Published : 04 Dec 2015 04:15 PM
Last Updated : 04 Dec 2015 04:15 PM
“பார்வை இல்லன்னா என்னங்க... தேடல் இருக்கே. அது இருந்துட்டாலே நாம வெற்றியாளர்கள்தான்!" குத்தாலமுத்துவின் பேச்சில் அவ்வளவு ஆழம்!
திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் இவரைப் பார்க்கலாம். ஆனால் இவர்தான் மற்றவர்களைப் பார்க்க முடியாது. ஆம். இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி.
‘மனிதர்களின் வாழ்வில் தேடல் வேண்டும்' என்று சொல்லும் இவரைத்தான் அந்த தபால் நிலையத்துக்குள் நுழையும் பலரும் முதலில் தேடுகிறார்கள்.
"என் சொந்த ஊர் தேனி மாவட்டம் ஆத்துப்பட்டிவிளக்கு கிராமம். திருப்பத்தூர்ல 8-ம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில் படிச்சேன். அப்புறம், ரெகுலர் ஸ்கூல். அமெரிக்கன் காலேஜ்ல பி.ஏ. மதுரா காலேஜ்ல எம்.ஏ., முடிச்சேன்.
அப்பா அம்மாவுக்கு விவசாயம்தான் தொழில். என்னை எப்படி கரையேத்துறதுன்னு அவர்களுக்குத் தெரியலை. அவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சேன். மனசுல ஒரு நம்பிக்கை. போட்டித் தேர்வுகளுக்குப் படிக்க ஆரம்பிச்சேன்.
டீச்சர்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு எனக்கு நிறையப் பேர் சப்போர்ட் பண்ணாங்க. கேஸட்டில் பதிவு செஞ்சுதான் பாடங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். இதுக்கிடையில சென்னைல ஐ.டி. கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து நைட் ஷிப்ட் மட்டும் பார்த்துக்கிட்டிருந்தேன். கருணை மற்றும் பரீட்சார்த்த அடிப்படையில்தான் நான் வேலைக்கு செலக்ட் ஆனேன்.
நைட் 9 மணிக்கு வேவை ஆரம்பிச்சா அடுத்த நாள் காலை 6 மணி வரைக்கும் போகும். அப்புறம் 3 மணி நேரத் தூக்கம். அப்புறம் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் ஆகுறதுன்னு ‘டைட் ஷெட்யூல்'. தமிழ், இங்கிலீஷ் ரெண்டும் நல்லா வந்துச்சு. அதனால ‘தடதட'ன்னு புரொமோஷன்ஸ். 6 வருஷம். ரெண்டாயிரம் ரூபா சம்பளத்தில் ஆரம்பிச்சு, 30 ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கும்போது வேலையை விட்டாச்சு.
ரூம்ல இருந்து பஸ்ல ஆஃபீஸுக்குப் போறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும். ப்போ ரேடியோவுல பி.பி.சி. நியூஸ் கேட்பேன். அது ரொம்பவும் பயனுள்ளதா இருந்துச்சு.
நிறைய எக்ஸாம்ஸ் எழுதி, கடைசில 2010ம் வருஷம், போஸ்டல் டிபார்ட்மென்ட்டுல வேலைக்குச் சேர்ந்தேன். இதோ இப்போ நீங்க பேட்டி எடுக்க வர்ற அளவுக்கு நான் கொஞ்சம் வளர்ந்திருக்கேன். இல்லையா?" என்று சிரிப்பவரிடம், ‘பார்வையில்லாதது பிரச்சினையா இல்லையா' என்று கேட்டால் புன்னகை மாறாமல் பதில் வருகிறது.
"பார்வையில்லைங்கிறது எனக்கு ஒரு கஷ்டமாவே தெரியலை. அறிவுத் தேடல்தான், எனக்கான பார்வையா நான் பார்க்கிறேன். டெக்னலாஜி இன்னைக்கு ரொம்ப வளர்ந்திருக்கு. கம்ப்யூட்டர், 'டச் ஸ்கிரீன்'னு பயன்படுத்துறேன்.
ஃபாரினுக்கு பனியன் சரக்குகளை அனுப்புறது எப்படி, தங்கமகள் திட்டத்து எப்படி அப்ளை பண்றது, புது ஸ்டாம்ப் ஏதாவது வந்திருக்கான்னு போஸ்ட் ஆஃபீஸுக்கு பல பேர் பல சந்தேகங்களோட வருவாங்க. அந்த விஷயங்கள் பத்தி எல்லாம் தகவல் சேகரிச்சு, அவங்களோட சந்தேகங்களைத் தீர்த்து வைப்பேன்.
அதே மாதிரி போட்டித் தேர்வுகளுக்கு எப்படிப் படிப்பது, எந்தெந்த புத்தகங்களைத் தேர்வு செய்யறதுன்னு பல இளைஞர்கள் என்கிட்ட டவுட்ஸ் க்ளியர் பண்ணிட்டுப் போவாங்க. எல்லாத்துக்கு மேல என்னை மாதிரி மாற்றுத் திறனாளிகள் பலர் என்னைப் பார்த்து, படிக்கத் தொடங்கி இருக்காங்க. பார்வை இல்லன்னா என்னங்க... மத்தவங்க நல்லபடியா வாழ்க்கையில இருக்குறதுக்கு ஒரு கைகாட்டி மரமா இருந்தா போதாதா?" என்பவரின் வார்த்தைகளில் அத்தனை வெளிச்சம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT