Published : 09 Oct 2015 11:11 AM
Last Updated : 09 Oct 2015 11:11 AM
அவளுக்கு 22 வயது இருக்கலாம். அன்று அவளுடைய திருமணம். வெள்ளை உடை அணிந்து, கையில் பூங்கொத்துகளுடன் வானிலிருந்து இறங்கி வந்த தேவதையைப் போல இருந்தாள். அவளைக் கரம்பற்றித் திருமண மேடை நோக்கி நடத்திச் செல்ல அவளின் தந்தை வருகிறார். ஒரு பெண்ணுக்கு இது எவ்வளவு பெரிய மகிழ்ச்சியான தருணம்!
கட்... கட்... கட்... ஓவர் டூ அமெரிக்கா!
அவளுக்கு 22 வயது இருக்கலாம். அன்று அவளுடைய திருமணம். வெள்ளை உடை அணிந்து, கையில் பூங்கொத்துகளுடன் வானிலிருந்து இறங்கி வந்த தேவதையைப் போல இருந்தாள். அவளைக் கைப்பற்றி திருமண மேடை நோக்கி நடத்திச் செல்ல அவளின் இரண்டு தந்தையரும் வந்தனர். ஒருவர் பெற்றெடுத்த தந்தை. இன்னொருவர் வளர்ப்புத் தந்தை. ஒரு பெண்ணுக்கு இது எவ்வளவு பெரிய மகிழ்ச்சியான தருணம்!
ஆம். இப்படி ஒரு சம்பவம் கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் நடந்திருக்கிறது.
அந்த மணப்பெண்ணின் பெயர் பிரிட்டனி பெக். அவளைப் பெற்றெடுத்த தந்தை டாட் பேச்மேன். அவளின் வளர்ப்புத் தந்தை டாட் சென்ட்ரோஸ்கி.
"நான் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன். டாட் பேச்மேன் ஓடோடி வந்தார். என் கைகளைப் பற்றி இழுத்தார். 'என்னைப் போலவே என் மகளை வளர்க்க நீங்களும் அயராது பாடுபட்டிருக்கிறீர்கள். நாம் இருவரும் நம் மகளை திருமண மேடைக்குக் கூட்டிச் செல்வோம்' என்று என்னிடம் சொன்னார். என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் அது" என்று கூறியுள்ளார் டாட் சென்ட்ரோஸ்கி. தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தில் அவர் அழுதுகொண்டிருந்தார். நெகிழ்வின் அழுகை அது.
இவர்கள் இருவரும் தங்களது மகளை திருமண மேடைக்கு நடத்திச் செல்வதை டெலியா ப்ளாக்பர்ன் எனும் பெண்மணி ஒளிப்படம் எடுத்துள்ளார். அதைப் பற்றிய குறிப்புடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரவும் செய்தார்.
அவரின் அந்தப் பதிவை சுமார் 1 கோடி பேருக்கும் மேல் லைக் செய்துள்ளனர். சுமார் 5 லட்சம் முறை அது 'ஷேர்' செய்யப்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு அழகான ஆச்சரியம். டெலியாவும் தனது பிள்ளைகளுக்கு ஒரு வளர்ப்புத் தாய் என்பதுதான்!
"வளர்ப்பு பெற்றோர்களாக இருப்பது ரொம்பவும் கடினமான விஷயம். நன்றியறிதல் இல்லாத விஷயமும் கூட! ஆகவே, இதுபோன்ற சில சம்பவங்கள் நடைபெறும்போது, அது பலரின் மனதையும் தைக்கிறது" என்கிறார் டெலியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT