Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM
கரோனாவின் இரண்டாம் அலை, முதல் அலையைவிட வீரியமிக்கதாக இருக்கிறது. அதன் பரவல் வேகம், நமது சுகாதார அமைப்பையே நிலைகுலையச் செய்துள்ளது. இந்நிலையில் பெரியவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறபோது, இணையத் தொழில்நுட்பத்தில் நன்கு பரிச்சயம்கொண்ட இளம் தலைமுறையினர் களத்தில் குதித்து உதவிவருகின்றனர். அவர்களில் டெல்லியைச் சேர்ந்த மஹிசரஃப் எனும் பள்ளி மாணவியும் ஒருவர்.
பொது முடக்கம் காரணமாக வீட்டினுள் அடங்கியிருந்தார் 16 வயது மஹிசரஃப். கரோனாவால் பாதிக்கப்பட்ட அவருடைய பள்ளி ஆசிரியர் அபாயக் கட்டத்தில் இருப்பதாகவும், அவருக்கு பிளாஸ்மா உடனடியாக அளிக்க வேண்டும், ரத்த வங்கிகள் கையிருப்பில் இல்லாததால் உடனடித் தேவை என்று பள்ளி வாட்ஸ் அப் குழுவில் வந்த அறிவிப்பு அவர் கண்ணில்பட்டது. சிறிதும் யோசிக்காமல், காலத்தை வீணடிக்காமல், உடனடியாக அவர் களத்தில் குதித்தார். தன்னுடைய நண்பர்களையும் இணைத்துக்கொண்டார்.
சில நிமிடங்களில் அவர்களில் ஒரு குழுவினர் பிளாஸ்மா தானம் செய்பவர்களின் விவரங்களை ‘ஸ்பிரெட் ஷீட்’டில் சேகரிக்கத் தொடங்கினர். அதை கூகுள் டிரைவிலும் பதிவேற்றினர். மற்றொரு குழுவினர் அந்த விவரங்களைச் சரிபார்த்தனர். மற்றொரு குழுவினர், ஒரு கொடையாளர் கிடைக்கும்வரை, சரிபார்க்கப்பட்ட/உறுதி செய்யப்பட்ட நபர்களைத் தொடர்புகொண்டனர். இறுதியில் வெற்றியும் கண்டனர். மற்றொருபுறம் அந்த ஆசிரியரின் குடும்பத்தினர் முயன்றபோது, அவர்களால் கொடையாளரைக் கண்டறிய முடியவில்லை. இந்தக் குழந்தைகள் களத்தில் இறங்கிய 30 நிமிடங்களுக்குள் பிளாஸ்மா தானம் செய்பவரைக் கண்டறிந்தனர். ஆசிரியரின் உயிரையும் காப்பாற்றிவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT