Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM
திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 2020-ம் ஆண்டை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாதபடி செய்துவிட்டது நாவல் கரோனா வைரஸ். இந்த இக்கட்டான காலகட்டத்தில் மனிதர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இணையமே துணை நின்றது. அதற்கு அத்தாட்சியாக இந்த ஆண்டில் ஏராளமான கரோனா வைரல்கள் இணையத்தை நிரப்பின.
கரோனா விழிப்புணர்வு
சென்னையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வலம்வருவோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் அதிகாரி ராஜேஷ் பாபு கையில் எடுத்த ஆயுதம், கரோனா ஹெல்மெட். கரோனா வைரஸைப் போன்று ஹெல்மெட்டை மாற்றியமைத்து, சாலையில் களமிறங்கி கவனம் ஈர்த்தார். வீட்டை விட்டு வெளியே வருவோரிடம் அவர் ஏற்படுத்திய கரோனா விழிப்புணர்வு ஒளிப்படங்கள் உலக அளவில் அவரை வைரலாக்கின. இதேபோல் சாலைகளில் வரையப்பட்ட கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள், சென்னையில் வலம்வந்த கரோனா ஆட்டோ, ஹைதராபாத்தில் வளையவந்த கரோனா குதிரை ஆகிய ஒளிப்படங்களும் இணையத்தில் ‘ஹிட்’ அடித்தன.
கரோனா உணவு
இறுக்கமான ஊரடங்கு சூழ்நிலையிலும் சில குறும்பு மனிதர்கள் கரோனா வைரஸை வைத்துச் சிரிப்பு மூட்டத் தவறவில்லை. எளிதில் வெல்ல முடியாத கரோனா வைரஸ் வடிவத்தில் உணவை உருவாக்கிப் பலர் அசத்தினார்கள். கரோனா வைரஸ் வடிவத்தில் பக்கோடா, தோசை, அடையை வார்த்து அவற்றின் ஒளிப்படங்களை நம்மூர்க்காரர்கள் பரப்பினார்கள். வைரஸுக்கு முன்பாகவே இப்படங்கள் வேகமாகப் பரவின. இதேபோல வியட்நாமில் பர்கர், பிரான்ஸில் ஈஸ்டர் முட்டை, இத்தாலியில் சாண்ட்விச், ஜெர்மனியில் கேக் என கரோனா வைரஸ் வடிவில் இணையத்தில் வைரல் ஒளிப்படங்கள் வலம்வந்தன.
டெலிவரி நாய்
கொலம்பியாவில் மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த டெலிவரி பாய்... சாரி, நாய் இணையத்திலும் உலக அளவில் ஹிட் அடித்தது. கரோனா வைரஸால் பொதுமக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்க, ஏரோஸ் என்கிற அந்த நாய் டெலிவரி வேலை பார்த்தது. சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வாடிக்கையாளரின் பெயரை வைத்து வீட்டைக் கண்டறிந்து பொருள்களை வீட்டில் சேர்த்தது அந்த நாய். வீட்டை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறியது இந்த ஜீவன்.
வடிவேல் மீம்ஸ்
கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவல் வாட்ஸ்அப், மீம்ஸ் ஆகியவை சமூக வலைத்தளங்களை விட்டுவைக்காமல் சுற்றிச் சுற்றிவந்தன. தங்களைப் பின்தொடரும் ஆண்களை இருமலால் விரட்டும் பெண், கைகுலுக்குவதற்குப் பதிலான கால்களால் இடித்துக்கொள்வது, நான் இந்தியாவில் உக்கிரமாக இருப்பேன் என்று கரோனாவிடம் சொல்லும் சூரியன் என வித்தியாசமான காணொலிகளும் மீம்களும் தொடர்ச்சியாக வெளிவந்தன. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ‘கரோனா கலாய்’ மீம்கள் இணைய உலகத்தின் ரசிப்புக்குத் தீனிபோட்டன.
முகக்கவசங்கள் உலா
கரோனாவுக்கெனத் தடுப்பு மருந்து இல்லாத நிலையில் முகக்கவசம்தான் மக்களின் ஒரே தடுப்பு ஆயுதமானது. உலகில் விதவிதமான முகக்கவசங்கள் உலாவந்த வண்ணம் உள்ளன. மூக்கு முதல் தாடைப் பகுதிவரையிலான உண்மையான முகப்பகுதியை அச்சிட்டுத் தரும் முகக்கவசமும் அறிமுகமானது. குவைத் விமான நிலையத்தில் இளம் பெண் ஒருவர் அந்த முகக்கவசத்தை அணிந்துவர, அது சமூக ஊடகங்களில் வைரலானது. இதேபோல காமிக்ஸ் முகக்கவசம், பன்றி முகத்தில் கவசம், தண்ணீர் கேன் கவசம், முட்டைக்கோஸ் கவசம், தமிழகத்தில் பனை ஓலையைக் கொண்டு உருவாக்கப்பட்ட முகக்கவசம் போன்றவை சமூகஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தன.
கரோனா காலக் கல்யாணங்கள்
ஆடம்பரமாகத் திருமணங்கள் செய்வதற்குத் தயங்காதவர்கள் இந்தியர்கள். ஆனால், இந்த கரோனா காலத்தில் ஜம்முன்னு திருமணம் செய்வதைவிட கம்முன்னு திருமணம் செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம் என நிரூபித்தன பல இளம் ஜோடிகள். இதில் தமிழ்நாடு-கேரள எல்லையான
சின்னாறு சோதனைச் சாவடி அமைந்திருந்த சாலையில் நடைபெற்ற ராபின்சன்- பிரியங்கா திருமணம் இணையத்தைக் கலக்கியது. கரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த இவர்களுடைய திருமணம், ஜூன் 7 அன்று நடந்தேறியது. மணப்பெண் பெற்றோரை ஆரத்தழுவி விடைபெற முடியாமல் கண்ணீரும் புன்னகையுமாக புகுந்த வீட்டுக்குச் சென்ற காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
நம்பிக்கை பாடல்
கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கடுமையாகப் போராடிவருகிறார்கள். இந்த நெருக்கடியான காலத்தில், மக்களிடம் மனநலத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியாவைச் சேர்ந்த 60 இளம் மருத்துவர்கள் பிரபல அமெரிக்கப் பாடகர் பர்ரேல் வில்லியம்ஸின் ‘ஹேப்பி’ பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார்கள். ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் ஹேப்பினெஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நம்பிக்கைக்கான பாடல்’ (Song of Hope) என்ற தலைப்பில் பதிவேற்றப்பட்ட கரோனா காணொலிப் பாடல் சமூக ஊடகங்களில் வைரலானது.
பொம்மைகள், ஒளிப்படங்கள்
கரோனாவால் திரையரங்குகள், மைதானங்கள் சமூக இடைவெளியுடன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. சில நாடுகளில் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட, திரையரங்கில் இரண்டு சீட்டு தள்ளி ஒருவர் என்கிற அடிப்படையிலேயே உட்கார வைக்கப்பட்டார்கள். பக்கத்து சீட்டில் மற்றவர்கள் உட்கார்ந்துவிடக் கூடாது என்பதால், காலி சீட்டில் பொம்மைகள், சினிமா பிரபலங்களின் உருவப் பொம்மைகள் வைக்கப்பட்டன. மைதான இருக்கைகளில் ரசிகர்களின் ஒளிப்பட அட்டைகளை வைத்து உயிரோட்டமாக காட்ட முயலப்பட்டது. இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாயின.
சேட்டன்களின் நடனம்
கரோனாவைத் தடுக்க கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. இதை வலியுறுத்தி கேரளக் காவல் துறை சார்பில் கைகளை எவ்வாறு சுத்தமாகக் கழுவ வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டது. ஆறு போலீஸார் முகக் கவசம் அணிந்துகொண்டு ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் வரும் ‘களக்காடு...’ என்ற பாடலுக்கு நடனமாடியவாறே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதுவும் வைரலானது.
கரோனா காதல்
காதல் இல்லாத காலம் என்பது வரலாற்றில் இல்லை. கரோனாவால் மட்டும் காதலைத் தடுத்துவிட முடியுமா என்ன? முடியாது என்று நிரூபித்தார் புரூக்ளினைச் சேர்ந்த ஒளிப்படக்கலைஞர் ஜெரிமி கோஹன் (28). கரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ஜெரிமி, தினந்தோறும் வீட்டு மாடியில் உடற்பயிற்சி செய்துவந்தார். வீட்டுக்கு எதிரே தோரி சிக்னெரல்லா ‘டிக்டாக்’ காணொலிக்காக நடனமாடிக்கொண்டிருந்தார். அவரிடம் பேச முயன்ற ஜெரிமி கையசைக்க, பதிலுக்குத் தோரியும் கையசைத்தார்.
அவரிடம் எப்படி பேசுவது என்று யோசித்த ஜெரிமி, தன்னிடமிருந்த ட்ரோனில் தன் அலைபேசி எண்ணை எழுதி அனுப்பினார். ஆச்சரியமூட்டும்விதமாக தோரியும் பதில் அனுப்ப, இறுதியில் அது காதலில் முடிந்தது. பலூன் போன்ற குமிழியைத் தயார்செய்து, குமிழிக்குள் இருந்தவாறு காதலி தோரியைச் சந்தித்தார் ஜெரிமி. இந்தக் கரோனா காலக் காதல் கதையை காணொலியில் ஜெரிமி வெளியிட, அது உலக அளவில் ஹிட் அடித்தது.
இதுபோன்ற விநோத வைரல்கள், வரும் ஆண்டிலும் நீடிக்கலாம். எல்லாம் கரோனா தந்த வரம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT