Published : 25 Dec 2015 01:09 PM
Last Updated : 25 Dec 2015 01:09 PM
புத்தாண்டு என்றதும் நள்ளிரவுக் கொண்டாட்டமும், வாணவேடிக்கையும் வாழ்த்துப் பரிமாற்றங்களும் நினைவுக்கு வரலாம். அமெரிக்காவின் நியூயார்க் நகரச் சதுக்கம், பாரிஸ் ஈஃபெல் கோபுரம், ஆஸ்திரேலியாவில் சிட்னி துறைமுகம் ஆகியவை புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான புகழ் பெற்ற இடங்களாக இருக்கின்றன என்பதும் தெரியும். ஆனால் உலகம் முழுவதும் புத்தாண்டு எத்தனை விதமாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?
அதாவது பல நாடுகளில் புத்தாண்டை வரவேற்க விதவிதமான வழக்கங்கள் கொண்டிருக்கின்றனர் தெரியுமா? இப்படி ஒவ்வொரு நாட்டிலும் புத்தாண்டு தொடர்பாக உள்ள விநோதமான கொண்டாட்ட வழக்கங்களை 'தி லிட்டில் திங்ஸ்' இணையதளம் பட்டியலிட்டுள்ளது:
இதன்படி தென்னமெரிக்க நாடான ஈக்வேடாரில் புத்தாண்டுக்கு முந்தைய இரவில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களின் உருவ பொம்மைகளை எரிக்கின்றனராம். இதன் மூலம் கடந்த ஆண்டின் தீமை ஒழியும் என்பது நம்பிக்கையாம். இதேபோல சுவிட்சர்லாந்து நாட்டில் தரையில் ஐஸ்கிரீமை சிந்துகின்றனராம். இது அதிர்ஷ்டத்திற்கு வழி வகுக்கும் என்பது நம்பிக்கையாம்.
ஸ்பெயின் நாட்டில் அனைவரும் தொலைக்காட்சி முன் அல்லது பொதுச் சதுக்கங்களில் கூடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்போது சிவப்பு உள்ளாடை அணிந்து கையில் ஒரு கோப்பைத் திராட்சைப் பழங்களையும் வைத்திருப்பார்கள். புத்தாண்டு மணி 12 முறை ஒலிக்கும் போது 12 திராட்சகளை விழுங்கினால் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் நீடிக்குமாம்.
டென்மார்க்கில் புத்தாண்டு பிறக்கும்போது நாற்காலியிலிருந்து குதிப்பதையும், பக்கத்து வீட்டில் தட்டை வீசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் நட்பு தழைக்கும் என்பது நம்பிக்கை. எஸ்டோனியா நாட்டில் 7, 9 மற்றும் 12 எண்கள் ராசியானவையாக கருதப்படுவதால் இத்தனை முறை சாப்பிட முடிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT