Published : 13 Nov 2015 01:42 PM
Last Updated : 13 Nov 2015 01:42 PM

உறவுகள்: அளவில்லா ‘ஆண் பாசம்!

நான் 22 வயது கல்லூரி மாணவி. முதுகலை இறுதியாண்டு படித்து வருகிறேன். நான் இளங்கலை வகுப்புப் படிக்கும்போது எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதில் எப்போதும் அவனுக்கு அவ்வளவு பெருமை.

இந்நிலையில், ஒரு நாள் அவனின் நண்பன், எனது நண்பனின் கைபேசி மூலம் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றான். இந்த விஷயம் எனக்கு அப்போது தெரியாது. இதனால் நான் கோபமடைந்து எனது நண்பனிடமிருந்து விலகி இருந்தேன்.

சில வருடங்களுக்குப் பிறகு நானும் எனது நண்பனும் மீண்டும் சந்தித்துக் கொண்டபோதுதான் இந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தது. பிறகு, அவனின் நண்பன் என்னை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும், நான் இல்லாமல் போனால் அவன் செத்தே போய்விடுவான் என்றும் கூறினான். இதனால் அவனுடைய நண்பனின் எண்ணுக்கு அழைத்து அவனிடம் பேசினேன்.

‘உன்னை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது. நீ பணக்கார வீட்டுப் பையன். நான் ஒரு ஏழை. எனக்கு என் குடும்பம்தான் முக்கியம்' என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். அதன் பிறகு சில காலம் அமைதியாக இருந்தவன், கடந்த சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் என்னை தொல்லை செய்ய ஆரம்பித்தான்.

பின்னர் ஒரு நாள், நானும் எனது நண்பனும் காதலிப்பதாக எங்கள் கல்லூரியில் அவனுக்குத் தெரிந்த சில நண்பர்களிடம் கதைகட்டி விட்டுவிட்டான். இதனை அறிந்த எனது நண்பன் என்னை விட்டு விலகிச் சென்றுவிட்டான். எனது வகுப்பிலும் இந்த விஷயம் தெரிந்து எல்லோரும் என்னை கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. பெற்றோரிடம் சொன்னாலோ என்னை கல்லூரிக்கு அனுப்புவதையே நிறுத்தி விடுவார்கள். இதிலிருந்து மீள எனக்கொரு வழி சொல்லுங்கள் அக்கா.

வதந்திகளுக்கு ஆயுசு குறைவு. அடுத்த வம்பு கிடைக்கும் வரைதான். சூடான செய்தி ஒன்று கிட்டியபின் பழைய செய்தி குப்பைக்குப் போய்விடும்.

கடிதத்தைப் படித்து நான் குழம்பிய மாதிரி, வாசகர்கள் குழம்பாமலிருக்க, உங்கள் நண்பனை ராம் என்றும் அவரது நண்பனை பீம் என்றும் கொள்வோம்.

ராமின் ஃபோனிலிருந்து பீம் உங்களை அழைத்து சினிமா டயலாக்கை உதிர்த்தபோது பேசியது ராம் இல்லை என்றாவது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டுமே! விளைவு, ராமின் நட்பு முறிந்துபோயிற்று (தற்காலிகமாக). கற்ற பாடம் 1:கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய்யே. தீர விசாரிப்பதே மெய்!

அடுத்து பீமின் காதலுக்கு ராம் தூதுபோக, பரிதாபப்பட்டு பீமின் அலைபேசி எண்ணை சுழற்றினீர்கள். காலைச் சுற்றியது பாம்பு. கற்ற பாடம் 2: ஒருதலைக் காதலுக்கு, காதலிக்கப்படுபவர் பொறுப்பேற்கத் தேவையில்லை.

உங்கள் புத்திமதிக்கு செவிசாய்க்காத பீம் உங்களைத் துரத்த, நீங்கள் அவருக்கு இணங்காததால் அடிபட்ட நாகம் சீற ஆரம்பித்தது. எங்கு அடித்தால் உங்களுக்கு வலிக்குமோ அங்கு அடித்திருக்கிறார் பீம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். உங்கள் பெயரையும் கெடுத்து, ராமின் நட்பையும் வெட்டிவிட்டார். கற்ற பாடம் 3: தகுதியற்றவன் மீது அனுதாபம் காட்டாதே. குரைக்கும் நாயைக் கண்டு சூரியன் பயப்படத் தேவையில்லை.

உங்களை அறிந்தவர்கள் பீம் சொல்வதை நம்ப மாட்டார்கள். அதை நம்புபவர்கள் நட்பு உங்களுக்குத் தேவையில்லை. கற்ற பாடம் 4: ஊர் வாயை மூடமுடியாது.

தங்கத்தைப் புடம் போடுவதைப் போல், உங்களுக்கு மெருகேற்ற வந்தவை இந்த அனுபவங்கள். கசப்பான அனுபவங்களைத் தூக்கிப் போட்டு, கற்ற பாடங்களை நினைவில் கொண்டு இனி கவனமாகச் செயல்படுங்கள். காலம் சொல்லும் ராமின் நட்பு உண்மையானதா என்று.

அன்புள்ள அம்மா வணக்கம். எனக்கு வயது 22. நடுத்தரக் குடும்பம். உடன்பிறப்புகள் இல்லை. நான் கைக்குழந்தையாக இருக்கும்போதே தந்தை மரணம் அடைந்துவிட்டார். சிறு வயது முதலே, நல்ல பையன் அமைதியான பையன் என பெயர் எடுத்துவிட்டேன். எனவே இன்றும் அப்படியே வாழ்க்கை தொடர்கிறது.

வீட்டில் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையால் எந்தப் பெண்ணையும் காதலிக்கவில்லை, என்னிடம் காதலிப்பதாகச் சொன்ன பெண்ணையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்ஜினியரிங் முடித்துவிட்டுப் போட்டி தேர்வின் மூலம் ஒரு வேலை கிடைக்கப் போகிறது. உடன்பிறப்புக்கள் இல்லாதது நினைத்து, மற்றவர்களது உடன்பிறப்புகளைப் பார்க்கும்போது கவலை அடைந்துள்ளேன்.

நான் கல்லூரியில் தங்கிப் படிக்கும்போது, எனக்கு ஒரு உயிர் நண்பன் கிடைத்தான் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். வயது 24. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அம்மா இல்லை. பணத்திற்காக வாழ்வில் நிறைய கஷ்டத்தினை அனுபவித்துள்ளான். அவன் கல்லூரியில் எனக்கு சீனியர்.

நான் முதலாம் ஆண்டு படிக்கும்போதே அவனிடம் நட்பு ஏற்பட்டது. அவனது சூழ்நிலை உணர்ந்த நான் என்னால் முடிந்த சிறு உதவிகளைச் செய்வேன். நாட்கள் ஆக ஆக என்னையே அறியாமல் அவன் மீது அதிகப்படியான அன்பினை வைத்துவிட்டேன். பதிலுக்கு என்மீது அவன் கொஞ்சமாவது அன்பாக இருப்பான் என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இது எனக்கு வேதனை தருகிறது. சில சம‌யங்களில் எனது அதிகப்படியான அன்பு அவனுக்கு எரிச்சலூட்டுவதாக உணர்ந்திருக்கிறேன். அவன் எல்லோரிடமும் இருப்பதை விட என்னிடம் அதிக அன்பாக இருக்கவேண்டும் என ஆசை இருந்தது.

ஆனால், அவன் இதற்கு மாறாக, என்னைத் தவிர எல்லோரிடமும் சந்தோஷ‌மாகப் பழகுவான். ஏன் இவ்வாறு இருக்கிறான் என எனக்குத் தெரியவில்லை. ஒருமுறை அவனுக்கு வாங்கி வந்த சட்டை பெரிதாக இருப்பதால் என்னிடம் கொடுத்தான். அதனை இன்றும் என் பெட்டியில் அவனது ஞாபகமாக‌ வைத்துளேன். இது போன்று மேலும் சில பொருட்கள் அவனது ஞாபகமாக இருக்கிறது. வாரம் ஒருமுறையாவது அவனுடன் போனில் பேசுவேன். சில நேரங்களில் நன்றாகப் பேசுவான், சில நேரங்களில் சண்டைபோடுவான்.

அவன்மீது கோபத்தில் போன் செய்யாமல் இருக்கும்போது அவன் எனக்கு போன் செய்து நேர்முகத் தேர்வுக்குப் போனது போன்ற சில விஷ‌யங்களை என்னிடம் பகிர்ந்துகொள்வான். பிறகு எனக்கும் கோபம் குறைந்துவிடும். அவனைப் பிடிக்காமல் போனது இல்லை. சில நாட்கள் நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும்போது என்னை அவனுடன் கூடப்பிறந்த தம்பியாக நினைப்பதாகச் சொல்வான். அந்தத் தருணத்தில் இருக்கும் சந்தோஷம் போல, வேறு எப்போதும் நான் சந்தோஷ‌மாக இருந்தது இல்லை.

அவன் என்னுடன் வெளியே செல்லக்கூட விரும்ப மாட்டான். எங்கேயாவது போகும்போது அழைத்துச் செல்ல சொன்னால் கூட, அழைத்துச் செல்ல மாட்டான். நான் சிறுவன் என நினைக்கிறானா என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் எதிர்பார்க்கும் அன்பினை அவனிடம் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவனிடம் இருந்து சரியான பதில் வராது. அவன் யாரிடமெல்லாம் நன்றாகப் பழகுகிறானோ அவர்களிடம் நானும் நட்பினை ஏற்படுத்திக்கொண்டு அவர்களிடம் நன்றாகப் பேசுவேன்.

அவன் சண்டை போட்டுப் பேசாத நேரங்களில் முழுவதும் அவனது நினைவாகத்தான் இருக்கும். அவனிடம் எதிர்பார்த்து எதிர்பார்த்து, அவனது அன்பு கிடைக்காது அன்பிற்கு ஏங்கும் அடிமையாகிவிட்டேன். தனிமையில் அழுததும் உண்டு. அவனை என்னால் மறக்க முடியாது. அவனும் என்னை வாழ்நாளில் மறக்க மாட்டான் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த பிறப்பிலாவது அவனுக்கு பிடித்த ஒரு உயிராக அவனது குடும்பத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நான் வேலைக்குச் சென்ற பின்பு, என் நண்பனையும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டு அரசு வேலைக்கு தயார் செய்ய ஆசைப்படுகிறேன். அவனுக்கு அடுத்த வருடம் திருமணம் நடைபெற உள்ளது. அவனுக்கு மோதிரம் வாங்க பணம் சேர்த்து வருகிறேன். எனக்குப் பிரியமான அவனையும், அவனது குடும்பத்தையும் சந்தோஷ‌மாக வைத்திருக்க வாழ்நாள் முழுக்க அவனுக்கு உதவியாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இப்போது நான் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாத அவனிடம் எனது அன்பினை எவ்வாறு புரியவைப்பது என தெரியவில்லை. எனவே நான் இனிமேல் அவனை தொல்லை செய்யாது, அவனிடம் இருந்து விலகி இருந்து, சொல்ல நினைப்பதை எழுதி வைத்து, 2 வருடத்துக்குப் பின்பு, நான் வேலையில் சேர்ந்த பிறகு, அவனிடம் கொடுத்து எனது அன்பினை புரிய வைக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் நான் விலகி இருக்கும் 2 வருடத்தில் என்னைப் பிரிந்து சென்றுவிடுவானோ என எனக்குப் பயமாய் இருக்கிறது. நான் எடுக்கும் முடிவு சரியா? அவன்மீது உள்ள அன்பினைக் குறைத்துக்கொள்ள என்ன வழி? ஆலோசனை சொல்லுங்கள்.

நண்பரே, ஒரே தவிப்பில் இருக்கிறீர்கள். சற்று வெளிப்படையாகப் பேசலாமா? உங்கள் கடிதத்தில் உள்ள சில வரிகள் ('அவன் பிறரைவிட என்னிடம் அதிக அன்பாக இருக்கவேண்டும்', 'நான் எதிர்பார்க்கும் அன்பினை அவனிடம் சொல்லி இருக்கிறேன்') நீங்கள் அவரை ஒரு துணையாகப் பார்த்தீர்களோ? என்ற ஐயத்தைக் கிளப்புகிறது.

இதை வலுப்படுத்துவதுபோல் இருக்கிறது அவரது ரியாக்ஷன்கள். ('எனது அதிகப்படியான அன்பு அவனுக்கு எரிச்சலூட்டுகிறது', 'பிறரிடம் சந்தோஷமாகப் பேசுகிறான்', 'என்னுடன் வெளியே செல்ல விரும்பமாட்டான்') அவர் உங்களை நண்பனாகக் கருதியதால் இந்த எரிச்சல்!

அவர் உங்களை எங்கு வைத்திருக்கிறார் என்று புரிந்தபின், அவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும், அதிலும் மணமாகும் இந்தத் தருணத்தில்? இன்னும் உங்கள் அன்பைப் புரியவைக்க ஏன் முயற்சி செய்ய வேண்டும்? உங்கள் தேவைக்கு நீங்கள்தான் வழிவகுக்க வேண்டும். என் யூகம் தவறானால், மன்னிக்கவும்.

ஒரு சகோதரனை ‘மிஸ்' பண்ணியதால்தான் நண்பரிடம் ஒட்டிக்கொண்டீர்கள் என்று சொன்னால் நம்புவேன். அதிகமாகப் பாசத்தைப் பொழிவது அவருக்கு மூச்சுத் திணற‌லைக் கொடுத்திருக்கிறது. அவரை ஃப்ரீயாக விடுங்கள். அவர்மீது அளவு கடந்த பாசம் கொண்ட நீங்கள் அவர் விரும்புவதைத்தானே செய்யவேண்டும்?

உங்களுக்கும் அவரைச் சார்ந்து வாழ்வது நல்லதல்ல. அவரைச் சுற்றியே உங்கள் எண்ணங்கள் இருப்பது சரியல்ல. தனிமையைத் தவிர்த்து, வேறு நண்பர்களோடு இருங்கள். அநாதை இல்லங்களில் உள்ள சில குழந்தைகள் உறவுக்காக ஏங்குபவர்கள். ஒரு பாசமான அண்ணனாக அந்தத் தம்பிகளோடு உறவாடுங்கள். அவர்கள் ஆவலோடு உங்கள் வரவுக்காகக் காத்திருப்பார்கள்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x