Published : 16 Oct 2015 01:33 PM
Last Updated : 16 Oct 2015 01:33 PM
“கங்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு இந்திய பல்கலைக்கழகத்துக்குச் சென்று கங்கை நதி தொடர்பான வரைபடங்கள் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அங்கு இருந்த பேராசிரியர் ஒருவர், 'நீ என்ன சி.ஐ.ஏ. ஏஜென்ட்டா? எதற்கு அதையெல்லாம் கேட்கிறாய்?' என்றார். நான் எனது ஆய்வு குறித்துக் கூறினேன். ஆனால், பலன் இல்லை.” - இந்தியாவின் மிகப் பெரிய புனித நதியாக மதிக்கப்படும் கங்கை பற்றி பத்து ஆண்டுகள் ஆய்வு செய்த அந்தோனி ஆக்சியவட்டியிடம் கேட்கப்பட்ட கேள்விதான் இது.
நதியின் விஸ்தீரணம்
இவர் யார் என்று அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, கங்கை நதிக்காக ஏன் இவர் பத்து ஆண்டுகள் செலவிட்டார் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.
காலம்காலமாக இந்தியாவின் முக்கியமான நதியாக மதிக்கப்பட்டு வருகிறது கங்கை. அது ஒரு நதி மட்டுமல்ல. அது இந்தியர்களின் கலாச்சாரம். உலகத்தின் பார்வையில் அது ஓர் ஆச்சர்யம். அதனால்தான், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, 'தொடர்ந்து மாற்றங்களைக் கண்டு வந்தாலும், அது இன்னும் அதே கங்கைதான்' என்றார்.
உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரி பனிச்சிகரத்தில் தொடங்கி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்குள் நுழைந்து வங்கக் கடலை அடையும்வரை கங்கையின் நீளம் சுமார் 2,500 கிலோமீட்டர்.
கங்கையின் இந்த நீள, அகலத்தை கடைசியாக 1964-ல் அப்போதைய அரசு அதிகாரிகள் வரைபடமாகப் பதிவு செய்தனர். ஆனால், அது முழுமையான வரைபடமாகவும் இருக்கவில்லை. அதற்குப் பிறகு 50 ஆண்டுகளாக, கங்கை நதி செல்லும் தடத்தைப் புதிதாக யாரும் வரைபடமாகப் பதிவு செய்யவில்லை.
யார் இந்த அந்தோனி?
இந்நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு கங்கை செல்லும் தடம், அது காலம்தோறும் பயணிக்கும் தடங்கள் எப்படியெல்லாம் மாறியிருக்கின்றன, அதன் கரையோரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், அது செல்லும் இடங்களில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் எவ்வாறு மாறுபட்டிருக்கிறது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கி முழுமையான வரைபடமாகப் பதிவு செய்துள்ளார் அந்தோனி ஆக்சியவட்டி.
இவர் அடிப்படையில் ஒரு கட்டிடக் கலைஞர், வரைபடங்கள் உருவாக்குபவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த அவர், தற்போது அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறார்.
நியூயார்க்கைச் சேர்ந்த இவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தார். கங்கையை வரைபடமாக 2004-ல் பதிவு செய்யத் தொடங்கியபோது இவருடைய வயது 23! பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய 33-வது வயதில் கங்கையை வரைபடமாகப் பதிவு செய்யும் இவருடைய முயற்சி ‘கேஞ்சஸ் வாட்டர் மெஷின்: டிசைனிங் நியூ இண்டியாஸ் ஏன்சியன்ட் ரிவர்' எனும் தலைப்பில் புத்தகமாகப் பலன் தந்திருக்கிறது.
நிதிநல்கை தந்த வாய்ப்பு
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற ‘சி.எம்.எஸ். வாதாவரன் சுற்றுச்சூழல் மற்றும் வனஉயிர் திரைப்பட விழா'வின்போது இந்தப் புத்தகம் வெளி யிடப்பட்டது. அப்போது அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
"நான் அமெரிக்காவின் மிஸிஸிபி நதிக் கரையோரத்தில் பிறந்தேன். இத்தாலியில் உள்ள டைபர் நதிக் கரையோரத்தில் வளர்ந்தேன். அதனால் நதிக் கரையோரங்களில் தோன்றிய நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி சின்ன வயசிலிருந்தே ஆர்வம் இருந்தது.
கட்டிடக் கலை தொடர்பான பட்டப்படிப்பை முடித்தவுடன், இந்தியாவில் கங்கைக் கரையோரம் உள்ள நகரங்களைப் பற்றி ஆய்வு செய்ய நினைத்தேன். அதற்கு அமெரிக்க அரசிடமிருந்து ஜே.வில்லியம் ஃபுல்பிரைட் நிதிநல்கை கிடைத்தது. அதன் காரணமாக, நான் இந்தியா வந்தேன்.
பல இடங்களில் கங்கை நதியின் வரைபடங்களைத் தேடி அலைந்தேன். எங்குமே கங்கை நதி தொடர்பான முழுமையான வரைபடம் கிடைக்கவில்லை. கிடைத்த சில வரைபடங்களும் 50 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருந்தன. சமீபகால வரைபடங்கள் எதுவும் இல்லை. எனவே, நாம் ஏன் கங்கை நதி தொடர்பான முழுமையான வரைபடத்தை உருவாக்கக் கூடாது என்று எண்ணம் தோன்றியது.
நடந்து நடந்து...
அந்த எண்ணம் முழுமையடைய பத்து ஆண்டுகள் ஆனது. மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று தங்கி ஆய்வு செய்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று விடுவேன். அந்த பத்து ஆண்டுகளில் சுமார் 23 முறை இந்தியாவுக்கு வந்தேன். அது 'கூகுள் எர்த்' தொழில்நுட்பம் இல்லாத காலம். எனவே நடந்தும், படகில் சென்றும், பேருந்துகளில் பயணித்தும் இந்த வரைபடத்தை உருவாக்கியுள்ளேன். வரைபடம் என்றால் வெறுமனே நதி செல்லும் தடங்களை மட்டுமே பதிவு செய்யாமல், அந்த நதி பாய்கிற இடங்களில் ஏற்பட்டுள்ள விவசாய வளர்ச்சி, நகரங்களின் வளர்ச்சி, நிலத்தடி நீர் வளம், நதியின் கலாச்சார மாற்றங்கள், அந்த நதி தொடர்பான அரசியல் விவாதங்கள் உள்ளிட்ட பல விஷயங்களையும் பதிவு செய்தேன்.
1854-ம் ஆண்டு கங்கை கால்வாய் கட்டப்பட்டு, அதன் வழியாக கங்கை நதி செலுத்தப்பட்டபோதுதான் கங்கை நதிப் படுகையில் பாசன முறை வளம் சேர்க்கும் விதமாக மாறியது. அதனால்தான் இந்தப் பகுதியை கங்கை நீர் இயந்திரம் (கேஞ்சஸ் வாட்டர் மெஷின்) என்கிறோம்" என்றார்.
இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக பனாரஸ் நகரத்தில் உள்ள 'பாஷா பாரதி' எனும் கல்வி நிலையத்தில் ஆறு வார கால இந்தி மொழிப் பயிற்சி பெற்றிருக்கிறார். 'தற்போது கங்கை நதிக்கு உள்ள முக்கியமான பிரச்சினை என்ன' என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில் இது:
"கங்கை நதி மட்டும் என்றல்ல... எல்லா நதிகளுக்குமே உள்ள பிரச்சினை மாசுபாடுதான். இந்த மாசுபாடுகளை ஆராய எனது நண்பர்கள் சிலர் இந்தியாவுக்கு வர முயற்சித்தபோது அவர்களுக்கு விசா மறுக்கப்பட்டது.
எல்லா நதிகளுக்கும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக கங்கைக்கு, அது செல்லும் இடங்களில் விவசாயத்துக்கும், நிலத்தடி நீர் வளத்துக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான் முக்கியப் பிரச்சினை.
காரணம், கங்கையின் தடங்களில் நிலத்தடி நீரை ஆழ்துளை கிணறு போட்டு அதிகளவில் உறிஞ்சி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!" என்றார்.
வளம் பெருக்கும்
சரி, உங்களுடைய இந்தப் பணி இந்தியர்களுக்கு எப்படி உதவும்? "கங்கையைச் சுத்தம் செய்ய பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால், முழுமையான வரைபடம் இல்லாமல் அதைச் சாத்தியப்படுத்த முடியாது. அந்த வகையில் என் பணி நிச்சயமாக இந்தியாவுக்கு உதவும்" என்றார்.
"இத்தனை ஆண்டு ஆய்வில் கங்கை உங்களுக்குள் ஏற்படுத்திய புரிதல் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டால், அதற்கு 1808-ம் ஆண் டில் இந்தியாவில் ஆங்கிலேய அரசு அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் ஜான்ஸன் என்பவரின் எண்ண ஓட்டத்தைத்தான் பதிலாகச் சொல்வேன். அவர் இப்படிச் சொல்கிறார்: "கங்கை என்பது நோய் உண்டாக்குவதாகவும் (வெள்ளம், வறட்சி) அதே சமயம் வளத்தைப் பெருக்குவதாகவும் (விவசாயம்) இருக்கிறது!"
அதன்படி பார்த்தால், 'இன்க்ரெடிபிள் இந்தியா' என்று சொல்வதுபோல, 'இன்க்ரெடிபிள் கங்கா!'" என்றுதான் சொல்லவேண்டும் என்று புன்னகைக்கிறார் அந்தோனி ஆக்சியவட்டி.
துப்பாக்கிக்கு பதில் சொன்ன நேரம்
"இந்த ஆய்வின்போது எனக்கு நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்தன. அதில் ஒன்று திக்குத் தெரியாத காட்டில் துப்பாக்கி ஏந்திய பெண்களிடம் நான் மாட்டிக் கொண்டது.
வாரணாசியில் இருந்து அலகாபாத் செல்லும் தடத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்வாய் என்று சொல்லப்படும் நாராயண்பூர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் கங்கை நதி செல்லும் தடத்தில் அமைந்துள்ளது. இதை ஒளிப்படம் எடுப்பதற்காக காட்டுக்குள் தன்னந்தனியாகச் சென்றேன்.
அப்போது துப்பாக்கி ஏந்திய மூன்று பெண்கள் எதிர்ப்பட்டனர். அவர்கள் துப்பாக்கியைக் காட்டியதால் உடனே கைகளை மேலே உயர்த்திக்கொண்டேன். என்ன செய்வதென தெரியாமல், 'ஆப்கா தேஷ் பஹுத் சுந்தர் ஹை!' (உங்களுடைய நாடு மிகவும் அழகாக இருக்கிறது) என்று சொன்னேன். அதற்கு அவர்கள் சிரித்துவிட்டனர். பிறகு நான் விவரங்களைக் கூறிய பிறகு, மேற்கொண்டு செல்ல என்னை அனுமதித்தனர். அவர்கள் நக்சலைட்டுகள் என்பது சில நாட்கள் கழித்துத்தான் எனக்குத் தெரிய வந்தது" என்கிறார் அந்தோனி ஆக்சியவட்டி.
அந்தோனி ஆக்சியவட்டி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT