Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM
டிஜிட்டலில் ஏற்பட்ட பாய்ச்சலின் விளைவால் இந்தியா முழுவதுமே யூடியூப் அலைவரிசைகள் பெருகி வருகின்றன. தமிழகத்திலும் அண்மைக்காலமாக யூடியூப் அலைவரிசைகள் பெருகியுள்ளன. யூடியூப் அலைவரிசைகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் யூடியூபர் மதன் கைது விவகாரம், யூடியூப் மீதான விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. தவறான யூடியூப் அலைவரிசைகளில் இருந்து பதின்பருவப் பிள்ளைகளைத் தற்காப்பது எப்படி? யூடியூபில் களமிறங்கும் இளைஞர்கள் அறிய வேண்டியது என்ன?
அணி வகுக்கும் புகார்கள்
உலகில் உள்ள முகம் தெரியாத யாருடனும் அணி சேர்ந்து விளையாடும் ‘பப்ஜி’ ஆன்லைன் விளையாட்டைக் கடந்த ஆண்டுதான் அரசு தடை செய்தது. இந்த விளையாட்டைத் தடை செய்த பிறகு ஒருவழியாக விமோசனம் கிடைத்ததுபோல உணர்ந்தனர் பெற்றோர். ஆனால், தடை செய்யப்பட்ட இந்த ‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி யூடியூப் அலைவரிசை (டாக்ஸிக் மதன் 18 ) மூலம் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்த யூடியூபர் மதன் மீது புகார்கள் குவிந்தன. அந்தப் புகார்களை விசாரிக்கப்போக சிறார்களிடம் ஆபாசமாகப் பேசுவது, பெண்களை இழிவுப்படுத்திப் பேசுவது, அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகம், அந்தரங்க விஷயங்களைப் பேசுவது என மதன் மீது புகார்கள் அணிவகுக்கின்றன.
இன்றைய உலகில் கூகுளுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தும் தளமாக மாறியிருக்கிறது யூடியூப். உலகில் யூடியூபின் மிகப் பெரிய சந்தையாக இருப்பது இந்தியாதான். அமெரிக்காவையும் தாண்டி இந்தியாவில் 22.50 கோடிப் பயனாளர்கள் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்தியாவின் 93 சதவீத இணைய பயன்பாட்டாளர்களில், பல மணி நேரத்தை யூடியூப் ஸ்ட்ரீமிங்கில் செலவிடுபவர்களாக நம்மவர்கள் உள்ளனர். இந்தியாவில் பல யூடியூப் அலைவரிசைகள் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெறும் அளவுக்குப் பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் யூடியூபில் இந்தி மொழிக்குப் பிறகு அதிக உள்ளடக்க வீடியோக்களைக் கொண்டுள்ள மொழியாகத் தமிழே உள்ளது. இந்தியாவில் யூடியூபின் அபரிமிதமான வளர்ச்சி தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில்தான் யூடியூபர்களின் குற்றங்கள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.
உழைத்து உயர்வோர்
யூடியூப் பலவற்றைத் தெரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் இன்று வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. இவ்வளவு ஏன், வருவாய் ஈட்டவும் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. இன்று இளைஞர்கள் மட்டுமல்லாமல், பெண்கள், முதியவர்கள் எனப் பலதரப்பினரும் யூடியூப் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற யூடியூபர்கள் தமிழ் சினிமாவில் ஒரே பாடலில் கோடீஸ்வரர் ஆவதைப் போல முன்னேறிவிடவில்லை. அயராது உழைத்து, நல்ல உள்ளடக்கம் கொண்ட தகவல்களை வீடியோக்களாகப் பதிவிட்டு, பார்வையாளர்களைப் பெற்றுத்தான் முன்னேறியிருக்கிறார்கள். அதன்மூலம் வருவாயும் ஈட்டிவருகிறார்கள்.
ஆனால், குறுகிய காலத்தில் அதிக பார்வையாளர்களைப் பெறவும் வருவாய் ஈட்டவும் நினைக்கும் சில யூடியூபர்கள்தாம், தவறான உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களைத் தேர்வு செய்கிறார்கள். அதன்மூலம் வளர்ந்துவிடலாம் என்று தப்புக் கணக்கும் போடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ‘சென்னை டாக்ஸ்’ என்கிற யூடியூப் அலைவரிசையின் தவறான வீடியோ உள்ளடக்கம் வெளிச்சத்துக்கு வந்தது. பார்வையாளர்களை அதிகரிக்கப் பெண்களிடம் ஆபாசமாகப் பேட்டி எடுத்து வீடியோ பதிவேற்றம் செய்த இளைஞர்கள் சிக்கினார்கள். இப்போது மதன் சிக்கியிருக்கிறார். இந்த இரண்டு யூடியூபர்களும் இரு பருக்கை உதாரணங்கள்தான்.
நல்லதை நாடு
கடல்போல் விரிந்துகிடக்கும் யூடியூபில் இன்று எல்லா வீடியோக்களும் காணக் கிடைக்கின்றன. உள்ளடக்கத்தில் மக்களுக்கும் சமூகத்துக்கும் நல்ல கருத்துகளையும் வீடியோ வழியாகச் சொல்லும் யூடியூப் அலைவரிசைகள் இருப்பதைப் போல, கண்டதையும் சொல்லும் யூடியூப் அலைவரிசைகளும் வரிசைகட்டி வருகின்றன. பொதுவாக எல்லா அம்சங்களிலுமே நல்லது, கெட்டது என இரு பக்கங்கள் உண்டு. அதில் யூடியூபும் விதிவிலக்கு அல்ல. இதில் நமக்கு எது தேவை என்பதை நாம்தான் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். தீயதை ஒதுக்கி வைக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வீடியோக்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு, பிறரும் அதுபோன்ற உள்ளடக்கத்தைத் தேர்வு செய்ய தூண்டிவிடுகிறது.
வயதுவந்தோருக்கான உள்ளடக்கத்தை யூடியூப் அனுமதிக்கிறது. என்றாலும், பாலியல் ரீதியிலான அம்சங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்க பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், மொழியைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் இடர்பாடுகளால் யூடியூபில் ஏராளமான, தேவையற்ற வீடியோக்கள் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் இளைஞர்களாவது யோசித்துச் செயல்பட அவர்களுடைய வயது உதவும்.
பெற்றோர் உஷார்
ஆனால், பதின்பருவத்துப் பிள்ளைகளும் சிறார்களும் இதுபோன்றவற்றில் சிக்கும் அபாயம் இருப்பதுதான் கவலைக்குரிய அம்ச மாகிறது. சிறார்களும்கூட இன்று ஆன்லைன் கேம், யூடியூப் போன்றவற்றில்தான் அதிகம் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவது எப்படி, அதை எப்படித் தரவிறக்கம் செய்வது எனப் பல வீடியோக்கள் யூடியூபில் உள்ளன. அங்கே செல்லும் சிறார்கள், அந்த யூடியூப் பக்கத்தில் நடக்கும் ஸ்ட்ரீமிங் அரட்டைகளில் பங்கேற்று, முன்பின் தெரியாதவர்களுடன் நட்பு கொள்ளும் போக்கும் ஏற்பட்டுவிடுகிறது.
பிள்ளைகள் மொபைலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பும் பெற்றோர், ஏதேனும் விபரீதம் ஏற்படும் போதுதான் அலறுகிறார்கள். அதனால், கைபேசியில் அதிக நேரம் செலவிடும் பிள்ளைகளை முதலில் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். யூடியூபில் என்னென்ன வீடியோக்களைப் பார்க் கிறார்கள், யாருடனாவது தொடர்பில் இருக்கிறார்களா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். இணையத்தில் தன்னிச்சையாகப் புழங்கும் பிள்ளைகளின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். உலகமே டிஜிட்டல் மயமாகிவரும் வேளையில், யூடியூப் போன்ற வசதிகளை இனி யாராலும் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. ஆனால், எது தேவை, தேவையில்லை என்று பகுத்துப் பார்த்து முடிவெடுக்கும் பொறுப்பு நமக்கு மட்டுமே உள்ளது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT