Published : 04 Dec 2015 04:32 PM
Last Updated : 04 Dec 2015 04:32 PM
‘இனி உங்க வீட்டுக்கு முன்னாடியே படகையும் பார்க் பண்ணிக்கலாம்' என்று எந்த டி.வி.சேனலிலாவது ரியல் எஸ்டேட் பார்ட்டிகள் கூவி விடுவார்களோ என்று 'ஷாக்' ஆகிற அளவுக்கு சென்னையை அடித்துத் துவைக்கிறது மழை.
இந்த ரணகளத்திலும், ரமணம் மீம்ஸ், ரெய்ன் ஹேஷ்டேக்ஸ் என 'கிச்சு கிச்சு' மூட்டும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் நம்ம ஊர் நெட்டிசன்கள். (அடேய்... செவ்வாய்க்கு மங்கள்யானை அனுப்பக் கூட விஞ்ஞானிகள் உங்க அளவுக்கு யோசிச்சிருக்க மாட்டாங்கடா!)
தமிழகத்தில் பெய்த மழை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கைத் தாண்டி இப்போது யூட்யூப்பையும் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வரியிலும் அதிர்ச்சியைக் காட்டும் பின்னணிக் குரல், கலகலப்பான மொழிமாற்றம், அசாத்தியமான பயணங்கள் என்று கலக்கிய டிஸ்கவரி தமிழின் 'மேன் vs வைல்ட்' நிகழ்ச்சியை உல்டா செய்து, பெப்பர் தூவி, 'மேன் vs ரெய்ன்' ஆக்கப்பட்டுள்ளது.
4 நிமிடம் ஓடுகிற அந்த வீடியோ, யூட்யூப்பில் பதிவேற்றப்பட்ட 3 நாட்களில் 45 ஆயிரம் பார்த்துள்ளனர். இப்போது ஒரு லட்சம் லைக்குகளை நோக்கி பயணிக்கிறது 'மேன் vs ரெயின்'.
'சென்னையில இன்னைக்கு நம்ம பயணம், வேளச்சேரியில' என்று சொல்லிக்கொண்டே முழங்கால் அளவுக்கு பேன்ட்டை மடக்கி விட்டுக்கொண்டு சாலையில் தேங்கிய நீருக்குள் ‘தொபுக்'கென்று குதிக்கும் ராதா மனாளன், போகிற போக்கில் பேசுகிற வசனங்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன.
‘சென்னையின் மிக ஆபத்தான நீர்நிலைகள்’, ‘பாம்பு, பூரான் போன்ற ஜீவராசிகள்’, ‘எனக்கு இப்போ சக்தி தேவைப்படுது’ என்று பியர் கிரில்ஸ் பேசிய வசனங்களை அச்சு அசலாகப் பேசி அசலுக்கே டஃப் கொடுத்திருக்கிறார் ராதா மணாளன். இதற்கு முன்பு ராண்டி என்ற பெயரில் ரேடியோ ஜாக்கியாக அறியப்பட்ட அவர், இந்த வீடியோவுக்காக டி.ஆர். ஸ்டைலில் எழுத்து, இயக்கம், நடிப்பு என பெரும்பாலான வேலையை தானே செய்திருக்கிறார்.
‘ரமணன் சொன்னா ஸ்கூலுக்குத்தான் லீவு விடுவாங்க. ஆஃபீஸுக்கு விட மாட்டாங்க. ஆஃபீஸ் போனா தான், இஎம்ஐ, கிரெடிட் கார்டு எல்லாம் கட்ட முடியும். வாங்க நாம ஆபீஸ் போகலாம்’ என்று அவர் அழைக்கும் போது சிரித்து மாள முடியவில்லை.
ஒரு டாஸ்மாக் மது பாட்டிலை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ‘இங்கே மனித நடமாட்டம் இருக்குது. எனக்கு உணவு கிடைக்கும்னு நம்பிக்கை வந்துருக்கு’ என்று அவர் சொல்லும் போது பாவி மக்கா ‘எப்புடியா சிரிக்காமலேயே இப்புடிப் பேசுற' என்றே தோன்றும்.
‘நாம் இப்போ நிக்குற ஏரி, வேளச்சேரி’ என்று அங்கங்கே சமூக அவலங்களையும் சுட்டிக்காட்டி, ‘ஆங்ரி' ஸ்மைலி போடுகிறார். ‘சென்னை வாசிகள் கார் வாங்குவதற்குப் பதிலாக ஒரு படகு வாங்கி வச்சுக்கங்க' என்று அடுத்த மழையிலிருந்து தப்பிக்க யோசனை கூறும் அவரிடம் பேசினோம்.
மழையின் காரணத்தால் கடந்த வாரம் ஏற்பட்ட ட்ராபிக் ஜாம் ஒன்றின் போது தோன்றிய கன நேர ஐடியா தான் ‘மேன் vs ரெயின்' வீடியோவாக உருவெடுத்திருக்கிறதாம். ‘சமூகத்துக்குச் சிரிக்க சிரிக்க கருத்து சொல்லனும் பாஸ்' என்று புறப்பட்டிருக்கும் ராதா மணாளன் கூறும்போது, "இதுக்கு முன்னாடியே யூட்யூப்ல 2 வீடியோ 'அப்லோட்' செஞ்சோம். ஆனா, யாரும் அத பெருசா சீண்டல. ஆனால், இந்த ‘மேன் vs ரெயினு'க்கு நல்ல வரவேற்பு இருக்கு. இப்போ, கூடுதலா 2 வீடியோ தயாரா இருக்குது. சீக்கிறமே அதயும் யூட்யூப்ல பாருங்க' என்கிறார்.
வீடியோவை பார்க்க: >http://bit.ly/1MXywTZ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT