Last Updated : 06 Apr, 2021 03:15 AM

 

Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

ஒரு விரல் புரட்சிக்குத் தயாரா?

ஓரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் அடிப்படை நடைமுறைதான் தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை யார் வழி நடத்தப்போகிறார்கள் என்பதற்கு விடை காணும் பெருவிழாதான் தேர்தல். இதில் நாம் எல்லாருமே ஓர் அங்கம். அதில் நாம் செலுத்தப்போகும் வாக்குதான் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் உச்சபட்ச அதிகாரம். அந்த அதிகாரத்தை நாம் சரியாகச் செயல்படுத்தும் நாள் 06-04-2021 (இன்று).

யோசிக்க வைத்த புள்ளிவிவரம்

2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புள்ளிவிவரம் வெளியானது. ‘தமிழகத்திலேயே வாக்குப்பதிவு மிகவும் குறைவாகப் பதிவானது தலைநகர் சென்னையில்தான். 60.9 சதவீத வாக்குகளே இங்கே பதிவாயின. அப்போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடிப் பேர் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறின. அதில், சுமார் 52 லட்சம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 48 லட்சம் பேரே தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோருமே இளைஞர்கள் கிடையாது. ஆனால், 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே இதில் மிக அதிகம்’ என்றது அந்தப் புள்ளிவிவரம். தமிழகத்திலே சென்னையில் வாக்குப்பதிவு குறைவு என்றால், சமூக வலைத்தளங்களில் அதிகம் புழங்கும் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்றார்களா என்ற கேள்வியை அந்தப் புள்ளிவிவரம் எழுப்பியது.

இந்தத் தேர்தலில் தமிழகத்தில் வாக்களிக்க உள்ள 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 1.24 கோடி. 18-19 வயதுக்குட்பட்டவர்கள் 13 லட்சம் பேர். மொத்த வாக்காளர்களில் சுமார் 20 சதவீதம் பேர் இளைஞர்கள்தாம். இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இளைஞர்களின் வாக்குகள் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. அது உண்மையாக வேண்டும் என்றால், ஒவ்வோர் இளைஞரும் வாக்குச்சாவடிக்குள் கால்பதிக்க வேண்டியது அவசியம்.

கொண்டாட்ட நாளா?

தேர்தலுக்கு அளிக்கப்படும் பொதுவிடுமுறையைக் கொண்டாட்ட நாளாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது இளைஞர்கள் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. அதை இந்தத் தேர்தல் மாற்றும் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஏற்கெனவே கரோனா தொற்று காரணமாக பல மாதங்களாகவே விடுமுறையில்தான் இளைஞர்கள் இருந்துவருகிறார்கள். எனவே, இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தினத்தைப் பெரிய அளவில் விடுமுறை நாளாகக் கொண்டாடத் தேவையில்லாமல் இயற்கையே ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. எனவே, ஒவ்வோர் இளைஞரும் வாக்குச்சாவடிக்குச் சென்று தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைச் செயல்படுத்திக் காட்டுவது முக்கியம்.

பொதுவாகவே இன்றைய தலைமுறையினரிடம் ஆட்சி, அரசியல், அதிகாரம் சார்ந்து அலட்சியம் இருப்பதைக் காண முடிகிறது. இவற்றையெல்லாம் ஒவ்வாமையாகப் பார்க்கும் போக்கும் உள்ளது. ஆனால், ஜனநாயகம் என்ற தேரை இவை அல்லாமல் இழுத்து வர முடியாது என்பதை இளையோர் உணர்ந்துகொள்ள வேண்டும். ‘அது சரியில்லை, இது சரியில்லை, எதுவும் சரியில்லை’ என்று பொத்தாம் பொதுவாகப் புலம்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களின் புலம்பல்களைக் களைந்துகொள்வதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயகம் உங்களுக்கு அளிக்கும் ஒரு நல்வாய்ப்புதான் தேர்தல்.

வாக்களிக்க மறக்காதீர்கள்

ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் வாக்குரிமை என்கிற கூர்மையான ஆயுதம் நம்மிடம்தான் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே ஒரு முறை தேர்தல் அன்றுதான் அந்த அதிகாரம் நம் கைக்கு வருகிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் விட்டுவிடலாமா? நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் விலை மதிப்பற்றது மட்டுமல்ல, அது ஒவ்வொன்றும் ஓர் ஆயுதம். அதைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் தினம்தான் தேர்தல். தேர்தலில் தவறாமல் வாக்களிப்பதே ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய வாக்காளர்களின் முதல் கடமை. அந்தக் கடமையை எந்த சந்தர்ப்பத்திலும் தவறவிடாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உற்பத்தி செய்து, லைக்குகளைப் பெறுவதில் காட்டும் ஆர்வத்தை விரல் நுனியில் வைக்கப்படும் மையின் மீதும் வையுங்கள்! உங்கள் வேலைகள் எதுவாயினும் அவற்றைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்று வாக்குச்சாவடிக்குச் செல்லுங்கள். மறக்காமல் வாக்களியுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x