Last Updated : 02 Feb, 2021 03:17 AM

 

Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

100 நாள்கள், நொடிகள், பாடல்கள்!

நூறு நாள் நூறு பாடல்களுக்கு இசையமைத்து, அதையும் சரியாக நூறு நொடிகளில் பாடி, அதற்கான காட்சிகளையும் சேர்த்து, அதை எடிட் செய்து நாள் ஒன்றுக்கு ஒரு பாடலாக யூடியூபில் வெளியிட்டிருக்கிறார் ஷ்ரவண் கலை.

“படகோட்டிகள் பயன்படுத்தும் வார்த்தை `ஏலேலோ’. படகு போல்தான் பாட்டும். அதனால், `ஏலேலோ’ என்று என்னுடைய பாடல்களின் தொகுப்புக்குப் பெயர் வைத்தேன். இந்தப் பாடல்களை எல்லாம் கூட்டிக் கழித்தால், ஒரு இருபது திரைப்படங்களுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு இருக்கும்.

தனிப்பாடல்களை இந்தியில் கேட்பதற்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். மலையாளத்தில் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் திரைப்பாடல்களுக்குத்தான் ரசிகர்கள் இருக்கிறார்கள். தனிப் பாடல்கள் குறித்த கவனத்தை ரசிகர்களிடம் சிறிதளவாவது ஏற்படுத்தும் முயற்சியுடன்தான் இந்த நூறு பாடல்களை உருவாக்கத் தொடங்கினேன். அதே வேளை, திரைப் பாடல்களுக்கான தரத்தில் சமரசம் இல்லாமல் கொடுப்பதற்கு முயற்சித்தேன்” என்கிறார் ஷ்ரவண்.

ஷ்ரவண் கலையின் நண்பர் வடிவரசுதான் பாடல்களை எழுதியிருக்கிறார். செப்டம்பர் 23 தொடங்கி டிசம்பர் 31 வரை 102 பாடல்களை மொத்தமாக தன்னுடைய `ஏலேலோ’ பாடல்கள் தொகுப்பில் பதிவேற்றியிருக்கிறார். இப்படியொரு முயற்சியில் ஈடுபடப் போகிறோம் என்ற அறிவிப்பையே ஓர் அறிமுகப் பாடலாகவும் நூறு நாள்கள் தொடர்ந்து பாடல்களைப் பார்த்து அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இறுதிப் பாடலும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

கரோனா காலம் என்பதால் வெளியில் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவிகளைப் பெறமுடியாத நிலையில், மனைவி உட்பட இவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரே ஒளிப்பதிவு, எடிட்டிங், அனிமேஷன் போன்ற பணிகளை பகிர்த்துக்கொண்டு செய்திருக்கின்றனர்.

“தனிப் பாடல்களில் அனிமேஷன் காட்சிகளுக்கு பெரிதாக வேலை இருக்காது. ஆனால், விண்வெளியில் காதலர்கள் பாடும் பாட்டு, நரகம் எனும் பாட்டு, கூகுளைப் பற்றிய பாடல், ராணுவத்துக்காக ஒரு பாட்டு, ஸ்வரங்களை மட்டுமே கொண்ட பாட்டு, வார்த்தை விளையாட்டோடு ஒரு பாட்டு, காபி பிரியர்கள், ராயல் என்பீல்ட்டின் காதலர்கள், பிரியாணி ரசிகர்களுக்காக ஒரு பாட்டு, இயற்கையின் மகத்துவத்தை விளக்கும் பாடல்… இப்படிப்பட்ட பாடல்களில் அனிமேஷன் துணைபுரிந்தது” என்கிறார் ஷ்ரவண்.

99 பாடல்களில் இடம்பெற்ற முதல் வார்த்தைகளைக் கோத்து உருவாக்கிய பாடல்தான் தொகுப்பின் நூறாவது பாடல். அரிய தாள வாத்தியங்களையும் ஒரு பாடலில் கொரிய தாளவாத்தியத்தையும் பயன்படுத்தியிருக்கிறார். காதல், வீரம், நகைச்சுவை, சோகம், நையாண்டி, ரௌத்திரம், மகிழ்ச்சி எனப் பல உணர்ச்சிகளின் கலவையாக நூறு நொடிகளில் ஒலிக்கும் ஒவ்வொரு பாடலிலும் இசை தனித் தன்மையோடு வெளிப்பட்டிருக்கிறது. அவரின் இசையில் நீங்கள் வசமாக தயாராக இருக்கிறீர்களா? சில கேள்விகளுக்கான பதில், நீங்கள் கேட்டால் மட்டுமே கிடைக்கும்!

‘ஏலேலோ’ பாடல் இசைத் தொகுப்பைக் காண: https://bit.ly/39xly1P

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x