Last Updated : 09 Oct, 2015 10:40 AM

 

Published : 09 Oct 2015 10:40 AM
Last Updated : 09 Oct 2015 10:40 AM

காலத்தை வென்றவை: காலங்களைக் கடந்து ஒளிரும் நம்பிக்கை

நல்ல வெயிலில் போய் அமர்ந்தாலும் நம்மை குளுகுளுப்பாக்கும் மெட்ராஸ் கூரை. ரோஸ்வுட் மரத்தினாலான அலமாரிகள். உயரமான கூரையுடனும் குளிர்ச்சியான தரையுடனும், சென்னை அண்ணாசாலை சந்திப்பில், 800 சதுரஅடி பரப்பில் விரிந்துள்ளது ஜெ.எப். லெட்டாயில் மருந்துக் கடை. 1928-ல் தொடங்கப்பட்ட சென்னையின் இரண்டாவது அலோபதி மருந்துக் கடை, அன்றைக்கு மவுண்ட்ரோடில் இருந்த ஒரே மருந்துக் கடை என்னும் பெருமைக்கு உரியது இது.

கை மாறிய கடை

“என்னுடைய தந்தை கேவல்சந்த் துகார் இந்தக் கடையை 1954-ல் வாங்கி, அதேபேரில் தொடர்ந்து நடத்திவந்தார். அந்தக் காலத்தில் மருத்துவ பொருட்களின் மொத்த விற்பனையும் இங்கே நடந்திருக்கிறது” என்கிறார் தற்போது கடையின் உரிமையாளரான அஜித்குமார்.

வழக்கொழிந்த மிக்ஸர்

1960-70-களில் எல்லாம் மருத்துவமனைகளில் காய்ச்சல், இருமலுக்கு என்று தனித்தனியே பெரிய கண்ணாடி ஜாடிகளில் மருந்துகள் இருக்கும். இதை மிக்ஸர் என்பார்கள். இதைத் தயாரிக்கும் கெமிஸ்ட்கள் எல்லாம் அன்றைக்கு இந்தக் கடையில் பணியில் இருந்திருக்கிறார்கள்.

இங்கே தயாரான மிக்ஸர் திரவ மருந்துக்கு அன்றைக்கு பெரிய வரவேற்பு இருந்திருக்கிறது. “1975-க்குப் பிறகு இத்தகைய மிக்ஸர் மருந்துகள் எல்லாம் வழக்கொழிந்துபோயின” என்று குறிப்பிடுகிறார் அஜித்குமார்.

நீடிக்கும் நற்பெயர்

இரண்டு, மூன்று தலைமுறையாக இந்த கடையில் மருந்து வாங்குபவர்கள் இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு தேவையான மருந்துகளை கூடுமானவரை வாங்கித் தருவதை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம். இந்தக் கடையைச் சுற்றி குடியிருப்புப் பகுதிகள் இல்லாவிட்டாலும், இன்றைக்கும் சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் (அவர்களின் வீட்டுக்கு அருகில் மருந்துக் கடைகள் இருந்தாலும்) எங்களுடைய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து, இங்கே வந்து மருந்து வாங்கிச் செல்கின்றனர்.

ஒளிரும் நம்பிக்கை

இன்றைய சூழலில் மருந்து கடையை நடத்துவதற்கு அதிக உழைப்பைச் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு லாபகரமான தொழிலாக இல்லை. வாடிக்கையாளர்களுக்கு விலையில் கழிவு அளிப்பதில் தொடங்கி இணைய விற்பனை போன்ற பல சிக்கல்கள் இன்றைக்கு இருக்கின்றன. ஆனாலும் சம்பாதித்த நற்பெயரை இத்தொழிலில் காப்பாற்றிக் கொள்ள இந்த தொழிலை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

பல நிறுவனங்களின் மருந்துகளை வாங்கிவைத்து, விற்காமல் போகும் போது நஷ்டம் ஏற்படுகிறது. லெட்டாயில் என்கிற பிரெஞ்சுப் பெயருக்கு நட்சத்திரம் என்று பெயர். அதனால்தான், அதன் ஒளியை மங்காமல் பார்த்துக் கொண்டுவருகிறோம் என்கிறார் அஜித்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x