Last Updated : 11 Dec, 2015 12:24 PM

 

Published : 11 Dec 2015 12:24 PM
Last Updated : 11 Dec 2015 12:24 PM

உலகம் அழிந்துபோகாததற்கு இவர்கள்தான் காரணம்!

சென்னை மழை வெள்ளத்தின் தாண்டவம் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்வதற்குள் அநேகமாக சென்னையில் இருந்த அனைவரும் இந்தப் பேரிடருக்குள் சிக்கிக்கொண்டு தள்ளாடினோம்; தள்ளாடிக்கொண்டிருக்கிறோம்; தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறோம், முற்றிலும் வீழ்ந்துபோய்விடவில்லை. இதற்குக் காரணம் மழை, வெள்ளத் தாண்டவத்தின் உக்கிரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மனிதநேயத்தைக் காட்டியவர்கள்தான்.

பெரிய பெரிய விஷயத்துக்கெல்லாம் போகத் தேவையில்லை. மழை ஓய்ந்த பிறகு, நீரின் முற்றுகையில் நான்கு நாட்கள் தவித்த பிறகு நண்பர் ஒருவர் மடிப்பாக்கத்தில் மூழ்கிய தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்குக் கிளம்பி நடந்துவந்துகொண்டிருக்கிறார். அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பின்னால் ஒரு கார் வந்து நிற்பதுபோல் தோன்றியிருக்கிறது. திரும்பிப் பார்த்தால் காரிலிருந்து யாரோ ஒருவர் இறங்கிச் செல்வது தெரிந்திருக்கிறது. நண்பர் மேற்கொண்டு தன் வழியைப் பார்த்து நடந்து சென்றிருக்கிறார். கார் ஹாரன் சத்தம் கேட்டிருக்கிறது. நண்பர் ஓரமாக நடக்க முயன்றிருக்கிறார். அவரைச் சற்றுக் கடந்து பக்கவாட்டில் வந்து நின்றிருக்கிறது கார்.

கார்காரர் காரின் ஜன்னலை இறக்கிவிட்டுப் பாதசாரி நண்பரை அழைத்து “எங்கே போகணும் சொல்லுங்க, இறக்கிவிடுகிறேன்” என்றிருக்கிறார். நண்பருக்கு பேச்சே வரவில்லை. காருக்குள் ஏறிப் பின்சீட்டில் அமர்ந்துகொள்கிறார். நம்மிடம் இந்தச் சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டபோது நண்பர் இப்படிச்சொன்னார், “இதுபோன்ற ஒரு உதவியை இதற்கு முன் செய்தது ஒரு மீன்பாடி வண்டிக்காரர்தான். நடு இரவில் குழந்தைகள் மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றுவிட, என்ன செய்வதென்று நின்றுகொண்டிருந்தபோது அந்த வழியே வந்த மீன்பாடிக்காரர் தானாகவே வந்து, என்ன விஷயம் என்று கேட்டு உதவி செய்தார். அடித்தட்டு மக்கள் எப்போதும் அப்படித்தான். அதில் எந்த அதிசயமும் இல்லை.

ஆனால், மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தானாக லிஃப்ட் கொடுக்கும் அதிசயத்தை நிகழ்த்தியது இந்த மழை, வெள்ளம்தான். காரில் உட்கார்ந்த பிறகுதான் உணர்ந்தேன், எனக்கு முன்னாலும் அவர் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்து இறக்கி விட்டிருக்கிறார்.”

காரில் லிஃப்ட் கொடுப்பது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இந்த மழை, வெள்ளம் சமூகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாய்ந்து, அதன் உள்ளே புதைந்துபோயிருந்த பரிவுணர்வையெல்லாம் எந்த அளவுக்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு பருக்கை பதம் இது.

சிறிய அளவில் இப்படியென்றால் பெரிய அளவில் எத்தனையோ பேர் என்னவெல்லாமோ செய்து, ஏதும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களையெல்லாம் குற்றவுணர்வு கொள்ளவும் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் முகமற்றவர்கள். அதாவது, சமூகத்தால் அறியப்படாதவர்கள் என்பதுதான் மகத்தான செய்தி. உதவி செய்ய வந்தவர்களின் முகத்தில் மனிதம் என்ற ஸ்டிக்கரைத் தவிர வேறு ஏதும் ஒட்டப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் கவனித்தாக வேண்டும். முகம் தெரிந்த மனிதர்களுக்குச் சளைக்காமல் முகம்தெரியாத மனிதர்கள் எத்தனையோ பேர் எவ்வளவோ உதவிகளைச் செய்து தமிழக, இந்திய மக்களை மட்டுமல்ல உலகத்தினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

அடையாறுக்குப் பக்கத்தில் மழை, வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப் பட்டிருக்கும் பகுதியொன்றில் ஒருவர் தனது முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, பெரிய பாத்திரத்தில் சூடாகப் பால் காய்ச்சிக்கொண்டு, தண்ணீரில் கவனமாக நடந்துசென்று சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் விநியோகித்திருக்கிறார். அவர் யார் என்ன என்று கேட்டதற்கு, “அதெல்லாம் முக்கியமில்லாத விஷயம், நான் போய் இன்னும் பால் எடுத்துவருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். மனிதத்துக்கு சாதி, மதம், மொழி மட்டுமல்ல முகமும் கிடையாது என்பதை அவர் நிரூபித்துவிட்டிருக்கிறார்.

இதுவரை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவராத தியாகம் அடுத்த நபருடையது. இன்னொரு நண்பர் சொன்ன தகவல். சாலையை மூழ்கடித்த வெள்ளத்தில் காரில் அவர் போய்க்கொண்டி ருந்தபோது ஒரு முஸ்லீம் பெரியவர் நடுச் சாலையில் கையில் ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இறங்கி என்னவென்று விசாரித்த அந்த நண்பருக்குக் கண்கலங்கிவிட்டது.

சாலையின் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டுவிட்டது என்றும், யாரும் அதற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதால் அடையாளத் துக்காகச் செடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்றும் அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். ஊன்றிவிட்டு நீங்கள் போயிருக்கலாமே என்று நண்பர் கேட்டதற்கு, ஓடும் நீரில் செடி நிற்க மாட்டேன் என்கிறது, அதனால்தான் அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்று அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல நண்பர்களே, அடுத்து வரும் விஷயம் தான் நம்மை மிக மிக அற்பர்களாகவும், அந்த முஸ்லீம் பெரியவரை மகாத்மாவாகவும் ஆக்குகிறது.

நண்பரிடம் அந்தப் பெரியவர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘கடந்த நான்கு மணி நேரமா நான் இப்படி நின்னுக்கிட்டிருக்கேன். யாராச்சும் பார்த்துக்குவாங்கனு அப்படியே விட்டுட்டுப் போவ மனசே வரல.”

அந்தப் பெண்மணியின் வீட்டை வெள்ளம் முழுவதுமாக மூழ்கடித்துவிட்டது. கணவர், குழந்தைகளெல்லாம் எங்கெங்கோ தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அலுவலகம் ஒன்றில் துப்புரவுப் பணியைச் செய்துவருபவர் அவர். எல்லாவற்றையும் இழந்திருக்கும் நிலையில் அப்படியே சும்மா இருந்துவிட முடியுமா? பிழைப்பு நடத்தியாக வேண்டுமல்லவா! அலுவலகம் வந்துகொண்டிருக்கிறார்.

வேலை முடிந்த பின் எங்கே செல்வீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, “வீட்டுக்குத்தான்” என்று பதில் வந்தது. இந்த நிலையில் வீட்டுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டால், “பாவங்க, ஏழு தெருநாய்களுக்கு நான்தான் சோறு போட்டு வளக்குறேன். நான் இல்லாட்டி அதுங்க அவ்வளவுதான். அதுங்களுக்காக நான் அங்க போய்த்தானே ஆவணும்.”

அதே போல் ஹிப்ஹாப் தமிழன் பகிர்ந்துகொண்ட செய்தி இது: “வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம்-ஆர்.ஏ.புரம் பகுதிக்கு நடுவில்தான் இருக்கிறது எங்கள் அலுவலகம். 5 நாட்களாக இங்கு மின்சாரமோ தொலைத்தொடர்போ இல்லாததால் என்ன நடக்கிறது என்றுகூட தெரிந்துகொள்ள முடியாத சூழல். நாங்கள் வசிக்கும் தெருவில் மட்டும் நீர் தேக்கம் சற்று குறைவு.

சரி தப்பித்துவிட்டோமே, கிளம்பிவிடலாமா என நினைத்துத் தெருமுனைக்குச் சென்றால், எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணிப்பெண் விஜயா அக்கா ஒரு பெரிய பாத்திரத்தில் தன்னிடம் இருந்த அனைத்துப் பொருள்களையும் சமைத்துக்கொண்டிருக்கிறார். “தம்பி ஏரியா பூரா தண்ணிபா, நம்ம ஸ்டூடியோல இருக்குற தண்ணி கேனை எடுத்துக் குடுத்துறலாமா” எனக் கேட்கிறார். இதில் அவர் மகளுக்கு 1 வாரமாக டைஃபாய்டு வேறு. செருப்பால் அடித்ததுபோல் இருந்தது. யார் இவர்? எதற்காக இந்தச் சமூகத்திற்கு இவ்வளவு செய்ய வேண்டும்? இதில் நாம் வேறு கோவை கிளம்பிவிடலாமா என யோசித்திருக்கிறோமே. ச்சீ என்று தோன்றியது.’

இவர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகத்தாலும் தினசரி சூறையாடப்பட்டுக்கொண்டிருக்கும் வாழ்வு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களுடையது. ஆனால், அந்த நிலையிலும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் ஒரு நாள் பட்டினி கிடந்து சென்னைக்கு நிவாரணமாக ஒரு லட்சம் அனுப்பியிருக்கிறார்கள். சமூகத்தால் கொஞ்சம் கூட பொருட்படுத்தப்படாதவர்கள் நரிக்குறவர் இன மக்கள். இந்நிலையில் அவினாசியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் வெள்ள நிவாரணத்துக்காக 100 பாய்களை வழங்கியிருக்கிறார்கள்.

இருப்பவர் கொடுப்பதைவிட இல்லாதவர்கள் கொடுப்பது அளவில் எவ்வளவு சிறிதானாலும் மதிப்பில் கோடி கோடி மடங்கு உயர்ந்தது என்பதைப் பாலியல் தொழிலாளிகளும் நரிக்குறவர்களும் நிரூபித்திருக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் ‘மகாத்மா’ குணம் உறைந்திருக்கிறது. ஆனால், அதை உசுப்பிவிட்டு உயிர் கொடுத்திருப்பது இவர்கள் மட்டும்தான். ஆகவே, இவர்களை ‘மகாத்மாக்கள்’ என்று அழைப்பதில் எந்தத் தவறுமில்லை.

சென்னை வீழ்ந்துபோகாததற்கு மட்டுமல்ல, உலகம் இன்னும் அழிந்துபோகாததற்கும் இந்த மகாத்மாக்கள்தான் காரணம். ஏனென்றால், இன்னொரு மகாத்மா இப்படிச் சொல்லியிருக்கிறார்: “இன்று உலகில் எண்ணற்ற மக்கள் உயிரோடிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள், உலகம் தொடர்வது ஆயுத பலத்தினால் அல்ல. மாறாக உண்மை அல்லது அன்பு ஆகியவற்றின் பலத்தினால்தான் என்று பொருள். இத்தனை யுத்தங்கள் நடந்த பின்னரும் உலகம் அழியவில்லை என்பதே இந்த சக்திகளின் மறுக்க முடியாத வெற்றி.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x