Last Updated : 30 Mar, 2021 03:14 AM

 

Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

முதல் வாக்காளர்கள்: என் வாக்கு, என் உரிமை!

வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று முதன்முறையாகத் தேர்தலில் வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு அது பரவசமான அனுபவத்தைத் தரும். அந்த அனுபவத்தை இந்தத் சட்டப்பேரவைத் தேர்தலில் 21 லட்சத்துக்கும் அதிகமான இளையோர் பெறப்போகிறார்கள். முதன்முறையாக வாக்குச்சாவடியில் காலடி எடுத்து வைக்கவுள்ள அவர்களுடைய மனத்தில் என்ன ஓடுகிறது?

கே. சுஜாதா, கல்லூரி மாணவி, சென்னை.

முதல்முறை வாக்களிக்கப்போகிறேன் என்பதை நினைக்கும்போது உற்சாகமாக இருக்கிறது. அதே சமயம் நம்முடைய வாக்கை வீணாக்கிவிடக் கூடாது என்ற எண்ணமும் இருக்கிறது. தேர்தல் அரசியலில் பங்கேற்பதே ஒரு பிராசஸ்தான். நம் தொகுதி வேட்பாளர்கள் யார், அவருடைய வாக்குறுதிகள் என்னென்ன?, நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளைத்தான் சொல்கிறார்களா என்பதையெல்லாம் யோசித்துதான் எனது முதல் வாக்கைச் செலுத்துவேன்.

எம். சிவா, கல்லூரி மாணவர், திருநெல்வேலி.

ஓட்டு போடும் வயது வந்துவிட்டதன் மூலம் எனக்கும் கடமை வந்துவிட்டது. யாருடைய தலையீடும் இல்லாமல் என்னுடைய வாக்கைச் சுயமாகச் செலுத்துவேன். மாற்றம் என்பது எப்போதும் தேவை. என்னுடைய ஒரு ஓட்டு மாற்றத்தை ஏற்படுத்துமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், மாற்றத்தை மனதில் வைத்து வாக்களிப்பேன்.

சிநேகா பாரதி, கல்லூரி மாணவி, தஞ்சாவூர்.

தேர்தலில் வாக்களிக்கும் வயதை எட்டிவிட்டதன் மூலம் எனக்கும் சமூகப்பொறுப்பு வந்துவிட்டதாக உணர்கிறேன். வீட்டில் பெரியவர்கள் வாக்களிக்கும்போது, ஓட்டுரிமை நமக்கு எப்போது கிடைக்கும் எனக் காத்திருந்தேன். இப்போது ஓட்டுரிமை கிடைத்துவிட்டது. யாருக்கு வாக்களிப்பது என்பதில் சிறு குழப்பம் இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்பவர் யார் என்பதை நானே ஆராய்ந்து வாக்களிப்பேன்.

நகுல் கண்ணன், கல்லூரி மாணவர், சென்னை.

தேர்தலில் ஓட்டு போடப்போகிறோம் என்பதை நினைக்கும்போதே உற்சாகமாக இருக்கிறது. அரசியல்ரீதியாக முடிவெடுக்கும் வயதை எட்டிவிட்டோம் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் வரலாற்றையும் படிக்கத் தொடங்கினேன். சிறந்தவர் யார் என யோசித்தே வாக்களிப்பேன்.

ஆர். நந்தினி, கல்லூரி மாணவி, கோவை.

என்னுடைய வாக்கு யாருக்கு என முடிவு செய்வதில் என்னுடைய பெற்றோரை ஆதிக்கம் செலுத்த விடமாட்டேன். சுயமாகச் சிந்தித்தே வாக்களிப்பேன். ஒவ்வொரு கட்சியினுடைய தேர்தல் அறிக்கைகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நல்லது என மனத்துக்குப் படும் கட்சிக்கு வாக்களிப்பேன். கவர்ச்சிகரமான இலவசங்கள் கூடாது என்பது என்னுடைய பார்வை.

கே. காவ்யா, கல்லூரி மாணவி, திருச்சி.

வாக்குரிமை கிடைத்து விட்டது. வாக்காளர் அடையாள அட்டையும் வந்துவிட்டது. அதனால், பெரிய ஆளாக வளர்ந்துவிட்டோம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்பவர்களே மனதில் நிற்பார்கள். அது போன்றவர்களுக்கு வாக்களிக்கவே நான் ஆசைப்படுகிறேன்.

எஸ். செளந்தர்யா, கல்லூரி மாணவி, கோவை.

முதல் வாக்கு செலுத்தபோகிறேன் என்பது மனத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. என் வீட்டில் கட்சி சார்ந்து வாக்களிப்பார்கள். எனக்கு அப்படியொரு எண்ணம் இல்லை. நானாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்துவிட்டேன். புதியவர்களுக்கு வாக்களித்தால் என்ன என்று என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

எஸ்.மணிகண்டன், கல்லூரி மாணவர், தென்காசி.

சின்ன வயதிலிருந்து அம்மா, அப்பா வாக்களிக்கச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். இப்போ நானும் செல்லப்போகிறேன். என்னைப் பொறுத்தவரை என்னுடைய வாக்கு என்னுடைய உரிமை. யார் சொல்வதற்காகவும் நான் வாக்களிக்க மாட்டேன். இலவசங்கள் இல்லாமல் நல்லது செய்பவர்கள்தான் என்னுடைய தேர்வாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x