Published : 25 Dec 2015 01:25 PM
Last Updated : 25 Dec 2015 01:25 PM
அன்புள்ள அம்மா வணக்கம். நான் 19 வயதுப் பெண். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன் என்னிடம் ஒருவர் தன் காதலை வெளிப்படுத்தினார். எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. எனவே, நானும் என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துவிட்டேன்.
எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் காதல் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் அவர் என் மீது அளவுக்கு அதிகமாக ‘பொசஸிவ்' ஆக இருக்கிறார். நட்பு ரீதியாக வேறு எந்த மாணவராவது என்னிடம் பேசினால், அவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்.
இவரின் இந்தச் செய்கையால் சில சமயம் நான் வேதனை அடைந்திருக்கிறேன். ஆனால் அவரிடம் ‘இப்படியெல்லாம் செய்ய வேண்டாம்' என்று சொல்வதற்கும் பயமாக இருக்கிறது. அவரின் பொசஸிவ் தன்மை மற்றும் கோபத்தைப் போக்குவதற்கு நான் என்ன செய்ய வேண்டும். அல்லது இவர் போன்ற ஒருவரிடமிருந்து நான் விலகியிருக்கலாமா? தயவு செய்து எனக்கு ஒரு ஆலோசனை கூறவும்.
எந்த முயற்சியும் எடுப்பதற்கு முன் விலகி இருப்பதைப் பற்றி யோசிக்க வேண்டாமே! அவருடைய ‘பொசஸிவ்' குணம் முதலில் உங்களுக்குப் பிடித்திருந்தாலும் போகப் போக ‘இவருடன் நான் எப்படி வாழ்நாள் முழுவதும் கழிப்பது?' என ஒரு பயம் வந்திருக்கும்.
பொசஸிவ் குணம் அவரது உணர்வுரீதியான பாதுகாப்பின்மையைக் குறிக்கிறது. இந்தப் பாதுகாப்பின்மை ஏன் என்பதற்கு இதோ சில விளக்கங்கள்:
- சிறு வயது முதல் பெற்றோர் பாசம் காட்டாமல் வளர்த்திருக்கலாம்
- அதிகப் பாசம் காட்டிய பெற்றோரில் அம்மாவோ அல்லது அப்பாவோ அல்லது இருவருமேவோ பிரிந்தோ அல்லது இறந்தோ போயிருக்கலாம்
- தீவிரமாகக் காதலித்த முந்தைய காதலி விட்டுப் போயிருக்கலாம்
- பிற ஆண்களோடு தன்னை ஒப்பிட்டு, குறைவாக மதிப்பிட்டு, காதலி தன்னை ஒதுக்கிவிடுவாளோ என்று பயந்திருக்கலாம்
பாதுகாப்பின்மையுடன் வாழும் காதலர் உங்கள் மீது பாசத்தைப் பொழியும் அதே நேரத்தில் தன்னை விட்டுப் பிரிந்து விடுவீர்களோ என்ற பயத்தால் உங்களை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார். காதலிக்கு ஏற்படும் அவஸ்தை சத்தியமாக அவருக்குப் புரியவில்லை!
இந்தக் குணம் தொடர்ந்தால்? நாளை எதை உடுத்துவது என்பது முதல், எங்கு, யாருடன், எப்போது போகவேண்டும் என்பதுவரை எதிலும் உங்களது சுதந்திரம் பறிபோய்விடும். இந்தத் துன்புறுத்தலுக்குப் பயந்து, நீங்கள் உங்கள் நட்பு வட்டத்தைக் குறுக்குவீர்கள்! இது நடக்கவிடக்கூடாது.
அவருக்குப் பயந்து கேள்வி கேட்காமல் இருப்பது புத்திசாலித்தனமா? ‘நான் உனக்கு வேண்டுமென்றால் நீ இதையெல்லாம் விடவேண்டும்' என்று ப்ளேட்டைத் திருப்பிப் போடுங்கள். அதே நேரம் ‘இன்செக்யூரிட்டி' அதிகமாகாமல் இருக்க, டன் கணக்கில் காதலைப் பொழிந்து ‘நீதான் என் வாழ்க்கை' என்று காட்டுங்கள். பலன் இருந்தால் மகிழ்ச்சி உங்களுடையது. இல்லையென்றால் ‘தப்பித்தோம்' என்ற நிம்மதியும் உங்களுடையது!
அக்கா வணக்கம். நான் 25 வயது இளைஞன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் என்னை அடித்து, மிரட்டித்தான் வளர்த்தார்கள். அதனால் எப்போதுமே என் பெற்றோர்களிடம் நான் நெருக்கமாக உணர்ந்தது இல்லை.
கல்லூரியில் படிக்கும்போது எனக்குச் சில நண்பர்கள் கிடைத்தார்கள். அதனால் வீட்டில் கிடைக்காத அன்பை அவர்களிடத்தில் கண்டேன். ஒரு முறை அவர்களை எல்லாம் என் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.
அப்போது என் அப்பா, தகாத வார்த்தைகளால் என் நண்பர்களைத் திட்டியதோடு, என்னையும் அவர்கள் முன்பு அடித்துவிட்டார். 'இவர்களைப் போன்ற நண்பர்கள் இருப்பதால்தான் நீ வீட்டுக்கு அடங்காமல் இருக்கிறாய்' என்று என்னை மிகவும் நோகடித்துவிட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு என் நண்பர்கள் என்னிடம் இயல்பாய்ப் பேசுவதில்லை.
தற்போது நான் பணியாற்றி வரும் நிறுவனத்தில் கூட நான் யாரிடமும் நட்பு கொள்வதில்லை. காரணம், என் வீட்டைப் பற்றிய பயம்தான். மூன்றாவது நபர்கள் முன்னிலையில் என் பெற்றோர் என்னை அவமதித்துவிடக் கூடாது என்று எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன். என்ன காரணத்தால் என் பெற்றோர் என்னிடம் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் பக்கத்து வீட்டில் இருக்கும் என் வயது இளைஞர்களைக் கண்டால், அவர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து என்னை தாழ்வு மனப்பாண்மை அடையச் செய்கிறார்கள். நான் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கொரு நல்ல வழி கூறுங்கள்.
அருமைத் தம்பியே! உங்களுக்கு நினைவூட்டுகிறேன், இப்போது நீங்கள் சுயமாகச் சம்பாதிக்கும் சுதந்திர இளைஞர் என்று! உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் உரிமை உங்களுக்கு மட்டுமே உண்டு! பெற்றோருக்கு பயந்து, தனிமரமாக நிற்கப்போகிறீர்களா?
இந்த வயது, நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக 'டைம் பாஸ்' பண்ணும் வயது! நட்பு வீட்டிற்கு வெளியிலேயே வளரட்டுமே! என்றாவது அவர்கள் வீட்டிற்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டால், துணிந்து பெற்றோரிடம் சொல்லிவிடுங்கள். ‘மரியாதைகுறைவாக நண்பர்களை நடத்தினால், உங்கள் மரியாதை குறைந்துவிடும்' என்று! வீட்டிற்கு நண்பர்கள் வந்தவுடன் அப்பா எதையாவது ஆரம்பிப்பதாகத் தோன்றினால், நண்பர்களை உங்கள் அறைக்கு அழைத்துச் சென்று, கதவை மூடிக்கொள்ளுங்கள். நேரிடையாக மோதுவது தவிர்க்கப்படும்.
எல்லா பெற்றோரும் பிள்ளையை நேசிக்கத்தான் செய்வார்கள். உங்கள் இளம் வயதில் உங்கள் பெற்றோர் கோபமாக நடந்துகொண்டதற்கு உங்களைப் பிடிக்காது என்பது காரணமாகாது!
அவர்களுக்கிடையே ஓடிக்கொண் டிருந்த பிரச்சினைகளால் அவர்களது மகிழ்ச்சி பறிபோயிருக்கலாம் அல்லவா? அப்பா மட்டும்தான் இப்படியா, அல்லது அம்மாவும் சேர்ந்தா? ஒருவேளை அப்பாவிடம் இருந்த பயத்தால் அம்மா அவருக்குத் துணை போகிறாரா? உங்கள் உடன்பிறப்பு யாராவது உங்களைவிட படிப்பில் புலியா? அவரளவிற்கு அல்லது வேறு சிலர் அளவிற்கு நீங்கள் உயரவில்லை என்ற ஏமாற்றமா உங்கள் பெற்றோருக்கு?
பெற்றோரைத் தேர்ந்தெடுக்கும் ‘சாய்ஸ்' யாருக்குமே இல்லையே தவிர, மற்ற பலவற்றைப் பற்றிய ‘சாய்ஸ்' நமக்கு உண்டு! பெற்றோர் சொல்வதை கண்டு கொள்ளாமல் இருக்கலாம் அல்லது அவர்களோடு மல்லுக்கு நிற்கலாம். ‘நான் இப்படித்தான் இருப்பேன்' என்று வார்த்தையில் சொல்லாமல் நடந்தும் காட்டலாம். உங்களுக்கு எது வசதி?
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT