Published : 23 Oct 2015 12:07 PM
Last Updated : 23 Oct 2015 12:07 PM

‘ரஜினிக்கு கமல் சொன்ன அட்வைஸ்!

“அந்த வீடியோவைப் பார்த்துட்டு, கமல் சார் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதுல, 'ஞானம்கிறது கலை மாதிரி. தொடர்ந்து பயிற்சி பண்ணிக்கிட்டேயிருந்தாதான் அது நம்மகிட்ட இருக்கும்!'னு இருந்துச்சு. இப்போ என் ஃபேஸ்புக் ஹெட்லைன் மட்டுமில்ல... என்னை வழிநடத்தும் தத்துவமும் அதுதான்!"

அவர் வரையும் ஓவியங்களைப் போலவே மிக நேர்த்தியாகத் தனது பேச்சைத் தொடங்குகிறார் ரஜினி பாபு.

அடிப்படையில் ஓவியர். இப்போது பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ‘கார்ப்பரேட் வீடியோ'க்கள் உருவாக்கித் தரும் கலைஞர். நடிகர் கமல்ஹாசனைப் பற்றி இவர் தனது ஓவியங்களைக் கொண்டே உருவாக்கிய 2 நிமிட வீடியோதான் இவருக்கான முதல் வெளிச்சம். (வீடியோவைக் காண: >https://www.youtube.com/watch?v=GR1q7HhlQXE)

அந்த வீடியோவுக்காக ரஜினி பாபுவுக்குக் கிடைத்த பாராட்டுதான் கட்டுரையின் ஆரம்பத்தில்..!

இனி ரஜினி பாபு...

"நான் அக்மார்க் சென்னைப் பையன்! லயோலா காலேஜ்ல விஸ்காம் படிச்சேன். அங்க சில அடிப்படைகளைக் கத்துக்கிட்டு விளம்பரப் படங்கள் பண்றது, எஃப்.எம்.மில் சில காலம் வேலை, அப்புறம் டி.வி.சேனல்கள்ல என் திறமைகளை மெருகேற்றுதல்னு காலம் போயிக்கிட்டிருந்தப்ப ‘போதும் இனி நாமளே சொந்தமா ஏதாவது பண்ணலாமேன்னு' யோசிச்சு என்னுடைய ப்ரொடக்ஷன் கம்பெனியை ஆரம்பிச்சேன்.

என்னுடைய பெயர் ரஜினி பாபுங்கிறதால ‘ர' ப்ரொடக்ஷன்ஸ்'னு தமிழ்லயே என்னுடைய கம்பெனிக்குப் பெயர் வெச்சேன். 5 வருஷம் ஆச்சு. சுமார் 50 கார்ப்பரேட் வீடியோக்களுக்கு மேல் செஞ்சு முடிச்சுட்டோம்.

இப்ப மட்டுமில்ல... ஸ்கூல் படிக்கும்போதே ‘பெரியாளானா நீ என்னவா வருவேன்னு' யாராவது கேட்டா, நான் ‘ஃபிலிம் மேக்கரா ஆவேன்'னுதான் சொல்வேன். ஒரு நல்ல ஃபிலிம் மேக்கரா வரணும்கிறதுக்கான ஒரு பயணத்துலதான் இப்ப நான் இருக்கேன். இப்ப நான் செய்கிற வேலை எல்லாம் அந்த லட்சியத்துக்காக என்னைத் தயார்ப்படுத்திக்கிறதுக்கான பயிற்சிகளாகத்தான் நினைக்கிறேன்.

ஒரு ஃபிலிம் மேக்கரா வரணும்னு ஆசைப்படுறவனுக்கு கமல் சாரைப் பிடிக்காமப் போகுமா? அவர் மேல இருந்த ஒரு ஆர்வத்துலதான் எனது ஓவியங்களை வெச்சு அவரைப் பத்தி ஒரு வீடியோ உருவாக்கினேன்.

இந்த வகையான ஓவிய முயற்சிகளை ‘ரேபிட் ஸ்கெட்ச்'னு (Rapid Sketch) சொல்வாங்க. அதாவது, பின்னணியில ஒருவருடைய குரல் ஒலிச்சிக்கிட்டிருக்கும்போது, அவரது கருத்துகளுக்கு ஏற்ப ஸ்கெட்ச் பண்றதுதான் இதில் ஸ்பெஷல்!

இந்த ஓவிய வீடியோவை நான் 2011-ம் ஆண்டு உருவாக்கினேன். அப்ப வரைக்கும் எனக்குத் தெரிஞ்ச வரை, இந்தியாவுல வேறு யாரும் பண்ணலைன்னு நினைக்கிறேன். ஆனா இப்ப பலரும் இந்த வகையான ஆர்ட் ஃபார்மைப் பயன்படுத்தி நிறைய வீடியோக்கள் உருவாக்குறாங்க.

பலர் கார்ட்டூன் ஓவியங்களைப் பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவாங்க. அதுல பெரிய தப்பு இருந்தாலும் அது பெரிசா தெரியாது. ஆனா, ரியலிஸமான ஓவியங்களை வரையும்போது சின்ன தப்பு இருந்தாலும் அது பெரிசா தெரியும். அதுமட்டும்தான் இந்த வகை ஆர்ட்ல இருக்கிற பெரிய சேலஞ்ச்!

நிறுவனங்கள் வந்து என்கிட்ட கேட்டு, அவங்களுக்காக நான் செஞ்சு கொடுக்கிறது ‘கார்ப்பரேட் வீடியோ'க்கள். அது பிழைப்புக்கானது. ஆனா இதுமாதிரியான ரேபிட் ஸ்கெட்ச் வீடியோக்கள், நான் ரொம்பவும் மதிக்கிற மனிதர்களை மனசுல வெச்சு நேரம் கிடைக்கும்போது நானா பண்றது. அதனால எனக்கு இந்த வீடியோக்கள் மனசுக்கு நெருக்கமானது.

அப்படி நான் மதிக்கிற இன்னொரு மனிதர் நம்மாழ்வார் ஐயா. அவர் உயிருடன் இருந்த காலம் வரை அவரைச் சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைக்கவே இல்லை. ஆனா அவர் பேச்சுக்களை பல வீடியோக்கள் மூலமா கேட்டிருக்கேன்.

எனக்குக் கொஞ்சம் நிலம் இருந்திருந்தா நானும் விவசாயி ஆகியிருப்பேன். ஆனா அதுகான வசதியோ, நேரமோ இப்ப என்கிட்ட இல்ல. அதுக்காக அவர் சொன்ன விஷயங்களை நாம விட்டுட்டுப் போயிட முடியாது இல்லையா? அதனால, என்னால முடிஞ்ச விஷயத்தையாவது நான் செய்யணும்னு நினைச்சேன்.

அப்படித்தான், ஐயா சொன்ன விஷயங்களை வெச்சு ஒரு ரேபிட் ஸ்கெட்ச் வீடியோ பண்ணேன். (வீடியோவைக் காண: >https://www.youtube.com/watch?v=YR5HObrWA3s) அதைப் பார்த்துட்டு 'ரொம்ப பிரமாதமா இருக்குன்னு' ஐயா சொன்னதா என் ஃபேஸ்புக்ல அவரோட மாணவர்கள் பலர் சொல்லியிருந்தாங்க. இந்த மாதிரி பாராட்டுக்கள்தான் எனக்கான உந்துசக்தி.

யாரைப் பற்றி வீடியோ உருவாக்கணும்னு நினைக்கிறேனோ, முதல்ல அவங்களைப் பற்றின சில சுவாரஸ்யமான தகவல்களைச் சேகரிச்சுப்பேன். அப்புறம், அவங்க வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை ஓவியமாக வரைஞ்சுப்பேன். நான் ஓவியம் வரைவதை வீடியோவா பதிவு செஞ்சுடுவேன். அப்புறம் அதை கம்ப்யூட்டர்ல அப்லோட் பண்ணி, பேக்ரவுண்ட் வாய்ஸ் சேர்த்து, எடிட்டிங் பண்ணுவேன்.

என்னுடைய பல ‘கார்ப்பரேட் வீடியோக்கள்', ‘ரேபிட் ஸ்கெட்' வீடியோக்களை எல்லாம் பார்த்த சிலர் ‘நீங்க ஏன் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலை?'ன்னு கேட்கிறாங்க. நாம பண்ற ஒரு விஷயத்தை மக்கள் ரசிச்சுப் பார்த்து சந்தோஷமாகுறாங்கன்னா, அதை விட வேற என்ன விருது வேணும் சொல்லுங்க..?

நான் காலேஜ் படிச்சப்ப ‘விஸ்காம்'ங்கிற துறை ரொம்பவும் புதுசா இருந்துச்சு. ‘டேய் இதப் படிச்சா வேலை கிடைக்குமா?'ன்னு எல்லாம் கேட்காம வீட்ல என்னைப் படிக்க விட்டாங்க. அந்த சுதந்திரம்தான் என்னை இப்போ இந்த இன்டர்வியூ கொடுக்குற அளவுக்கு வளர்த்திருக்கு. ஒவ்வொரு இளைஞருக்கும் அந்த சுதந்திரம் கிடைக்கணும்.

வேறு என்ன சொல்ல... கமல் சார் எனக்கு சொன்னதுதான் உங்களுக்கும்... ‘ஞானம்கிறது கலை மாதிரி...!" சொல்லிவிட்டு அடுத்த வீடியோவுக்கு ஸ்கெட்ச் பண்ணத் தொடங்கினார் ரஜினி பாபு.

இவரின் இதர வீடியோக்களைக் காண இங்கே சொடுக்கவும்: >https://www.youtube.com/user/Rajinibabu

படங்கள்: ந. வினோத் குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x