Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
உஷு விளையாட்டைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கிரிக்கெட்டை ஆராதிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இந்தியாவில், உஷு விளையாட்டைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். இந்தப் விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நாயகனாக உருவாகி வருகிறார்.
உஷு என்றால் என்ன? உஷு என்பது சீனச் சொற்களின் கலவை. ‘உ’ என்றால் ‘போர்’; ‘ஷு’ என்றால் ‘கலைகள்’. இது சீனத் தற்காப்புக் கலை. ஆயுதங்கள் அல்லது வெறும் கைகளால் இது ஆடப்படுகிறது. இதில் சான்ஷோ, தாவ்லோ என இரு பிரிவுகள் உண்டு. ‘சான்ஷோ’ என்பது எறிதல், குத்துதல், உதைத்தல் ஆகிய மூன்று பாணி சண்டைகளின் கலவை. ‘தாவ்லோ’ என்பது சண்டைத் திறனின் நிரூபணமான பகுதி. குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ ஆகிய தற்காப்புக் கலைகளிலிருந்து ‘உஷு’ வேறுபட்டது.
இந்த விளையாட்டில் தனது துல்லியத் தாக்குதலால் சத்தமே இல்லாமல் தேசிய அளவில் முன்னேறிவருகிறார் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் எஸ்.முத்துராஜா பாரதி. ‘தாவ்லோ’ பிரிவில் பல்வேறு பதக்கங்களை வென்று அசத்திவருகிறார். மாவட்டம், மாநில அளவிலான போட்டிகள் மட்டுமல்லாமல், தேசிய அளவிலான போட்டிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை முத்துராஜா பாரதி வென்றுள்ளார். அண்மையில் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார் முத்துராஜா பாரதி.
“முதலில் தடகள விளையாட்டில்தான் இருந்தேன். பின்னர், நலம்விரும்பி ஒருவரின் பரிந்துரைப்படி உஷு விளையாட்டைத் தேர்ந்தெடுத்தேன். தாவ்லோ பிரிவில் ஃப்ரீஹேண்ட், ஷாட் வெப்பன், லாங் வெப்பன் என மூன்று வடிவங்களில் விளையாடிவருகிறேன். பெற்றோர் அளித்த ஊக்கத்தாலும், பயிற்சியாளர் அளித்த தொடர் பயிற்சியாலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்கள் வென்றேன்.
முதன்முறையாகத் தேசிய சீனியர் பிரிவில் பங்கேற்றபோது 12-வது இடம்தான் கிடைத்தது. இரண்டாம் முறை வெள்ளிப்பதக்கம் வென்றேன். உஷு போட்டியில் தேசியப் போட்டியில் தங்கம் வென்று, இந்தியாவுக்காகச் சர்வதேச போட்டியில் பங்கேற்பதே என் லட்சியம்” என்கிறார் முத்துராஜா பாரதி. உஷு ஆடுவது மட்டுமல்லாமல், உஷு நடுவராக செயல்படுவதற்கான ‘சி பிளஸ்’ கிரேடு சான்றிதழையும் முத்துராஜா பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT