Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM
சென்னை ராஜீவ்காந்தி ஐ.டி. எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள இந்திரா நகர் ரயில் நிலையம் வழியாகச் செல்வோர், ரயில் நிலையச் சுவர்களில் வரையப்பட்டுள்ள பிரம்மாண்ட சுவரோவியங்களைக் கண்டு மலைத்துப்போவார்கள். ‘வி.ஆர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சுவரோவியம், எச்.ஐ.வி. நோய் குறித்த மூடநம்பிக்கைகளையும், தவறான எண்ணங்களையும் உடைத்தெறிக்கும் முயற்சி.
எச்.ஐ.வி. நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்துவருகிறது. ஆனாலும், அந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வின்மை தொடர்கிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை இந்தச் சமூகம் புறக்கணிக்கும் போக்கும் உள்ளது. இந்தச் சுவரோவியத்தின் மூலம் மனிதத்தைப் பரப்பும் முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகள் அல்லது அந்த நோயிலிருந்து மீட்கப்பட்டவர்கள் இந்தச் சமூகத்தில் சம உரிமைகளுடன் வாழ தகுதியானவர்கள்; எய்ட்ஸ் நோயாளிகளின் உருவப்படங்களை வெளிக்காட்டாமல் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம் என்பதை உணர்த்தும் விதமாக கலை நோக்குடன் இந்தச் சுவரோவியங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உயிர்பெற்ற ஓவியங்கள்
சென்னையைச் சேர்ந்த கிராஃபிட்டி ரைட்டர், ஸ்ட்ரீட் ஆர்டிஸ்ட் ஏ-கில், டெல்லியைச் சேர்ந்த கத்ரா இணைந்து இந்தச் சுவரோவியத்தை வடிவமைத்துள்ளனர். தெருக்கள், அன்றாட வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்ட காட்சிகளைக் கலையாக மாற்றியிருக்கிறார் ஏ-கில். உருவப்படம் எனப்படும் போர்ட்ரெய்ட் ஓவியங்களுக்கு புகழ்பெற்றவர் இவர். இந்த ஓவியங்களில் சென்னைக்கும் அவருக்குமான தொடர்பு பிரதிபலிக்கிறது.
சென்னை இந்திரா நகர் ரயில் நிலைய சுவர்களில் இந்தச் சுவரோவியங்கள் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. ரயில் தளத்தின் மொத்த நீளம் 280 மீட்டர். நிலைய முகப்புப் பகுதியில் சிவப்பு நாடா பிரதிபலிக்கிறது. அதாவது, எய்ட்ஸ் விழிப்புணர்வின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை இது குறிக்கிறது. அதன் இளஞ்சிவப்பு நிறம் காதல், கனவைக் குறிக்கிறது. ரயில் நிலையம் முழுவதும் இந்தச் சின்னத்தின் தொடர்ச்சி இடம்பெற்றிருப்பது, நம்பிக்கையை விதைக்கும் வகையில் உள்ளது. ஐந்து பேரின் போர்ட்ரெய்ட் வரையப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் எச்.ஐ.வி நோயாளிகள்.
எச்.ஐ.வி.யுடன் வாழ்பவர்களிடையே நம்பிக்கையை விதைக்கும் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment