Last Updated : 09 Mar, 2021 03:11 AM

 

Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

மெய்நிகர் தேர்தல்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் என்பது தமிழகத்தின் பெரும் திருவிழா. இன்றோ அடுத்த ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்கிற அளவில் சுருங்கிவிட்டது. அன்று விவரம் புரியாமல் ‘போடுங்கம்மா ஓட்டு...’ எனக் கூட்டமாக ஆதரவு கோஷம் எழுப்பும் சிறுவர்கள் தொடங்கி, தங்கள் அபிமானத் தலைவரின் அரசியல் பார்வையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஆராயும் பெரியவர்கள்வரை தேர்தலில் ஈடுபாடுகொண்டிருந்தார்கள்.

கட்சிச் சின்னங்களைத் தெருக்களில் வரைவது முதல் கொடிகள், கொடித்தோரணங்களைக் கட்டுவதுவரை இளைஞர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டோடும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதுபோன்ற வேலைகளை இளைஞர்கள் செய்துகொண்டிருந்த காலம் அது. ஆனால், இந்தக் காட்சிகள் இன்றைக்கு பிளாஷ்பேக் ஆகிவிட்டன. இளைஞர்களின் தேர்தல் பார்வையும் மாறிவிட்டது.

அந்தக் காலத் தேர்தல்

இப்போது இருப்பதுபோல் தேர்தல் கட்டுப்பாடுகள் அன்றைக்கு இல்லை. சுவர்களில் கட்சிச் சின்னங்களை வரையவோ தோரணங்கள் கட்டவோ எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. தெரு முழுவதும் சுவர்களில் வரைந்து கட்சிகளுக்கு வாக்கு கேட்டு வீதிவீதியாக வலம்வருவார்கள் அந்தக் காலத்து இளைஞர்கள். நாள்தோறும் கட்சிக் கொடிகளை ஏந்தி வாக்குக் கேட்டு வந்து செல்வார்கள். ஒரு தெருவில் ஒரு கட்சியின் கோஷம் கேட்டால், இன்னொரு தெருவில் இன்னொரு கட்சியின் கோஷம் கேட்கும். நண்பர்களாக இருந்தாலும் வெவ்வேறு கட்சியின் ஆதரவாளர்களாக இணக்கமாக இருந்த காலம் அது.

ஆனால், இந்தத் தலைமுறையினருக்கு இதுபோன்ற தேர்தல் கால அனுபவங்களை எல்லாம் பழைய சினிமாவில் பார்த்தால்தான் தெரியும். குடும்பத் தலைவர் எந்தக் கட்சியின் ஆதரவாளராக இருக்கிறாரோ, மொத்தக் குடும்பமும் அதே கட்சியின் அபிமானிகளாக இருப்பார்கள். இன்றைக்கு வீட்டில் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு அரசியல் பார்வை சாத்தியமாகியிருக்கிறது.

மாறிய காட்சி

குறிப்பாக 18 வயதைக் கடந்த வீட்டு வாரிசுகள், முதல் வாக்காளர்கள் ஆகியோர் கட்சி சார்ந்து பெரும்பாலும் இன்றைக்கு இயங்குவதில்லை. நல்ல வேட்பாளர்களை அடையாளம் காணவே ஆர்வம் காட்டுகிறார்கள். கட்சிகளுக்காகக் கொடிபிடிக்கும் அரசியல் இவர்களிடம் இல்லை. அரசியல் சார்ந்த விஷயங்களில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் கருத்துகளையும் காதில் வாங்கிக்கொள்வதில்லை. சுயமாகவே முடிவெடுக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்தித் தாள்கள், வானொலி; 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை அறிந்துகொண்டவர்கள், இன்றைக்கு சமூக ஊடங்களின் மூலமே அரசியல் சங்கதிகளை அறிந்து கொள்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளை கண்களை மூடிக்கொண்டு இன்றைய இளைஞர்கள் ஆதரிப்பதில்லை. கட்சி அபிமானம் கடந்து தலைவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்கள். தலைவர்களின் பேச்சுகளில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய்கிறார்கள். கட்சிகளின் சந்தர்ப்பவாதங்களை இஷ்டப்படி கலாய்க்கிறார்கள்.

சமூக ஊடகங்களின் ஆதிக்கம்

இளைஞர்கள் நிறைந்துள்ள கட்சி என்று முன்பு ஏதாவது ஒரு கட்சியை குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியும். இப்போதோ அதுபோன்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படி வாக்களிப்பார்கள், யாருக்கு வாக்களிப்பார்கள், அவர்களை எப்படி வளைப்பது எனத் தெரியாமல் கட்சிகள் திண்டாடுகின்றன. அதன் காரணமாகவே இளைஞர்கள் நிறைந்திருக்கும் சமூக ஊடகங்களின் வாயிலாக இளைஞர்களைக் கவர முயல்கின்றன. சமூக ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ள கட்சிகள் போட்டிப்போடுகின்றன. தொண்டரணி, மகளிரணி, விவசாய அணி என இருப்பது போல எல்லா கட்சிகளிலும் இன்றைக்குத் தகவல் தொழில்நுட்ப அணியும் (ஐ.டி. அணி) வந்துவிட்டது.

இளைஞர்கள் தெரிவிக்கும் கருத்துகள், எந்த விஷயங்களை இளைஞர்கள் விவாதிக்கிறார்கள் என்பதையெல்லாம் சமூக ஊடகங்கள் வாயிலாகவே கட்சியினர் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள். சமூக ஊடகங்களில் கிடைக்கும் ஆதரவு, எதிர்ப்பை வைத்துத் தலைவர்கள் கருத்து சொல்லும் அளவுக்கு இளைஞர்களின் செயல்பாடு இதில் நிறைந்திருக்கிறது.

என்ன நடக்கும்?

கரோனா தொற்றுக்குப் பிறகு, தேர்தல் பிரசாரத்துக்கான இடத்தையும் சமூக ஊடகங்களே ஆக்கிரமித்துவிட்டன. இளைய சமூகத்திடம் தங்கள் தேர்தல் பிரசாரத்தைக் கொண்டுசெல்ல காணொலிக் காட்சி, கூகுள், ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களே சிறந்த வழி எனக் கட்சிகள் நினைக்கின்றன.

அதேநேரம், இளைஞர்களைக் கட்டிப்போட்டுள்ள இந்தச் சமூக வலைத்தளங்கள் அரசியல்ரீதியாக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. தமிழகத் தேர்தல் களத்தில் சமூக ஊடகங்கள் என்னவிதமான தாக்கத்தைச் செலுத்தப்போகின்றன என்பதை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவே நமக்கு உணர்த்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x