Published : 18 Dec 2015 04:11 PM
Last Updated : 18 Dec 2015 04:11 PM

‘பெரியவங்களை விடுங்க... குழந்தைங்ககிட்ட பேசுங்க!

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. மாணவர்கள் மத்தியில் கதை சொல்ல ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி. குமார் ஷா, கதை சொல்லச்சொல்ல லயித்து ரசித்துக் கேட்கிறார்கள் மாணவர்கள். கொக்கு, நாய், யானைகளுடன் மாணவர்களையும் கதாபாத்திரமாக்கி, ‘ஆன் த ஸ்பாட்’டில் நடிக்க வைத்து, கைதட்டல் வாங்கவைத்து மகிழ்ச்சிப்படுத்துகிறார்.

கதையில், ஒவ்வொரு காட்சிக்குப் பிறகு அடுத்து என்ன வரும் என மாணவர்களை எழுதச் சொல்கிறார். இன்னும் சிலரிடம், மொத்தக் கதைக்கான ஓவியத்தை வரையச் சொல்கிறார். ஒரு மணி நேரம் மட்டுமே கதை சொல்லப் பள்ளியில் அனுமதி அளித்திருந்த நிலையில், நாள் முழுவதும் கரை புரண்டோடும் உற்சாகத்துடன் கதை கேட்க வைக்கிறார்.

குழந்தைகள் மீது கரிசனமும் பேரன்பும் கொண்டிருக்கும் அதேவேளையில் பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியோர் அளிக்கத் தவறிய‌ வாய்ப்பை, தனது கதை சொல்லல் நிகழ்ச்சிகள் மூலம், குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருகிறார் குமார்ஷா.

இவர் தன் சொந்தக் கதையை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

"சொந்த ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்கம். ப‌ட்டக்குளம். அப்பா எங்க குடும்பத்தை விட்டு எங்கோ போயிட்டார். அம்மாதான் உலகம். ஒரே பையன். பல ஊர்கள்ல இருக்கிற‌, மாணவர் இல்லத்தில், தங்கிப் படிச்சேன். சென்னையில இன்ஜினியரிங் முடிச்சேன்.

காலேஜ் டைம்ல, ஃப்ரெண்ட்ஸோடு சேர்ந்து ஒவ்வொரு வாரமும் முதியோர் இல்லங்களுக்குப் போவோம். அங்க இருக்குற தாத்தா பாட்டிகளைக் குளிப்பாட்டுறது, அவங்க ரூமை சுத்தப்படுத்துறதுனு சின்னச் சின்ன விஷயங்கள் பண்ணிட்டிருந்தோம்.

2011-‍ம் வருஷம். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பக்கத்துல இருக்குற செஞ்சி அம்மன் நகர் அப்படிங்கிற‌ கிராமத்துல, பல குழந்தைங்க பள்ளிக்குப் போகாம இடையில நின்னுட்டதா தகவல் கிடைச்சுது. ஏன்னு விசாரிச்சப்போ, அங்க டீச்சர்ஸ் சரியா வர்றதில்லைன்னு தெரிஞ்சுது.

2011-‍ம் வருஷம். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பக்கத்துல இருக்குற செஞ்சி அம்மன் நகர் அப்படிங்கிற‌ கிராமத்துல, பல குழந்தைங்க பள்ளிக்குப் போகாம இடையில நின்னுட்டதா தகவல் கிடைச்சுது. ஏன்னு விசாரிச்சப்போ, அங்க டீச்சர்ஸ் சரியா வர்றதில்லைன்னு தெரிஞ்சுது.

அப்போ, சுபாஷ்ங்கிற நண்பரோட சேர்ந்து அங்க தினமும் சாயந்திரம், குழந்தைகளுக்கு டீயூஷன் எடுக்க ஆரம்பிச்சோம். அங்க இருக்குற எல்லாக் குழந்தைகளையும் ஒருங்கிணைக்கிறதுக்காக‌க் குழந்தைகள் திருவிழா நடத்துனோம். அப்ப‌ குழந்தைகளுக்குக் கதை சொல்ல ஆரம்பிச்சேன். அது எல்லோருக்கும் பிடிச்சுப்போச்சு. இன்னிக்கு அதுவே நம்ம வாழ்க்கை ஆயிடுச்சு.

இன்னிக்குப் பல வீடுகள்ல, நைட் தூங்கப் போறப்போ நிறைய‌ குழந்தைங்க‌, ‘அப்பா கதை சொல்லுப்பா'ன்னு கேட்கும். ஆனா பெத்தவங்க ‘பேசாம படுமா... காலையில அப்பா ஆபீஸ் போகணும். நீ ஸ்கூலுக்கு போகணும்'னு சொல்றதுதான் யதார்த்தமா இருக்கு.

இது மிகப் பெரிய வன்முறைன்னே சொல்லலாம். குழந்தைங்களோட‌ பேசணும். அவங்களைப் பேசவெச்சு, நாம கேட்கணும். அவங்களோடு எப்பவும் ஒரு உரையாடல் இருந்துக்கிட்டே இருக்கணும். ஆனா குழந்தைங்க பேசுறதைக் கேட்க தாய், தந்தைக்கு நேரம் இல்லை. தாத்தா, பாட்டி வீட்டில் இல்லை. இந்த நிலையில‌, குழந்தைகளையே பேசவெச்சு, அவங்க‌ளைக் கதைகள்ல‌ கேரக்டர்களாக மாத்தி, கதை சொல்லிட்டுவர்றேன். அது, அவங்களுக்குப் பிடிக்குது. குழந்தைங்க‌ளை நாம் மதிக்கக் கத்துக்கணும். டீச்சர்ஸ் எல்லாம் பாடம் நடத்துவாங்க‌. ஆனா, குழந்தைங்க கூப்பிட்டுப் பேச மாட்டாங்க.

குழந்தைங்க‌ளுக்கும், கதை சொல்றவ‌ருக்கும் தொடர்ந்து உரையாடல் நடக்கும். ஒயிலாட்டம், பொம்மலாட்டம், பெயிண்டிங்னு விதவிதமா, குழந்தைங்க‌ளுக்குப் பிடிச்ச மாதிரி கதை சொல்லும்போது, அது இன்னும் அவங்க‌ மனசுல‌ ஆழமாப் பதியும். என்னைப் பொறுத்தவரை பெரியவங்ககிட்டப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. வளர்ந்த மரத்தை நாம ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா, புது மரக் கன்றை எங்க வெச்சா நல்லா வரும்னு தெரியும். அதனாலதான், குழந்தைங்ககிட்ட கதை சொல்றது மூலமா விடாம பேசிக்கிட்ட்டிருக்கேன்.

கதை சொல்றப்போ குழந்தைங்க நிறைய கேள்வி கேட்குங்க. பதில் தெரிஞ்சா, உடனே சொல்லிடுவேன். தெரியலைன்னா, அதையும் சொல்லிடுவேன். பெரியவங்க‌ ஈகோ இல்லாம இருக்குற‌து குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

கதை சொல்றப்போ குழந்தைங்க நிறைய கேள்வி கேட்குங்க. பதில் தெரிஞ்சா, உடனே சொல்லிடுவேன். தெரியலைன்னா, அதையும் சொல்லிடுவேன். பெரியவங்க‌ ஈகோ இல்லாம இருக்குற‌து குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

'எப்போ பாரு, கார்ட்டூன் சேனலையே பார்த்துக்கிட்டிருக்குது, இல்லைன்னா மொபைலை நோண்டிக்கிட்டிருக்குது'னு குழந்தைங்க மேல பெத்தவங்க புகார் வாசிக்கிறதுக்குக் காரணம் பெத்தவங்க மட்டும்தான். அதுல குழந்தையோட தப்பு எதுவும் இல்லை. எந்தக் குழந்தையும் இந்த சேனல்தான் பார்க்கணும், இந்த‌ போன்தான் வேணும்னு கேட்கிறதில்லை. நாம‌தான் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்துறோம்.

பெத்தவங்களும் சரி, டீச்சர்ஸும் சரி, குழந்தைங்களைப் புரிஞ்சுக்கிட்டு, அவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவங்ககிட்ட கொஞ்ச நேரம் மனசு விட்டுப் பேசுனாலே குழந்தைங்க‌ மீதான வன்முறை, நம்ம‌ சமூகத்தில இருந்து நீங்கும்” என்கிறார், தன்னை நோக்கி ஓடி வரும் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x