Published : 06 Nov 2015 12:56 PM
Last Updated : 06 Nov 2015 12:56 PM
தீபாவளி என்றாலே பட்டாசுதானே. ‘ஒரு நாள் கூத்துக்கு ஏன்டா இப்படி காசைக் கரியாக்குற' என்கிற பெற்றோர்களுக்கும், ‘இன்னிக்கு ஒரு நாள்தானே' என்று பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் கெஞ்சல், கொஞ்சல் விளையாட்டுகளை பரஸ்பரம் இரு தரப்புமே காதில் போட்டுக்கொள்வதில்லை.
தீபாவளி நெருங்க ஆரம்பித்த சமீபத்திய சில வாரங்களாக ‘இந்த தீபாவளியை பட்டாசுகளின்றி பசுமையாகக் கொண்டாடலாமே' என்ற வாசகங்களைத் தாங்கிய பதாகைகளுடன் இளைஞர்கள் பலரின் ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் மாறி மாறி பதிவிடப்பட்டன.
அந்த பிரசாரத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் யார் என்று தேடினால்... அவர்தான் குர்மீத் சபல். அவர் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் காதைக் கொடுப்போமே?
பசுமை தீபாவளி
"பொதுவாக நமது ஊர்கள் எல்லாம் எப்போதும் குப்பைக் கூளமாகக் காட்சி தருகின்றன. தீபாவளி நேரம் சேரும் குப்பைகள் குறித்து தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. குப்பை ஏற்படுவது தவிர, பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் வேதிப் புகை, ஏற்கெனவே மாசடைந்த நமது சூழலை மேலும் மாசுபடுத்துகிறது" என்று சொல்லும் இந்த டெல்லிக்காரர் ஒரு திரைக் கலைஞர்.
"நாம் ஏன் பட்டாசுகள் இல்லாத தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று என் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அதை உடனடியாகச் செயல்படுத்த நினைத்தேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள இளைஞர்களிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர்களும் ஆர்வமாக முன்வந்தார்கள். உடனே விழிப்புணர்வு பதாகைகளைத் தயார் செய்து ஒவ்வொருவரையும் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றினேன். இப்போது அது தேசத்தின் பல மூலைகளுக்கும் சென்றடைந்துள்ளது" என்கிறார் பூரிப்புடன்.
உயிர்ப்புள்ள பிரசாரம்
இந்தப் பிரசாரம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய ஒளிப்படங்கள்தான், இந்த ஆண்டும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பல சமூக வலைதள ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அப்படியானால், இந்தப் பிரச்சாரத்துக்கான தேவை இன்றும் இருக்கிறது என்பதுதானே அர்த்தம்?!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT