Published : 30 Oct 2015 09:59 AM
Last Updated : 30 Oct 2015 09:59 AM
‘இன்ஃபோசிஸ்' நாராயண மூர்த்தி! இன்றைய 'டெக்கி'கள் பலருக்கும் ரோல்மாடல் ஐகான்!
அவர் ஒருமுறை சிறை வாசம் அனுபவித்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...? அவர் வாழ்க்கையில் இருந்து...
பிரசன்னா என்ற பொதுவான நண்பர் மூலம் நாராயண மூர்த்தியும் சுதாவும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு...
மூர்த்தி “சுதா, நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.”
“சொல்லுங்க மூர்த்தி ” சுதா.
“நான் 5 அடி 4 அங்குல உயரம். நான் லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலில இருந்து வந்துருக்கேன். என் வாழ்க்கையில நான் எப்பவும் பணக்காரனாக முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதனால உனக்கும் என்னால நீ எதிர்பார்க்குற வசதிகளை செஞ்சு தர முடியாது.
நீ ரொம்ப அழகா இருக்க. இன்டெலிஜென்ட் ஆகவும் இருக்க. நீ நினைச்சா உன்னால யார வேணா கல்யாணம் பண்ணிக்க முடியும். ஆனா, இப்ப உன்கிட்ட கேட்கிறேன்... என்னை கல்யாணம் பண்ணிப்பியா? ”
“எனக்கு கொஞ்சம் டைம் கொடு மூர்த்தி.”
சில நாட்கள் கழித்து சுதாவின் வீட்டில்...
ஆர்.ஹெச்.குல்கர்னி (சுதாவின் தந்தை): “உன் வாழ்க்கையில நீ என்னவாகணும்னு நீ ஆசைப்படுற? ”
“நான் கம்யூனிஸ்ட் கட்சியில சேர்ந்து அரசியல்வாதியா வரணும். ஒரு அநாதை இல்லம் திறக்கணும்" மூர்த்தி.
“இத்தனைக்குப் பிறகும் நான் மூர்த்தியை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன். ஏன்னா அவர் ஒரு நேர்மையான மனிதர். அவர்கிட்ட இருந்த நெகட்டிவ் விஷயங்களை ரொம்பத் தெளிவா சொல்லிட்டார்.
‘உங்க சம்மதம் இல்லாம நான் மூர்த்தியைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்'னு எங்க அப்பாகிட்ட சொல்லிட்டேன். அதேசமயம் மூர்த்தியைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க நினைக்கலை. ஆனா, ‘மூர்த்தி ஒரு நல்ல வேலையை தேர்ந்தெடுத்துக்கிட்டார்னா, அவரை உனக்குக் கல்யாணம் பண்ணித் தரேன்'னு எங்க அப்பா சொன்னார்.
ஆனா, மூர்த்தி ஒப்புக்கலை. ‘வேற யாரும் செய்யாத விஷயத்தைத் தான் செய்யணும்கிற குறிக்கோள்ல மூர்த்தி உறுதியா இருந்தார்” சுதா.
சில மாதங்களுக்குப் பிறகு மூர்த்தி செர்பியா நாட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அங்கே நிஸ் என்கிற ரயில் நிலையத்திலிருந்து தான் தங்கியிருக்கும் இடத்துக்குச் செல்ல ரயிலில் பயணிக்கிறார்.
எதிரே ஒரு பிரெஞ்சுப் பெண். தனது தோழனுடன் வந்திருந்தாள். மூர்த்தியும் அந்தப் பெண்ணும் பிரெஞ்சில் பேச ஆரம்பிக்கிறார்கள். பேச்சு கம்யூனிஸக் கொள்கைகளின் பலவீனம் குறித்துத் திரும்புகிறது. சிறிது நேரத்தில் அங்கு காவலர்கள் வருகிறார்கள். அந்தப் பெண்ணும், அவளது தோழனும் தப்பித்து விட மூர்த்தியைக் கைது செய்கிறார்கள்.
பிறகுதான் தெரிந்தது. அந்த நாட்டில் கம்யூனிஸக் கொள்கைகளையும், ஆட்சியையும் விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று. அந்தப் பெண்ணுடன் வந்த தோழன் தான் காவலர்களை ‘அலர்ட்' செய்திருக்கிறான் என்பதும் தெரிய வருகிறது.
மூன்று நாட்களுக்கு மேல் மூர்த்தி சிறை வைக்கப்பட்டிருந்தார். திரும்ப இந்தியாவைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையே அவருக்கு இல்லை.
“நீ இந்தியா என்கிற நட்பு நாட்டிலிருந்து வந்திருப்பதால், உன்னை விடுதலை செய்கிறோம்!” என்று பின்னர் மூர்த்தி விடுவிக்கப்படுகிறார்.
இந்தியா வந்த சில வாரங்களுக்குள் சுதாவை கைப்பிடிக்கிறார். சில காலம் கழித்து ‘இன்ஃபோசிஸ்' நிறுவனத்தைத் தொடங்குகிறார்.
இப்படி பலரும் அறிந்த பிரபலங்களின் பலரும் அறியாத பெர்சனல் பக்கங்களைச் சேர்த்து அவர்களின் ‘புரொஃபெஷனல்' வாழ்க்கையின் வெற்றிச் சூத்திரத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது ‘லிவிங் லெஜெண்ட்ஸ், லேர்னிங் லெசன்ஸ்' புத்தகம்.
சென்னையில் உள்ள 'கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்' நிறுவனர் பாலா வி.பாலச்சந்திரன் மற்றும் கவிபிரியா ஆகியோர் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள்.
இந்திய வணிக மேலாண்மை கல்விப் பரப்பில் வெகு பரிச்சயமான முகம் பாலா பாலச்சந்திரன். அதனால் ‘சந்தையியலின் தந்தை' பிலிப் கோட்லர், ரத்தன் டாடா, ‘இன்ஃபோசிஸ்' நாராயண மூர்த்தி, உலகளவில் மேலாண்மைக் கல்விக்குப் புகழ்பெற்ற ‘கெல்லாக்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டொனால்ட் ஜேகப்ஸ், பிரதமரின் முன்னாள் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் போன்றோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அப்போது அவர்களிடமிருந்து தான் கற்ற பாடங்களை மிக அருமையாக ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்கிறார். இந்த நூலில் இன்றைய நாளில் வணிக மேலாண்மையில் கொடிகட்டிப் பறக்கும் 10 பேர் குறித்த வாழ்க்கைப் பதிவு உள்ளது.
மேலாண்மை கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, வணிகத்தில் ஆர்வமுள்ள எவரும் படிப்பதற்கு ஏற்ற நூல் இது! இந்த நூலை சென்னை வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT