Last Updated : 08 Jun, 2021 03:12 AM

1  

Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

ஃபேஸ்புக்கில் பணம் இழக்காமல் இருப்பது எப்படி?

“உஷார், என்னுடைய பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. என் பெயரில் நட்பு கோரிக்கை வந்தால் நிராகரித்துவிடுங்கள். பண உதவி கேட்டால் அனுப்பிவிடாதீர்கள்” -இதுபோன்ற நிலைத்தகவல்களை சமீப நாட்களில் அதிகமாகப் பார்த்திருப்பீர்கள். உங்களில் சிலர் பணத்தை அனுப்பி ஏமாந்தும் இருப்பீர்கள். கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் இந்த மோசடியிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது?

கரோனா காலம்

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடங்கி இன்னமும் நீடித்துக்கொண்டிருக்கிற கரோனா வைரஸ் பரவல், எல்லோருடைய வாழ்க்கையையும் சூறையாடிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரரீதியாக ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தக் கடினமான காலகட்டத்தைப் பயன்படுத்திதான், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகப் பணம் பறிக்கும் செயல் அரங்கேறிவருகிறது. நம் ஃபேஸ்புக் பக்கத்துக்குள் சென்று, நம்முடைய ஒளிப்படங்கள், தகவல்களை எல்லாம் சேகரித்துகொண்டு, நம் பெயரிலேயே போலி ஃபேஸ்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கி, நம் கணக்கில் உள்ள நண்பர்களுக்கு சிலர் நட்புக் கோரிக்கை அனுப்புகிறார்கள்.

நம்முடைய நண்பர், அறிந்தவர், தெரிந்தவர் என்று அந்தக் கோரிக்கையை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். பின்னர் சில தினங்கள் கழித்து, அவசரத் தேவை, கரோனா மருத்துவ உதவி என்று போலிக் கணக்கு மூலம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்புகிறார்கள். இன்று ‘இ-வேலட்’ பணப் பரிமாற்றச் சேவையில் தொலைபேசி எண் மட்டுமே போதும் என்கிற நிலை உருவாகிவிட்டதால், அவர்களுடைய மொபைல் எண்ணைக் கொடுத்து உதவி கோருகிறார்கள். கரோனா ஊரடங்குக் காலம் என்பதால், அவசரத் தேவைக்குக் கேட்கிறார்கள் என்று நம்பி, பலரும் கோரிக்கையை ஏற்று பணத்தை அனுப்பி ஏமாந்துவருவது அதிகரித்துவருகிறது.

எப்போது உஷாராக வேண்டும்?

அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேள்விப்பட்டுவந்த இந்த மோசடி, இன்று தங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் நடைபெற்று, தாங்களும் ஏமாற்றப்பட்ட கதைகளைச் சமூக ஊடகங்களில் பலரும் வெளிப்படுத்திவருகிறார்கள். இந்த மோசடியிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது? சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

“ஃபேஸ்புக் கணக்கில் பாதுகாப்பு செட்டிங்ஸ் பகுதியில் நமது கணக்கு விவரங்களை தேவையில்லாமல் மற்றவர்கள் அணுகும்வகையில் ஆக்டிவேட் செய்துவைத்திருக்கிறோம். யார் வேண்டுமானாலும் நம்முடைய படங்கள், தகவல்கள், நம் நண்பர்களின் கணக்குகளை அணுக அனுமதிப்பதே இதுபோன்ற மோசடிகள் நடப்பதற்கு வசதியாகிவிடுகிறது. நம்முடைய கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், நம் தகவல்கள் அனைத்தையும் ‘லாக்’ செய்ய வேண்டும். முகம் தெரியாதவர்கள் நம்முடைய கணக்கை அணுகுவதைத் தடுக்கும் வசதிகள் ஃபேஸ்புக்கில் உள்ளன. அதைப் பயன்படுத்த வேண்டும்” என்கிறார் டெல்லியைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர் ரக்ஷித் தாண்டன்.

நட்புக் கோரிக்கையில் கண்

இதுபோன்ற அறிவுரைகளை ஏற்காமல் அசட்டையாக பலர் இருந்தாலும்கூட, குறைந்தபட்சம் நம் நண்பர்கள், உறவினர்கள் பெயரில் நட்புக் கோரிக்கை வரும்போது உஷாராக இருக்க வேண்டும். ஏற்கெனவே நம் நட்புப் பட்டியலில் உள்ளவர், ஏன் மீண்டும் நட்புக் கோரிக்கை விடுக்கிறார் என்பதை ஆராய வேண்டும். அதை ஆராய்ந்தாலே, அது போலிக் கணக்கு என்கிற முடிவுக்கு வந்துவிடலாம்.

சிலர் ஃபேஸ்புக் அனுமதித்த 5 ஆயிரம் நண்பர்கள் என்ற இலக்கை அடைய தீவிரம் காட்டுவார்கள். கண்ணை மூடிக்கொண்டு நட்புக் கோரிக்கைகளை ஏற்பார்கள். முகம் தெரியாதவர்கள் விடுக்கும் நட்புக் கோரிக்கைகளை ஏற்கும் முன், அவர் நம் நண்பர்களில் யாருடைய நட்புப் பட்டியலில் உள்ளார் என்பதை ஆராய வேண்டும். தேவைப்பட்டால் ஒழிய, முகம் தெரியாதவர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் இருப்பதே, இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்பித்துக்கொள்ள உதவும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x