் ராஜகோபால்.
இவர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களை வழிமறிக்க பல அரசியல் கட்சிகள் சார்பில் முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதைச் சமாளிக்க பாதிக்கப்பட்டவர்களை ஆட்டோக்களில் ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியது, வேறு ‘ரூட்' பிடித்து கிராமங்களை அடைந்தது எனப் பல சாதனைகளை சத்தமில்லாமல் அரங்கேற்றியிருக்கிறார்கள் இவர்கள்.
"நாங்க யாருமே ரெகுலர் சைக்கிளிஸ்ட் கிடையாது. இது எங்களோட முதல் பயணம். இதுக்காகவே இருபத்தஞ்சாயிரம் ரூபா கொடுத்து புதுசா சைக்கிள் வாங்கி, டிராவல் பண்றதுக்குப் பத்து நாளைக்கு முன்னாடி ப்ராக்டீஸ் பண்ணோம். இந்தப் பயணம் எங்களுக்கு நிறைய கத்துக்கொடுத்திருக்கு. எங்கள மாதிரி டிராவல் பண்ண ஆசைப்படுற வங்களுக்கு நாங்க சொல்லிக்கிறது ஒன்னுதான். ப்ளான் பண்ணி டிராவல் பண்ணாதீங்க!" என்றார் தர்மராஜ்.
"இந்த டிராவல்ல எங்களுக்கு ஒண்ணு மட்டும் நல்லா புரிஞ்சுது. மக்கள் பல பேருகிட்ட அரசியல் தெளிவு இல்லை. அரசியல் தெளிவுங்கிறது கட்சி அரசியல் மட்டுமே இல்லை. இந்த மாதிரி மழைக்காலத்துல ‘டெடனஸ்' தடுப்பூசி போட்டுக்கணும் அப்படிங்கிற அறிவும் அரசியல்தான்!" என்றார் இசை.
இந்தப் பயணத்தைத் தொடங்கும் போது இவர்களிடம் ஒரு பைசா கூட இல்லை. ‘பலரின் உதவியால் இந்தப் பயணம் சாத்தியமானது' என்று சொல்லும் இவர்களின் அடுத்த திட்டம் இந்தியா முழுக்கப் பயணம் செய்வது.
‘அப்புறம்... உங்க பயணங்களின் விளைவா ஏற்பட்ட அனுபவங்களை வெச்சு ஒரு மெஸேஜ் சொல்லுங்க' என்றதுதான் தாமதம்!
"வாழ்க்கையைத் தெரிஞ்சுக்கிறதுக்கு வேறு எதுவும் தேவையில்லை. நிறைய பயணம் பண்ணுங்க!" என்றனர் அந்த நான்கு பேரும் கோரஸ் ஆக!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT