Last Updated : 09 Oct, 2015 10:37 AM

 

Published : 09 Oct 2015 10:37 AM
Last Updated : 09 Oct 2015 10:37 AM

குறும்படங்களை ஹிட்டாக்கும் இணையதளம்!

இன்றைய இளைஞர்கள் பலரும் தங்கள் படம் இயக்கும் திறமையைக் குறும்படங்களின் வாயிலாக நிருபித்துவிட்டுத்தான் திரையுலகுக்குள் நுழைகின்றனர். ஆனால், சிறந்த குறும்படங்களை எடுக்கும் எல்லோராலும் திரையுலகில் நுழைந்துவிடமுடிவதில்லை என்பதுதான் உண்மை.

குறும்படங்களை யூடியூப்பில் அப்லோட் செய்துவிட்டு, அதை எப்படி டிரெண்டாக்குவது என்று தெரியாமல் பல இளைஞர்கள் தங்கள் திரையுலகக் கனவோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே ‘ஷார்ட்ஃபன்ட்லி.காம்’ ( >www.shortfundly.com) என்னும் இணையதளத்தைச் செல்வமும், மஹாராஜனும் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் குறும்படங்கள் எடுப்பவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த இணையதளத்தைக் கடந்த ஆண்டு தொடங்கியிருக்கின்றனர். இப்போது ‘ஷார்ட்ஃபன்ட்லி’ இணையதளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 23,000 குறும்படங்கள் இருக்கின்றன. இந்தத் தளத்தில் தற்போது தமிழில் மட்டுமே பதின்மூன்றாயிரம் குறும்படங்கள் இருக்கின்றன.

“திரைத்துறையில் சாதிப்பதற்குத் திறமை மட்டும் இருந்தால் போதாது. அந்தத் துறையில் நுழைவதற்கு நிறைய தொடர்புகளும், செல்வாக்கும் தேவைப்படுகிறது என்பதை நானும், என் நண்பர்களும் அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம். அப்படி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் குறும்படங்களுக்கான இணையதளம் ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது” என்று சொல்கிறார் செல்வம். சென்னை தனியார் நிறுவனத்தில் வீடியோ விளம்பரப் பிரிவில் பணிபுரியும் இவருக்கு வயது 31.

இப்போது பல தொலைக்காட்சிகள் ‘குறும்படப் போட்டிகள்’ நடத்துகின்றன. ஆனால், அந்தப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளைக்காட்ட பெரும்பாலானவர்களால் முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்கள் குறும்படங்களை ‘ஷார்ட்ஃபன்ட்லி’ தளத்தில் பதிவேற்றலாம். சமூக ஏற்புடைய தலைப்புகளில் தரமான கேமராவில் எடுக்கப்படும் குறும்படங்களை ‘ஷார்ட்ஃபன்ட்லி’ ஏற்றுக்கொள்கிறது. இந்தத் தளத்தில் பதிவேற்றப்படும் குறும்படங்களுக்குப் பார்வையாளர்களிடம் இருந்து கருத்துக்களும் உடனடியாகக் கிடைக்கின்றன. இதுவரை ஏழு லட்சம்பேர் இந்தத் தளத்தில் குறும்படங்களைப் பார்த்திருக்கின்றனர்.

“எந்தவகையில், ஓர் இயக்குநர் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அவர் எளிமையாகத் தெரிந்துகொள்ள எங்கள் இணையதளம் வழிவகுக்கிறது. அத்துடன், ஏதாவது குறும்பட விழாவுக்கு உங்கள் குறும்படத்தை அனுப்ப வேண்டுமென்றால், ‘ஷார்ட்ஃபன்ட்லி’யில் பதிவேற்றப்பட்டிருக்கும் உங்கள் படத்தின் ‘லிங்க்’கை அவர்களுக்கு மெயில் செய்தாலே போதும். இதனால் குறும்பட விழாக்கள் நடத்துவதற்கான செயல்முறையும் எளிமையாகிறது” என்று சொல்கிறார் மஹாராஜன். இவர்தான் இந்தத் தளத்தை வடிவமைத்திருக்கிறார். சென்னை தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இவருக்கு 27 வயது.

இந்தத் தளத்தில் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஆயிரக்கணக்கான குறும்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன், காமெடி, திரில்லர், ஆக்ஷன் என வகைபிரித்துக் குறும்படங்களைப் பதிவேற்றியிருக்கிறார்கள். இதனால் எந்த வகையான படங்களைப் பார்க்க வேண்டுமோ அவற்றை எளிமையாகப் பார்க்கமுடிகிறது.

குறும்படங்களுக்கான சந்தை மதிப்பும் இப்போது வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் இதைச் சாத்தியப்படுத்தி இருக்கின்றன என்று சொல்லும் செல்வம், “மொபைலில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைவிட குறும்படங்களைப் பார்ப்பது சுலபம். அதிகரித்திருக்கும் யூடியூப் ஆப்ஸ் பயன்பாடு இதையே உறுதிசெய்கிறது. அதனால், விரைவில் ஷார்ட்ஃபன்ட்லியின் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் ஆப்ஸை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார்.

அடுத்தகட்டமாக, ஷார்ட்ஃபன்ட்லியின் மூலம் திரைத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளைத் தெரிவிக்கும் ஒரு பிரத்யேகமான ‘ஜாப் போர்ட்டலை’ உருவாக்க இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். “இந்தப் போர்டல் திரைத்துறையில் பணியாற்ற விரும்புபவர்களுக்கான ஓர் ஆன்லைன் அடையாளமாகச் செயல்படும். அதோடு, சிறந்த குறும்படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு ‘கிரவுட் ஃபன்டிங் மூலம் திரைப்படம் எடுக்க உதவத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று சொல்கிறார் மஹாராஜன்.

மேலும் விவரங்களுக்கு: >http://www.shortfundly.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x