Last Updated : 26 Jan, 2021 03:17 AM

 

Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

இளமைக் களம்: பிரிஸ்பேனில் வென்ற சாமானியர்கள்!

ஆஸ்திரேலியாவில் இளையவர் களையும் புதியவர்களையும் வைத்துக்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை வென்றது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முத்தாய்ப்பாக அமைந்துவிட்டது. அதைவிட மிகப் பெரிய சரித்திர சாதனை, பிரிஸ்பேனில் பெற்ற வெற்றிதான். 32 ஆண்டுகளாக பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை யாரும் வீழ்த்தியதில்லை என்கிற இறுமாப்பை தவிடுபொடியாக்கியிருக் கிறார்கள் இளைய இந்தியர்கள். பிரிஸ்பேனில் வென்ற முதல் ஆசியஅணி இந்தியா என்ற பெருமையைத் தேடித்தந்துள்ளார்கள் இளைஞர்கள்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அனுபவமற்ற பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய போட்டி என்கிற பெயரோடு பிரிஸ்பேனில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல் கல். இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்த ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், முகம்மது சிராஜ், டி. நடராஜன், நவ்தீப் சைனி ஆகியோர் சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது, கிரிக்கெட்டை ஆராதிக்கும் இந்தியர்களுக்கு இனிமை யான தருணம். இந்த ஐவரை பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்:

ஷர்துல் தாக்கூர்: பிரிஸ்பேனில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஜொலித்து வெற்றிக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான ஷர்துல் தாக்கூர், மகாராஷ்டிரத்தில் பால்ஹர் என்ற சிறிய நகரில் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட்டில் தன்னைச் செதுக்கிக்கொள்ள நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மும்பைக்குச் செல்லவே கஷ்டப்பட்டவர். “சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசுவதைவிடக் கஷ்டமானது, மும்பை ரயில்களில் இடம் பிடிப்பதுதான்” என்று நகைச்சுவையாக சொல்லும் ஷர்துல், தன் கனவை அடைய மெனக்கெட்ட சாமானிய இளைஞர்.

வாஷிங்டன் சுந்தர்:

பிரிஸ்பேனில் பவுலிங்கில் சாதித்தோடு, பேட்டிங்கை சரிவிலிருந்து இந்தியாவை மீட்ட இன்னொரு நாயகன் வாஷிங்டன் சுந்தர். சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், சிறு வயதில் கனவோடு சென்னை மெரினாக் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடியவர்களில் ஒருவர். வாஷிங்டன் சுந்தரின் தந்தையின் பெயர்தான் சுந்தர். வாஷிங்டன் என்பது சுந்தர் இளைஞராக இருந்தபோது கிரிக்கெட் வீரராக உருவாகப் பொருளாதாரரீதியாக உதவியவரின் பெயரைத் தன் மகனுக்கு வைத்துள்ளார். டி20 ஸ்பெஷலிஸ்ட்டாகச் சித்திரிக்கப்பட்ட வாஷிங்டன், டெஸ்ட்டிலும் ஜமாய்க்கக் காத்திருக்கும் இளைஞர்.

டி. நடராஜன்:

சேலம் சின்னப்பம் பட்டியில் ஏழை நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் நடராஜன். அவருடைய தாய் சாலையோர உணவகத்தை நடத்திவருபவர். கிரிக்கெட் விளையாடத் தேவையான கருவிகளை வாங்கக்கூட கஷ்டப்பட்டவர். அந்தக் குடும்பத்திலிருந்து இன்று ‘ரைசிங் ஸ்டா’ராக உருவெடுத்திருக்கிறார் நடராஜன். வலைப் பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியா சென்று, ஒரே தொடரில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்தியர் என்ற பெயரோடு முத்திரையும் பதித்திருக்கிறார். இன்று அவருடைய வெற்றிக் கதை ஒவ்வோர் இளைஞருக்கும் எடுத்துக்காட்டாகியிருக்கிறது.

முகம்மது சிராஜ்:

நடராஜனை போலவே சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் முகம்மது சிராஜ். ஹைதராபாத்தில் ஏழை ஆட்டோரிக்ஷா ஓட்டுநரின் மகன் இவர். பிரிஸ்பேனில் முக்கியமான கட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகம்மது சிராஜ், மற்றவர்களை போல சாதாரண மனநிலையில் விளையாடவில்லை. இத்தொடரில் இருந்தபோது அவருடைய தந்தை காலமானார். கிரிக்கெட்டில் விளையாடுவது மட்டுமே தன் ஏழைத் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்ற நோக்கத்துடன், இறுதி சடங்குக்குக்கூட செல்லாமல் ஆஸ்திரேலியாவிலேயே இருந்தார். அத்துடன் இனரீதியில் ரசிகர்களின் தாக்குதலையும் எதிர்கொண்டார். இன்று சாதித்த நாயகனாக மிளிர்ந்துகொண்டிருக்கிறார் இந்த இளைஞர்.

நவ்தீப் சைனி:

ஹரியாணாவில் கர்னால் என்ற பகுதியைச் சேர்ந்த நவ்தீப் சைனியும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இவருடைய தந்தை அரசுப் பேருந்து ஓட்டுநர். கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் அளவுக்கு பொருளாதர வசதியற்ற குடும்பம். தனக்குத் தேவையான பணத்தைத் திரட்ட ஊர்ஊராகச் சென்று கிரிக்கெட் போட்டித்தொடர்களில் பங்கேற்றவர் சைனி. இன்று இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் இந்த நம்பிக்கை நாயகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x