Published : 11 Dec 2015 01:24 PM
Last Updated : 11 Dec 2015 01:24 PM

வெள்ளம் காட்டிய உள்ளம்!

சென்னையை நனைத்து நைந்து போக வைத்திருக்கிறது மழை!

திரும்பிய இடமெல்லாம் வெள்ளம். ஆனால் தாகத்துடன் மக்கள். மழை நீரில் கப்பல் விட்டு விளையாடிய குழந்தைகள், படகுகளில் மீட்கப்படுகின்றன. படகு வீடுகளில் வாழ ஆசைப்பட்டவர்கள் பலரின் வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.

வரிசையாக கார்களை நிறுத்தி தங்கள் வீட்டை அழகு பார்த்த‌ பலர், இன்று காலில் செருப்பில்லாமல் உணவுப் பொட்டலங்களுக்காக வரிசையில் நிற்கிறார்கள். விதவிதமாக உடுத்தியவர்கள் மாற்றுத் துணியில்லாமல் ப்ளாட்ஃபாரத்தில் கிடக்கிறார்கள்.

இவை மழையின் தாண்டவம் என்றால், இதிலிருந்து மீள சென்னை மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரு வரம்!

மேல்தட்டுப் பெண் ஒருவர், உணவுப் பொட்டலங்களுக்காகத் தள்ளுமுள்ளுவில் சிக்கி கடைசியில் ஒன்றும் கிடைக்காமல் திரும்பும்போது, "ந்தா... கொயந்திக்கு குடுமே!" என்று ஒரு குடிசை வாழ் பெண் தன் கையிலிருக்கும் பிஸ்கட் பாக்கெட்டை அவரின் கையில் திணிக்கிறார்.

வீடிழந்தவர்களுக்கு 'இங்கே வாங்க...' என்று தங்கள் வீடுகளை பலருக்கு அடைக்கலமாக்கியவர்கள் பலர்.

சென்னையிலிருப்பவர்கள் உணவு தந்தனர். தமிழகத்தின் பிற மாவட்டத்தினர் உடை தந்தனர். பிற மாநிலத்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை அனுப்பி வைத்தனர். பிற நாடுகளிலிருப்பவர்கள் இங்கிருக்கும் நண்பர்கள் பலருக்குப் பணம் அனுப்பி வைத்தனர்.

இவையெல்லாம் ஆட்சியிலிருப்பவர்களின் உத்தரவுப்படி நடக்கவில்லை. எல்லாமே மக்கள் மனமுவந்து செய்தது! வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.10 லட்சம் (மட்டுமே!) தந்த சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், 'இது தானா சேர்ந்த கூட்டம்!'

மழை, வெள்ளம், மின்சார வெட்டு, போக்குவரத்து துண்டிப்பு, தொலைபேசிச் சேவை முடக்கம், நிவாரண உதவிகளில் பங்குபோட வந்த கட்சிக்காரர்களின் தொல்லைகள் எனப் பல இன்னல்களையும் மீறி இன்று சென்னை மீண்டெழுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

தன்னார்வலர்கள்!

கடலூர் மாவட்டம் பேரிடர் மையத்துக்குள் இருப்பது பலரும் அறிந்ததே. அதனால் அங்கு பேரிடர்கள் எதிர்பார்க்கக் கூடியவையே. அதேபோல உதவிக்கரங்கள் வருவதும் எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனால் தலைநகர் சென்னையின் விஷயம் வேறு. 100 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் வெள்ளம் வருமளவுக்கு மழை. சுமார் 270 பேர் பலி. பல கோடி ரூபாய் இழப்பு. இந்தக் காரணங்களே சென்னையை 'பேரிடர் மையமாக' அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்குப் போதுமானதாக இருந்தன‌.

அதேபோல 'சிட்டியில இருக்குறவங்களுக்கு மனசாட்சியே இல்லப்பா' என்ற வாதமும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் சென்னைக்கு இவ்வளவு ஊடக வெளிச்சம்!

வெள்ளத்தில் சென்னை தத்தளித்த நேரத்தில், சத்தமில்லாமல் கடந்து போயிருக்கிறது 'சர்வதேச தன்னார்வலர்கள் தினம்'. மக்களின் மேம்பாட்டுக்காக எந்தப் பிரதிபலனும் இல்லாது, இதுபோன்ற பேரிடர் காலங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மக்கள் ஆர்வமாக முன் வந்து தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும். இந்த எண்ணத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் 1985ம் ஆண்டு 'சர்வதேச தன்னார்வலர்கள் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி தன்னார்வலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, யாரும் சொல்லாமலேயே அந்த தினம் இளைஞர்கள் பலரால் அவர்களுக்கே தெரியாமல் கொண்டாடப்பட்டுள்ளது. இதற்காகவேனும் மழைக்கு நாம் நன்றி சொல்லலாம்!

வெள்ள நிவாரணப் பணிகளில் வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் ஈடுபட்டனர். அவர்களில் சரிபாதிப் பேர் இளைஞர்கள். அவர்களுக்கு எந்த அமைப்பும் இல்லை. சின்னங்கள் அச்சிடப்பட்ட எந்த டி-ஷர்ட்டுகளும் இல்லை.

இங்கு ரீசார்ஜ் செய்ய முடியாமல் போனபோது, பல இளைஞர்கள் வெளியூர்களிலிருந்து தங்களின் நண்பர்களுக்கு ரீசார்ஜ் செய்தனர். ஏ.டி.எம்.கள் காய்ந்து கிடந்தபோது, பலரும் பணம் கொடுத்து உதவினர். நண்பர்களின் உதவியோடு டெம்போக்கள் பிடித்து வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினர். தங்களின் கார்களில் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு வந்து விநியோகித்தனர்.

சேற்றில் சிக்கிய மாநகராட்சி துப்புறவு லாரியை மீட்பதற்குக் கைகொடுக்கின்றனர். போர்வைகள் வழங்குகிறார்கள். அதிகளவில் பணம் செலவழிக்க முடியாத வளரிளம் பருவத்தினர் பலர், கேன்களில் பால் நிரப்பிக் கொண்டு வந்து குழந்தைகளுக்கு விநியோகித்தனர்.

இதுபோன்ற சின்னச் சின்ன உதவிகளால்தான் இன்று மறுவாழ்வுக்குத் திரும்புகிறது சென்னை. நமது விரல்கள் இதுபோன்ற செயல்களை சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதற்கு மட்டுமல்லாமல், களத்தில் உதவுவதற்கும் நீளட்டும்!

மழை பெய்யட்டும். மனிதம் மலரட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x