Published : 06 Nov 2015 11:58 AM
Last Updated : 06 Nov 2015 11:58 AM
பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாத சிறுவர்கள், ‘தலைவலி’ அல்லது ‘வயத்து வலி’யைக் காரணம் காட்டித் தப்பித்துவிடுவது நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய ஒன்று. காய்ச்சல் என்றால் தொட்டுப்பார்த்துக் கண்டறிந்துவிடலாம் என்பதால் அதன் மீது பழி போடுவதில்லை!
இந்த ‘சாக்கு' சொல்லும் பழக்கம் ஒரு 50 வருடங்களுக்கு முன்னால் அறிமுகமாகியிருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால்... வெரி ஸாரி! சுமார் 105 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ‘சாக்கு' சொல்வது இருந்திருக்கிறது என்பதற்கு சமீபத்தில் சாட்சி ஒன்று கிடைத்திருக்கிறது..!
அதுவும் அப்படி சாக்கு சொன்னது யார் தெரியுமா..? கடமை காக்க வேண்டிய ஒரு காவல் துறை அதிகாரி!
அவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து இந்த வரலாறு தெரியவருகிறது. அவர்கள் இருவரின் பெயருமே ரெங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. சம வயதுடைய இவர்கள் (1910 ம் ஆண்டின்போது இவர்களுக்கு சுமார் 20 வயது இருக்கலாம்) எதிரெதிர் வீடுகளில் வசித்த உறவினர்களும்கூட.
கடிதத்தை எழுதிய ஜி. ரெங்கநாதன், திருஆரூரான் சர்க்கரை ஆலையை நிறுவிய திரு. வி. எஸ். தியாகராஜனின் (வி.எஸ்.டி.)தந்தை. ஆங்கிலேய அரசின் காவல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். வேலூரில், பணிக்கு முந்தைய பயிற்சிக் காலத்தில் எழுதிய கடிதம்தான் இது. கடிதத்தைப் பெறும் ஜி. ரெங்கநாதன், பாமணி கிராமத்தில் மிராசுதாரார். எனது தாய்வழிப் பாட்டனார்.
காவல்துறையின் கடுமையான, சலிப்புட்டக்கூடிய பயிற்சியிலிருந்து ஒரு வாரமாவது தப்பிப்பதற்காகத் தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு என்று தந்தி அல்லது கடிதம் அனுப்புமாறு ஆத்ம நண்பருக்கு ரகசியக் கடிதம் எழுதுகிறார். இருவரின் பெற்றோருக்கும் இவ்விஷயம் தெரிந்துவிடக் கூடாதாம். விடுமுறையில் கிராமத்திற்கு வரும்போது ஜாலியாக இருப்பதற்காக நண்பனின் ஆர்மோனியப் பெட்டியைத் தயாராக வைத்திருக்குமாறு அன்புக் கட்டளை வேறு!
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கடிதம் இப்படிப் போகிறது...
17, மேல் மாடி
மஹால், வேலூர்.
செப்டம்பர் 5, 1910
என் பிரிய ரங்கையா,
கடந்த மாதம் 23-ம் தேதியிட்ட உனது அன்புக் கடிதம் கிடைத்தது. உடனடியாக உனக்குப் பதிலளிக்க என்னால் இயலாததிற்கு நான் வருந்துகிறேன்.
பாமணிக்கு (கிராமம்) இன்னும் இரண்டு வாரங்களில் நான் வரக்கூடும். இவ்வமயம் பிரின்சிபாலிடமிருந்து விடுமுறை வாங்குவது மிகச் சிரமமாக உள்ளது. ஆதலால் இம்மாதம் 15ம் தேதி வாக்கில் எனக்குத் தந்தி அனுப்பவும் அல்லது, நல்ல தரமான காகிதம், உறை பயன்படுத்திக் குறைந்தது ஒரு கடிதமாவது எழுது - எனது மனைவி கடுமையான சுகவீனத்தால் அவதிப்படுவதாக! ஒரு வார விடுமுறையில் உடனடியாகக் கிளம்பி வருமாறு எழுது.
இது குறித்து எவரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம், அதிலும் குறிப்பாக எனது மற்றும் உனது பெற்றோரிடம். இதைக் கூறினால் அவர்கள் எனக்கு எழுத அனுமதிக்க மாட்டார்கள். நான் உன்னிடம் வேண்டுவதை நீ செய். மற்றவை நேரில். உன்னுடைய ஆர்மோனியப் பெட்டியைத் தயாராக வைத்திரு. எனது வேண்டுகோளைப் பூர்த்தி செய்வாய் என நம்புகிறேன்.
என்றும் உனது பிரியமான,
ஜி. ரெங்கநாதன்
(கடிதத்தின் பின் பக்கத்தில்-)
நல்ல தரமான காகிதத்தில் எழுதவும். தந்தி என்றால் “உனது மனைவிக்குக் கடுமையான உடல் நலக்குறைவு, உடன் ஒரு வார விடுமுறையில் புறப்படு” என்று கொடுக்கவும்.
அதனை இவ்வாறு எனக்கு விலாசமிடவும்: "ரெங்கநாத முதலியார், மஹால், வேலூர்”.
எனக்கு இம்மாதம் 16 அல்லது 17-ம் தேதி வாக்கில் எழுதவும், இக்கடிதம் கண்டவுடன் நீ மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாய் என்பதற்கும் உடனடியாக எழுதவும்.
இந்த 105 ஆண்டு பழைய கடிதத்தை நான் கண்டெடுத்தே 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! கோடை விடுமுறைக்கு பாமணி கிராமத்தில் (அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், இன்றைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகை செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது) உள்ள எங்கள் தாய்வழி தாத்தா-பாட்டி வீட்டிற்குச் செல்வது வழக்கம் (மேற்கண்ட கடித்தின் பெறுநர்).
அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ள நான், அங்கு பரணில் உள்ள பழைய கடிதக் கோப்பினை ஆராய்வது வழக்கம். அந்தக் காலத்தில் பழையக் கடிதங்களை நீண்டு வளைந்த மெல்லிய கம்பியில் குத்தி, சேகரித்து வைப்பது வழக்கம். அச்சமயம் சேகரித்த பழைய திருமண அழைப்பிதழ்கள், கடிதங்களில் இதுவும் ஒன்று.
ஆனால் இதன் ருசிகரமான விஷயத்தையும் முக்கியத்துவத்தையும் சமீபத்தில்தான் அறிந்தேன். யாருக்கு யார் எழுதிய கடிதம் என்பதை எனது 83 வயதுத் தாயாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆர்மோனியப் பெட்டி, சிறுவர்களாகிய எங்களிடம் படாதபாடு பட்டுள்ளது. வாயிருந்தால் முகாரி ராகம் பாடியிருக்கும். அதனை அந்தப் பாடு படுத்தியுள்ளோம்.
நண்பருக்கு விடுமுறை கிடைக்க எனது தாத்தா உதவினாரா, விடுப்பு கிடைத்ததா, இருவரும் ஜாலியாக விடுமுறையைக் கழித்தனரா என்ற விவரங்களை யார் அறிவார்? ஒருவேளை காவல் துறையின் ஆவணங்களை ஆராய்ந்தால் அறிய முடியுமோ என்னவோ?
என்ன, கடிதத்தைப் பார்த்ததும் ‘நண்பேன்டா’ என்று கொண்டாடத் தோன்றுகிறது அல்லவா..?!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT