Published : 09 Oct 2015 11:07 AM
Last Updated : 09 Oct 2015 11:07 AM

கனவுகளைப் பின்தொடரும் பிம்பங்கள்

நான் 30 வயது இளைஞன். நான் ஒரு பெண்ணைக் கடந்த 8 வருடங்களாகக் காதலித்துவருகிறேன். அந்தப் பெண்ணும் என்னைக் காதலிக்கிறார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. எங்கள் இருவரின் குடும்பங்களிலும் அவ்வளவாகப் பிரச்சினை ஏதும் வராது என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே 8 வயது வித்தியாசம் உள்ளது. இதனால் எங்கள் மண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்று அஞ்சுகிறேன். தயவுசெய்து எனக்கு ஒரு நல்ல ஆலோசனை கூறுங்கள்.

இக்காலத்தில் எட்டு வருடங்களாக ஒரே பெண்ணைக் காதலித்துவருவதும், இருவரிடையே ஆரோக்கியமான உறவு தொடர்வதும் அரிது. அதனினும் அரிது பெற்றோர் தரப்பிலிருந்து அனுமதி கிடைப்பது! உங்கள் காட்டில் மழைதான்!

ஆனால் உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். நமது கலாச்சாரத்தில் ஆணைவிடப் பெண் வயதில் சிறியவளாக இருக்க வேண்டும் என்று ஏன் சொன்னார்கள்? பெண்ணைவிட ஆணுக்கு மன முதிர்ச்சி அடைய சில வருடங்கள் ஆவதால் ஆண் பெரியவராகவும், பெண் மாதவிடாய், குழந்தைப் பேறு காரணமாக விரைவில் வயதானவளாகத் தோற்றமடைவதால் பெண் சிறியவளகவும் இருப்பது நல்லது என்பதால்தான்.

இப்போதெல்லாம் திருமண வயது ஏறிவிட்டதால் ஆண்கள் மனமுதிர்ச்சி அடைந்த பின்தான் மணம் செய்துகொள்கிறார்கள். பெண்ணும் தன்னை இளமையாக வைத்துக்கொள்ள நன்கு கற்றுக்கொண்டுவிட்டாள்! வயது வித்தியாசம் பற்றிய சில ஆய்வுகளின்படி நான்கு முதல் எட்டு வரை வயது வித்தியாசம் ஆரோக்கியமானதுதான்.

கணவன் மனைவி உறவில் வெவ்வேறு ‘மாடல்'களைப் (Models) பற்றி உளவியல் நிபுணர் ஒருவர் விளக்கி இருக்கிறார். வயது வித்தியாசம் நிறைய இருக்கும் தம்பதியை ‘டாடி-டால்' (Daddy-doll) எனும் ‘மாடலி’ல் அடக்கியுள்ளார். இந்த ‘மாடலி’ல், அப்பாவும் செல்ல மகளும் மாதிரி உறவு இருக்குமாம். மிகவும் அன்பாக, செல்லமாகக் கணவர் நடத்துவதோடு, பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வாராம்.

நண்பரே, இந்தக் கணிப்பு உங்களுக்கு ஏற்றதாக இல்லை என்றால், இதை முன்னிட்டு உங்களிடையே சண்டை வர வேண்டாம்! இந்தக் கால கட்டத்தில், வயது வித்தியாசத்தில் பலவிதமான சேர்மானம் (Combinations) இருப்பதையும், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதையும் பார்க்கிறோம். சந்தோஷமான மணவாழ்க்கை உங்கள் கையில்தான் இருக்கிறது என்று நம்பி ஆரம்பியுங்கள்.

நான் 20 வயதுப் பெண். பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு பலவீனம் உண்டு. ரத்தக் காயங்களைப் பார்த்தாலே எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும். சென்ற ஆண்டு என் கல்லூரியில் படிக்கும் இரண்டு தோழிகள் விபத்தில் பலியானார்கள்.

நான் அவர்களைப் பார்ப்பதற்குப் பிண அறைக்குச் சென்றேன். அவர்களைப் பார்த்துவிட்டு வந்த நாள் முதல் தினமும் இரவு உறங்கச் செல்லும்போது அவர்களைப் பார்க்கச் சென்ற ஞாபகம் வருகிறது. இதனால் இரவில் நன்றாக உறங்க முடியவில்லை. உறங்கும்போதும் அதிகப்படியான கனவுகள் வருகின்றன. இதனால் உடம்பில் அதிகப்படியான சோர்வு ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபடுவது எப்படி என்று வழி கூறுங்கள்.

பலவீனத்தை நீங்கள் அறிந்திருந்தும், இறந்த தோழிகளைக் கடைசியாக ஒருமுறை பார்க்கும் ஆசையில் பிணக் கிடங்கிற்கே போய்விட்டீர்கள். விபத்தினால் இறந்த அவர்கள் இருவரது தோற்றம் உங்கள் ரத்தத்தை உறைய வைத்திருக்கலாம். அந்தக் காட்சி மீண்டும் மீண்டும் உங்கள் மனதில் தோன்றி அதிர்ச்சி அலைகளைக் கொடுக்கின்றன.

சம்பவம் நடந்த சில காலம்வரை இந்த மாதிரி ஒரு எதிர்விளைவு இயல்பானதுதான். ஆனால் ஒரு வருடம் வரை நீடிக்கக் கூடாது. இதனால் பல பக்கவிளைவுகள் உடல், மனரீதியாக இருக்கலாம். உங்களை சுற்றியடிக்கும் அந்தக் காட்சியின் விரிவாக்கமாகத்தான் வேண்டாத கனவுகள்.

இரவில் உறங்கப்போகும் முன் உங்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான சம்பவக் காட்சியைத் தெளிவாக மனதில் கொண்டுவந்து ரசியுங்கள். பின் ஒரு இசைக்கருவியின் இனிமையான மெல்லிசையைக் கேட்டுக்கொண்டே உறங்குங்கள்.

நமது வாழ்வில் எல்லாச் சம்பவங்களும் பிம்ப வடிவில் மனதில் பதிந்திருக்கும். எந்தச் சம்பவத்தை அடிக்கடி நினைக்கிறோமோ அதன் பிம்பம் மனதில் அடிக்கடி தோன்றும். இனிய சம்பவங்களையே நினையுங்கள். உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரிடம் மனதில் தோன்றும் பயம், கவலை, பதற்றம் எல்லாவற்றையும் சொல்லுங்கள். மனம் லேசாகும். அது முடியாதென்றால் எழுத்தில் வடித்துவிடுங்கள். அதுவும் சாத்தியமில்லை என்றால் ஏதாவது படம் வரையுங்கள்.

எதுவுமே உதவவில்லை என்றால், தினமும் பகல் நேரத்தில் 5 நிமிடம் ஒதுக்குங்கள் ‘அந்தக் காட்சியை' நினைப்பதற்கு! ‘5 நிமிடம் ஆயாச்சு; எழுந்திரு!' என்று சொல்லிக்கொண்டே எழுந்திருங்கள். உங்களை விட்டு அந்த விஷயம் ஓடிவிடும்.

மேலே கூறியவை பலன் அளிக்கவில்லையென்றால், ஒரு உளவியல் ஆலோசகர்/ மருத்துவரைப் பார்ப்பது நல்லது. ஏனெனில் மேலும் சில தகவல்கள் கிடைத்தால்தான் தீர்வைச் சரியாகக் கொடுக்க முடியும்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x