Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் அனலடிக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தலில் 1.37 கோடி இளைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19 - 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மட்டும் 1.24 கோடி. இளைஞர்களின் இந்த வாக்குகள் நிச்சயமாக ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், ஏற்கெனவே தேர்தல் அரசியலில் பங்கேற்ற சில இளைஞர்களிடம் ‘தேர்தல் நாடித்துடிப்பு’ பார்த்தோம்...
வி.பாரதி, முதுகலைப் பட்டதாரி, சென்னை
ஜெயித்துவிடும் வேட்பாளரை அதன்பிறகு தொகுதி பக்கமே பார்க்க முடியறதில்லை. குறைந்தபட்சம் மாசத்துக்கு ஒரு முறையாவது தொகுதி பக்கம் வர்றவருக்குத்தான் நான் ஓட்டுப் போடுவேன். நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துறாங்க. அது மாதிரி வேலைவாய்ப்பு முகாம்களை கிராம அளவில் நடத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கணும்.
ர.செல்வம், பொறியாளர், சென்னை
என் தொகுதி வேட்பாளர், எதிர்கால சிந்தனையோட இருக்கணும். தற்காலப் பிரச்சினைகள் பத்தி மட்டும் யோசிக்காம, தொலைநோக்குப் பார்வையோட இருக்கணும். இளைஞர்களை அரசியலுக்கு ஈர்க்கும் விதமா மக்கள் பிரதிநிதிகளோட செயல்பாடு இருக்கணும். இலவசங்களே கூடாது. தமிழகத்தோட முன்னேற்றத்துக்கு தலைவர்கள் உழைச்சா போதும்.
இ. இசக்கியப்பன், தனியார் நிறுவன ஊழியர், திருநெல்வேலி
வெற்றிபெற்ற பிறகு எளிதில் அணுகக்கூடியவரா இருப்பார்னு நினைக்கிற நபருக்குதான் ஓட்டு போடுவேன். மக்கள் வரிப்பணம்தான் மக்களுக்கு இலவசங்களா வருது. அதனால, நான் இலவசங்கள ஆதரிக்கிறேன். படிச்ச இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாயிடுச்சு. அதனால, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முன்னுரிமை தரணும். இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுத்தா, இளைஞர்களே வேலைவாய்ப்புக்கு தங்களைத் தகுதிப்படுத்திக்குவாங்க.
அ. இன்பன்ட் குருஸ் ரபி, யு.பி.எஸ்.சி. மாணவர், தூத்துக்குடி
என்னுடைய எம்.எல்.ஏ. களத்தில் இறங்கி வேலை செய்றவரா இருக்கணும். திட்டங்கள் தொகுதியின் கடைசி சாமானியனுக்கும் போய் சேருதான்னு மேற்பார்வை பார்ப்பவர்தான், என்னுடைய தேர்வு. மது, புகையிலை, போதைப் பொருட்கள் போன்றவற்றுக்கு நிறைய கட்டுப்பாடு கொண்டுவரணும். இலவசங்கள் என்பது நமக்கு நாமே வச்சிக்கிற ஆப்புதான். இலவசங்களுக்குப் பதிலா மானியமாக வழங்கலாம்.
பி. சிவரஞ்சனி, தொழில்முனைவோர், ராஜபாளையம்
இங்க யாரும் மக்களுக்காக இல்ல. பிரச்சினைன்னு போய் நின்னா, எதுவும் நடக்காது என்பதுதான் என்னுடைய எண்ணம். எங்க திரும்புனாலும் வேலையில்லா இளைஞர்கள் அதிகம் இருக்காங்க. சுயதொழில் செய்ய சில பயிற்சிக்கூடங்கள் அமைச்சித் தந்தா நல்லா இருக்கும். தொழிற்பயிற்சி கொடுத்தா பல இளைஞர்கள் தொழில் தொடங்கி முன்னேறுவாங்க. அதனால, இதற்குக் குரல் கொடுப்பவர்களுக்கே என் வாக்கு.
பி. தினேஷ், தனியார் நிறுவன ஊழியர், கோவை
‘நாங்க செய்வோம்'னு சொல்ற தலைவர்களைவிட ‘நாம சேர்ந்து செய்யலாம்'னு சொல்ற தலைவர்களுக்குத்தான், நான் ஓட்டுப் போடுவேன். இந்தத் தேர்தல்ல யாரு வெற்றியடைஞ்சாலும் பரவாயில்லை. ஆனா, மக்களைப் பற்றி சிந்திக்கிற முதல்வரைத்தான் நான் எதிர்ப்பார்க்கிறேன்.
வி. விக்னேஷ்வரன், ஐ.டி. ஊழியர், திருத்தணி
அரசு அறிவிக்கிற நிதியாக இருந்தாலும் சரி, இலவசத் திட்டங்களாக இருந்தாலும் சரி, அதைப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறேன். படிச்ச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர முன்னுரிமைக் கொடுக்கணும். தொகுதிப் பிரச்சினைகளைத் துல்லியமாக அறிந்து, அதை சரிசெய்யும் நபர்தான் என்னுடைய தேர்வு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT