Published : 16 Oct 2015 01:29 PM
Last Updated : 16 Oct 2015 01:29 PM
மவுண்ட்ரோடும் வாலாஜா சாலையும் சந்திக்கும் இடத்திலிருக்கும் கர்ஸன் அறைகலன்கள் விற்கும் கடை, அந்தக் கால மெட்ராஸின் முக்கியமான ஒரு லேண்ட்மார்க். இன்றைக்கும் இரண்டு தளங்களுடன் பழமையின் பெருமையை கம்பீரமாகப் பேசிக்கொண்டிருக்கிறது.
பழமை பேசும் லிஃப்ட்
உயர் ரக தேக்கு, ரோஸ்வுட் கட்டில், பீரோக்கள், வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து விற்கும் மரச் சாமான்கள் கடைதான் கர்ஸன்.
1898-ல் சிம்மட்டோ ஆளவந்தார் செட்டி இந்தக் கடையைத் திறந்தார். அப்போது இந்திய வைஸ்ராயாக இருந்த லார்டு ஜார்ஜ் நத்தேனியல் கர்சன் மெட்ராஸுக்கு வந்திருந்தார். அவரை கவுரவப்படுத்தும் விதத்தில் தன் கடைக்கு கர்சன்ஸ் என்று பெயரிட்டார் ஆளவந்தார். அப்போது மெட்ராஸ் மாகாணத்திலேயே இரண்டாவதாக அமைக்கப்பட்ட லிஃப்ட், இன்றைக்கும் இந்தக் கட்டிடத்தில் உள்ளது.
போர்க் காலங்களில் போருக்குத் தேவையான தளவாடங்களைக் கொண்டு செல்வதற்காக மிகப் பெரிய மரப்பெட்டிகளையும் இங்கே தயாரித்திருக்கிறார்கள். திருமணமான பெண்ணுக்குத் தரும் சீர்வரிசையில் கர்ஸன் தயாரிப்புகள் இருப்பதை மிகவும் கவுரவமாக நினைத்திருக்கிறார்கள்.
`கர்ஸன்’ செட்டியார்
ஆளவந்தாரின் மகன் சேஷாசலம்தான் கடையையும் தொழிலையும் விரிவுபடுத்தினார். நூலக அறிவியலின் தந்தை என்று புகழப்படும் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதனுடன் இணைந்து சென்னைப் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, பச்சையப்பா கல்லூரி ஆகியவற்றில் கர்ஸன் பெயர் பொறிக்கப்பட்ட மேசை, நாற்காலிகள், மர அலமாரிகளை இடம்பெறச் செய்தார்.
ஆளுநர் மாளிகையிலும் கர்ஸனின் தயாரிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆந்திர மாநிலத்தின் முதல் தலைநகரமான கர்னூலில் இருக்கும் பல அரசு அலுவலகங்களிலும் கர்ஸனில் தயாரான மரச் சாமான்களே இடம்பெற்றிருந்தன.
“கர்னாடக இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளை கர்ஸனின் மரத் தயாரிப்புகள் இன்றைக்கும் அலங்கரிக்கின்றன. 1931-ல் கிண்டியில் முதன்முதலாக மர மில்லை ஆரம்பித்த பெருமை சேஷாசலத்தையே சேரும். இதில் இயந்திரங்களைப் பயன்படுத்தி மரங்களை வெட்டுவதற்கும் இழைப்பதற்கும் ஏற்ற வழிகளைத் தொடங்கினார். மரத்தினாலான வீட்டு உபயோகப் பொருள்களை நேர்த்தியாக உருவாவதற்குக் காரணமான இவரை `கர்ஸன் செட்டியார்’ என்றே பலரும் அழைத்தனர்” என்றார் நான்காவது தலைமுறையாக இந்தக் கடையை நிர்வகித்துவரும் பி. கவுதம். இவர் சேஷாசலத்தின் பேரன்.
மாறிவரும் உலகம்; மாறாத ரசனை
“திறமை வாய்ந்த கலைஞர்கள் பற்றாக்குறை, எந்திரமயமாகிவிட்ட தொழில், வெளிநாட்டு இறக்குமதி போன்ற பலவற்றையும் எதிர்கொண்டுதான் இந்தத் தொழிலில் நீடித்துவருகிறோம். தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத, பொறுமையும், உயர்ந்த ரசனையும் கொண்டவர்களின் தேர்வாக இன்றைக்கும் எங்களுடைய தயாரிப்புகள் உள்ளன. இதைத் தக்கவைத்துக் கொள்வதே எங்களுடைய நோக்கம்” என்கிறார் கவுதம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT