Last Updated : 09 Oct, 2015 10:45 AM

 

Published : 09 Oct 2015 10:45 AM
Last Updated : 09 Oct 2015 10:45 AM

கம்பு மேலே பாம்பு போலே...

அதிகாலை நேரம்... கீழ் வானம் சிவந்துகொண்டிருக்கும் வேளையில், அந்த மாணவர்களின் கைகளும் சிவந்திருக்கின்றன. மைதானத்தின் நடுவே நடப்பட்டிருக்கும் கம்பத்தில் கீழ் மேலாக, மேல் கீழாக என ஏறி, சறுக்கி, வளைந்து, நெளிந்து என பயிற்சி பெறுவதால் உண்டான சிவப்பு அது.

அந்த மாணவர்கள் ஏதோ போருக்குத் தயாராவது போன்ற தோற்றம் உங்கள் மனதில் உருவாகிறதா? சோழவந்தான் அருகே உள்ள விவேகானந்தா கல்லூரியில் தினமும் இந்தக் காட்சியைப் பார்க்கலாம்.

ஆனால் அவர்கள் போருக்குத் தயாராகவில்லை. போட்டிக்குத் தயாராகிறார்கள். ஆம். அந்த மாணவர்கள், ‘மள்ளர் கம்' எனும் உடற்பயிற்சியினைப் பெற்று வருகிறார்கள். பயிற்சியோடு நின்று விடாமல் அதுசார்ந்த போட்டிகளிலும் பங்கேற்று சாதனைகள் படைத்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் அதிகாலை நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விளையாட்டு, யோகா என ஏதாவது ஒரு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

மைதானத்தின் ஒரு பகுதியில் சுமார் 30 மாணவர்கள் அங்கே நடப் பட்டிருக்கும் கம்பத்தின் மேலேறியும், பாம்பைப் போல கம்பத்தை இறுகப் பிடித்தும் என கம்பத்தில் பயிற்சி பெறுகின்றனர்.

மைதானத்தில் நடக்கும் இந்தப் பயிற்சியைப் பார்க்கும் போது சற்று வித்தியாசமாகத் தோன்றும். இந்த பயிற்சி மள்ளர்கம் என அழைக்கப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் சீனிமுருகன் கூறும்போது, "பழங்காலத்தில் போரில் ஈடுபட்ட வீரர்கள் மள்ளர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் போருக்காக கழுமரம் ஏறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அதுவே தற்போது மள்ளர் கம் என அழைக்கப்படுகிறது. சிலம்பம் என்ற பெயரில் நாம் கையால் கம்பைச் சுற்றுவதும், மள்ளர் கம் என்ற பெயரில் கம்பத்தை நாம் சுற்றுவதும் கலாச்சாரத்தோடு தொடர்புடையது. எங்கள் கல்லூரியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக மள்ளர் கம் பயிற்சி கற்றுத்தரப்படுகிறது.

இந்த விளையாட்டுக்கு நீண்ட பயிற்சி தேவை. விளையாடும் போது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதால் மாணவர்களுக்கு பயிற்சியின் போதே உடலுக்கு வளைந்து கொடுக்கும் தன்மையும், மனதுக்கு தியானம் ஆகியவையும் கற்றுத் தரப்படுகிறது.

எங்கள் கல்லூரி மாணவர்கள் சுமார் 30 விதமான பயிற்சிகளை நிகழ்த்திக் காட்டும் திறமை உள்ளவர்கள். பயிற்சியில் ஈடுபடுபவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பர். 3 ஆண்டு பயிற்சி எடுப்பவர்களுக்கு காலம் முழுவதும் இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

அந்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணர் செல்வகுமாரிடம் பேசியபோது, "தினந்தோறும் காலை 5 மணிக்கு மைதானத்துக்கு வருவோம். அரை மணி நேரம் வார்ம்-அப் செய்வோம். பின்னர் 7.30 மணி வரை பயிற்சியில் ஈடுபடுவோம். போட்டிகளுக்குச் செல்லும் போது 10 முதல் 20 விதமான பயிற்சிகளை நிகழ்த்துவோம். கல்லூரியில் படிக்கும் மூன்று ஆண்டுகளும் நாங்கள் இந்தப் பயிற்சியைக் கட்டாயம் மேற்கொள்வோம்" என்கிறார் ‘கம்'பீரமாக!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x