Published : 09 Oct 2015 11:13 AM
Last Updated : 09 Oct 2015 11:13 AM
இ-மெயில் அறிமுகமான நாட்களில் மிக ஆர்வமாக ஒரு மெயில் ஐடியை உருவாக்கி அதைப் பலரிடம் பகிர்ந்துகொண்டு யாராவது மெயில் அனுப்புவார்களா என்று ஏக்கத்துடன் பார்ப்போம். நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவுடன், நாம் பணியாற்றும் நிறுவனத்தின் இணைய முகவரியிலேயே மெயில் கிடைக்கும்போது மேலும் மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆனால், ஐ.டி. பணியாளர்களுக்கு இ-மெயில் என்பது அதுமட்டுமல்ல. பொதுவாகவே கார்பரேட் நிறுவனங்களில் ‘முகம் பார்த்துப்' பேசும்போது இருக்கும் கனிவு, இ-மெயில்களில் வெளிப்படாது. அலுவல் சார்ந்த பலவிதமான தகவல்கள் இவ்வாறு மெயில் மூலம்தான் பகிரப்படும்.
ஐ.டி. பணியாளரான நஸ்ரானா கூறும்போது, “தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்காகதான் மெயில்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. புதிதாக வேலையில் சேர்ந்திருப் பவர்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அதை அவர்களிடம் நேரில் எடுத்துக் கூறி திருத்திக்கொள்ள யாரும் வாய்ப்பு தருவதில்லை. உடனே ‘எஸ்கலேஷன்’ மெயில் அனுப்பப்படும்.
எனது இமீடியட் சீனியர், அவருக்கு சீனியர், அவருக்கும் சீனியர் என பலருக்கு மெயிலின் நகல் அனுப்பியிருப்பார்கள். இந்த மெயில்கள் நம் அன்றாட தவறுகளை அலுவலகக் கோப்புகளில் ஏற்றிவிடுகின்றன" என்கிறார்.
தவறுகளைச் சுட்டிக்காட்டும் மெயில்கள் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் நகலாக அனுப்பப்படும் என்பதுதான் இதில் எழும் மற்றொரு பிரச்சினை. உடனே படிக்க மாட்டார்கள் என்றாலும், சிறு சிறு பிரச்சினைகளெல்லாம் ஆவணமாக்கப்படுவது அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
ஐ.டி. நிறுவன மேலாளரான அஸ்வின் கூறும்போது, "குறைகள் மட்டுமல்ல. பாராட்டுகளும் இ-மெயில் வழியாக அனுப்பு கிறோம். அனைத்துமே பதிவு செய்யப்படுவதுதான் நல்லது. இதில் பணியாளார்கள் அச்சப்பட என்ன இருக்கிறது? ஒரு நிர்வாகம் தனது பணியாளர்கள் பற்றிய தகவல்களை வைத்துக்கொள்ளாமல் செயல்பட முடியாது" என்றார்.
“மெயில் அனுப்புவது நவீன கால வசதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை ஒரு எச்சரிக்கை முறையாக பயன்படுத்துவது நியாயமில்லை என்று தோன்றுகிறது.
நம்முடன் நின்று நன்றாக பேசிக் கொண்டிருக்கும் ஒருவர் திடீரென்று இருக்கையில் அமர்ந்தவுடன் நம்மை குற்றம் சொல்லி மெயில் அனுப்புவார். அதை டீம் லீடர், மேலாளர், என எல்லோருக்கும் சி.சி. போடுவார். இது பணியாளர்கள் மத்தியில் உள்ள நட்புணர்வையே கேள்விக்கு உள்ளாக்கிவிடும்" என்கிறார் ஐ.டி. ஊழியர் தினேஷ்.
மற்றொரு ஐடி பணியாளரான கார்த்திக் கூறும்போது, “ஒரு நாளைக்கு 40-50 மெயில்கள் வரும். அனைத்தையும் படிக்க நேரம் இருக்காது. அவற்றில் பல மெயில்கள் நமது அன்றாட வேலைக்கு சம்பந்தம் இல்லாததாக இருக்கும். எனவே முக்கியமான மெயில்களை ‘கண்டிப்பாகப் படிக்கவும்’ என்று குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.
எல்லாம் இ-மெயிலில் பதிவாகிக் கொண்டேயிருக்கிறது. ஐ.டி. நிறுவன மேலாளர்களுக்கு இது உதவியான ஒன்றுதான். எனவே இதில் மாற்றம் வராது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT