Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM
கலை-வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ச. பாலுசாமி, மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபம் சிற்பத்தொகுதியில் புல்லாங்குழல் வாசிக்கும் ஆயன் (மேய்ப்பன்) பற்றி ஒருமுறை விவரித்தபோது பளிச்சென்று ஒரு விஷயத்தைப் புலப்படுத்தினார் – ‘தமிழர்களால் இசையின்றி வாழ முடியாது’.
தமிழர்களின் வரலாறு, வரலாற்றுச் சின்னங்கள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் இசை தொடர்ந்துகொண்டே வந்துள்ளது. இன்றைக்குப் பேருந்துகள், ரயில்களில் மக்கள் காதில் இயர்போனை மாட்டிக்கொண்டும், திருவிழாக்களில் ஸ்பீக்கர்களிலும் பாடலையோ இசையையோ கேட்டுக்கொண்டிருப்பதையும் நினைத்துப் பாருங்கள்.
யோசித்துப் பார்க்கும்போது நாம் முழுமையாக உணராத ஒரு பேருண்மை இது. ரசனைகள் மாறலாம், ஆனால், ஏதோ ஒரு வகையில் எல்லோருக்கும் இசை தேவையாக இருக்கிறது. இசையை ரசிப்பதற்கு உரிய இலக்கணப் பயிற்சி இல்லையே என யாரும் கவலைகொள்வதில்லை. குழந்தைகள் இலக்கணம் கற்றுக்கொண்ட பிறகு பேசத் தொடங்குவதில்லை. பேசிப்பேசியே ஓர் இலக்கண முறைமைக்குள் வந்துவிடுகிறார்கள். அது போலவே, இசையின் மீதான ஆர்வமும் தொடர் முயற்சியும் ரசனையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நம்மை இழுத்துச் சென்றுவிடுகின்றன.
ஜுகல்பந்தி
இசை மட்டுமின்றி நடனம், காட்சி ஊடகம்.. ஒரு வார்த்தையில் சொல்வதானால் கலை. கலை சார்ந்து நம்முடைய விருப்பங்கள், தேர்வுகள், பார்வைகள், ரசனைகள் வேறு படலாம். ஆனால், கலைகள் இன்றி வாழ முடியுமா? ஒருவருக்கு நாட்டுப்புற இசை பிடிக்குமென்றால், இன்னொருவருக்கு சொல்லிசை (பாப்), வேறொருவருக்குக் கர்னாடக சங்கீதம் எனப்படும் சாஸ்திரிய இசை, திரையிசை, இந்துஸ்தானி, கருவியிசை… இப்படி எத்தனையோ இசை வகைமைகள் உள்ளன.
இடையில் ஒரு காலத்தில் ரீமிக்ஸ் பாடல்கள் படம்தோறும் இடம்பெற்றன. நல்லவேளையாக இன்றைக்கு அவை குறைந்துவிட்டன. ஒரு காலத்தில் திரையிசைக்காகப் பாடப்பட்ட பாட்டை அப்படியே அச்சு அசலாகப் பிரதியெடுப்பது பெரிதாகக் கருதப்பட்டது. இன்றைய சமூக ஊடகக் காலத்தில் கவர் வெர்ஷன்கள், ஒரு பாட்டை வெவ்வேறு பரிமாணங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் பாடுதல், கருவிகளிலேயே முழுப் பாடலையும் வாசிப்பது என மாறிவருகிறது.
கிராமி விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் பாடகர் எட் ஷீரனின் ‘ஷேப் ஆஃப் யு’ பாடலுக்குக் கர்னாடக இசைப் பாணி கவர்வெர்ஷன்வரை வந்துவிட்டது. அது ரசிக்கக்கூடியதாகவும் இருக்கிறது என்பதுதான் இதில் சிறப்பு.
காட்சிக் கலைகள்
ஏதோ ஒரு வகையில் சமூக ஊடகங்கள் வழியாகக் காட்சிக் கலைகள் தொடர்ந்து நம்மை வந்தடைவதைப் பற்றியும், ‘கலைடாஸ்கோப்’ பகுதியில் பார்ப்போம். கவர் வெர்ஷன்களாக, குறும்படங்களாக, ஆந்தாலஜி/சீரீஸ் எனப்படும் தொகுப்பு/தொடர் படங்களாக, இசையின் நுணுக்கங்களை எளிமையாக உணர்த்துபவையாக எனப் பல்வேறு வகைகளில் காட்சிக் கலைப்படைப்புகள் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. சற்றே நிதானமாகவும் கவனமாகவும் தேடினால், தனிச் சேகரிப்பில் இடம்பெறக்கூடிய சில கூழாங்கற்கள், கிளிஞ்சல்கள் இவற்றில் கிடைக்கவும்கூடும். நம் நினைவலைகளைத் தட்டியெழுப்பவும் அசைபோடவும் வைக்கும் சில படைப்புகளை அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment