Last Updated : 18 Dec, 2015 04:35 PM

 

Published : 18 Dec 2015 04:35 PM
Last Updated : 18 Dec 2015 04:35 PM

சிட்னி ‘ராக்ஸ்!

சிட்னி மார்டினைப் பற்றி ஒரு ‘மைக்ரோ' அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்... சிட்னி ‘ராக்ஸ்!' காரணம் அவர் செய்யும் கல் மாலைகள் அத்தனையும் கொள்ளை அழகு.

எதிர்காலம் பற்றிய கனவுகளோடும் திட்டமிடல்களோடும் ஜாலியாக இருக்க வேண்டிய கல்லூரிப் பருவத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தம் தொடர்பான ஆபத்தான நோய்களின் மருத்துவ ஆராய்ச்சிகளுக்காகச் சுமார் 3 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்து உயர்ந்த மனுஷியாக நிற்கிறார் இந்த 18 வயது சிட்னி..

அமெரிக்காவில் வசிக்கும் சிட்னி, அடிக்கடி மிச்சிகன் ஏரிக்குச் செல்வார். ஏரிக்கரையில் தட்டையான, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட கற்கள் அவரை ஈர்க்கும். 8 வயதிலேயே கற்களில் துளையிட்டு, ஒரு கயிற்றில் கட்டி, கழுத்தில் அணியும் மாலையாக மாற்றினார். சிட்னியின் கல் மாலைகளை அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் ஆர்வத்துடன் அணிந்து கொண்டனர்.

10 வயதில் சிட்னிக்கு உடல் நலம் குன்றியது. ரத்தம் தொடர்பான எல்.சி.ஹெச். (Langerhans cell histiocytosis) நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளை அணுக்கள் நோய்களை எதிர்த்து நிற்கக்கூடியவை. ஆனால் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் சில இடங்களில் சேரும்போது நோயாக மாறிவிடுகின்றன. இதனால் தோலில் கடுமையான அரிப்பு, எலும்புகளில் ஓட்டை, உறுப்புகளில் பாதிப்பு போன்ற விளைவுகள் ஏற்படும். 2 லட்சம் குழந்தைகளில் ஒருவரை இந்த நோய் தாக்குகிறது. இதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதிகம் செலவு பிடிக்கக்கூடிய மருத்துவம் தேவைப்படும்.

துன்பமான நேரம்…

"3 வாரங்களில் ஸ்கேன், பயாப்ஸி போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. 4 அறுவை சிகிச்சைகள், கீமோதெரபி என்று 6 மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது.

தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டேன். கொடூரமான நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டேன். அதற்குப் பிறகே நோயைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.

உடனே என்னைப் போல பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். அன்று எனக்குத் தெரிந்த ஒரே தொழில் கல் மாலை செய்வதுதான். அதையே அதிக அளவில் செய்து பள்ளியிலும் கடைகளிலும் விற்பனை செய்துவந்தேன். மிகச் சிறிய தொழிலாக இருந்தாலும் இதில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன்" என்கிறார் சிட்னி.

உதயமான அறக்கட்டளை

சின்னஞ்சிறு பெண் நல்ல காரியத்துக்காக கல் மாலைகளை விற்பது கொஞ்சம்கொஞ்சமாக வெளியில் பரவியது. மக்கள் ஆர்வத்துடன் மாலைகளை வாங்கிச் செல்ல ஆரம்பித்தனர். ‘சிட் ராக்ஸ்' என்ற பெயரில் விற்கப்பட்ட மாலைகள், ‘ராக்ஸ் ஃபவுண்டேஷனாக' மாற்றம் அடைந்தது.

"கற்களில் ஒரு துளை போட்டு, கயிற்றால் முடிச்சு போட்டால் மாலை தயார். முடிச்சு போடுவதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு மாலையும் என் கைகளால்தான் உருவாகிறது. எல்லோரையும் இந்தக் கல் மாலை ஈர்க்காது. ஆனால் நல்ல காரியத்துக்காக என்பதால் ஆர்வத்துடன் வாங்கிக்கொள்கிறார்கள். இதற்காகச் சிறப்பு முகாம்கள் கூட நடத்துகிறோம். தன்னார்வலர்கள் கற்கள் சேமிப்பிலும் மாலை செய்வதிலும் உதவுகிறார்கள்.

எட்டே ஆண்டுகளில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் சேமித்துவிட்டோம். இந்த நிதியில் இருந்து எத்தனையோ குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. நோய் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன" என்கிறார் சிட்னி.

8 ஆண்டுகளுக்கு முன்பு 3 கோடி ரூபாய் நிதி திரட்டும் லட்சியத்தில் ‘சிட் ஃபவுண்டேஷனை' ஆரம்பித்தார் சிட்னி. இன்னும் 20 லட்சம் ரூபாய் சேர்த்துவிட்டால் அவரது இலக்கை அடைந்துவிடுவார்!

உயிரியல் படித்து வரும் சிட்னிக்கு, நடனம் மீதும் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கான ஓர் அமைப்பையும் ஆரம்பித்து நடத்திவருகிறார். சிகாகோவில் இருக்கும் லூரி குழந்தைகள் மருத்துவமனையில் ஆலோசனைக் குழுவில் இருக்கும் சிட்னி, விடுமுறை நாட்களில் மருத்துவமனையில் சேவை செய்துவருகிறார்.

தொடரும் பணி…

"எனக்கு யாராவது உதவவில்லை என்றால் இன்று நான் இந்த உலகத்தில் இருந்திருக்க மாட்டேன். அதை யோசித்தபோது உருவானதுதான் நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவி செய்யும் திட்டம். அதுவும் என் கைகளால் அதைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். ‘சிட் ராக்ஸ் ஃபவுண்டேஷன்' எட்டே ஆண்டுகளில் இவ்வளவு பெரிய அளவுக்கு வளர்ந்ததில் மகிழ்ச்சி. எத்தனையோ ஆயிரம் நல்ல உள்ளங்களால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. எல்.சி.ஹெச். நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை நிதி திரட்டுவதை நிறுத்தப்போவதும் இல்லை. பின்வாங்கப்போவதும் இல்லை" என்று உறுதியாக இருக்கிறார் சிட்னி மார்டின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x