Published : 10 May 2014 06:44 PM
Last Updated : 10 May 2014 06:44 PM
“பாப்பாவுக்கு ஒரு ஜிகர்தண்டா போடு” இது காதல் படத்தில் தண்டபாணி பேசும் வசனம். அதுவரை ஜிகர்தண்டா, மதுரையைத் தாண்டி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜிகர்தண்டா தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவியது எனச் சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன ஊர்களிலும் திருநெல்வேலி அல்வா மாதிரி ‘மதுரை ஜிகர்தண்டா’ எனக் கடை போடத் தொடங்கினர். இன்றைக்குச் சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் கிடைக்கும் ஜிகர்தண்டாவின் சுவைக்குப் பலரும் அடிமையாகி விட்டனர்.
பேரிலேயே குளுமையை வைத்திருக்கும் ஜிகர்தண்டா மதுரை யில் குடியேறியது சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் தான். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு 14-ம் நூற்றாண்டில் மதுரையைச் சுல்தான்கள் சில காலம் ஆண்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் ஜிகர்தண்டா மதுரைக்கு வந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
இதில் உள்ள ஜிகர் என்ற சொல்லுக்குத் தைரியம் எனப் பொருள். தண்டா என்னும் சொல்லுக்கு படகுக்குத் துடுப்புப் போடுபவன் என்னும் பொருள். அதாவது ஒரு படகை, கப்பலைச் செலுத்திச் செல்லும் ஆற்றல் படைத்தவன் எனப் பொருள். இவை இரண்டும் அராபியச் சொற்கள்தாம். இந்த அடிப்படையில் இதன் அராபியத் தொடர்பை நிரூபிக்கிறார் வரலாற்றாசிரியர் ஆர். வெங்கட்ராமன். அதுபோல மதுரையில் பிரசித்திபெற்ற ஜிகர்தண்டா கடைகள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களே.
இதுவும் வெங்கட்ராமனின் கூற்றுக்கு வலுச்சேர்க்கிறது. ஆனால் இதற்கு மாற்றான கருத்துகளும் இங்கு நிலவுகிறது. தண்டா என்றால் இந்தியில் குளிர் என அர்த்தம். அதிலிருந்தும் இப்பெயர் வந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஜிகர்தண்டாவின் சொந்த ஊர், ஜாதகம் பார்த்துக்கொண்டிருப்பது ஆய்வாளர்களின் வேலை என்றால் அதை விட்டுவிடுவோம். எந்த ஊராக இருந்தால் என்ன, வந்தோரை வாழவைக்கும் நாடு அல்லவா? ஜிகர்தண்டா இன்று மதுரையின் பெருமைக்குரிய ஓர் அடையாளமாக மாறியிருக்கிறது. பணக்காரர்களில் இருந்து, ஏழைகள் எல்லோருக்கும் பிடித்தமான பானமாக ஆகியிருக்கிறது ஜிகர்தண்டா.
காலத்திற்கு ஏற்ப ஜிகர்தண்டா தயாரிப்பு முறையிலும் பல மாற்றங்கள் வந்திருக்கின்றன. பாரம்பரிய முறையுடன் இப்போது சுவைக்காகச் சில பொருட்களும் சேர்க்கிறார்கள். சிலர் பாசந்தி போன்ற இனிப்புப் பொருட்களைச் சேர்க்கிறார்கள். சிலர் பால்கோவாவைச் சேர்க்கிறார்கள்.
முதலில் பாதாம் பிசினை சுத்தமாகக் கழுவி, சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு பாலை நன்றாகக் காய்ச்ச வேண்டும். அதனுடன் வேண்டிய அளவு சர்க்கரையைச் சேர்ந்துக் குளிரவிட வேண்டும். ஜவ்வரிசியைப் பாலில் வேகவைத்து ஆறவைக்க வேண்டும்.
ஒரு குவளையில் குளிர்ந்த பாதாம் பிசினை சிறிதளவு இட்டு, ஜவ்வரிசியையும், பாலையும், நன்னாரியையும் கலந்து கூடவே ஜஸ் கீரீமையும் சேர்த்தால் குளிர்ச்சியான ஜிகர்தண்டா தயார். பாதாம் பிசினுக்குப் பதிலாகக் கடற்பாசியையும் பயன்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment