Published : 13 Oct 2020 09:44 AM
Last Updated : 13 Oct 2020 09:44 AM
சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் பேட் உள்ளிட்ட விளையாட்டுக்கருவிகளின் தரம் உள்ளூர் வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. சர்வதேச வீரர்களின் விருப்பப்படி கிரிக்கெட் உபகரணங்களைப் பெறக்கூடிய வசதியும் உள்ளூர் வீரர்களுக்கு இல்லை. இந்த ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேர நிறைவேற்றிவருகிறார் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் அனுபம் சுனில்.
பொதுவாக கிரிக்கெட் பேட்டுகள் இங்கிலீஷ் வில்லோ மரம் மூலம் தயாரிக்கப்படும். இந்த மரத்தின் தரத்தைப் பொறுத்து ஐந்து வகையான கிரிக்கெட் பேட்டுகள் சந்தையில் தயாரிக்கப்படுகின்றன. இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் தரம், உள்ளூர் வீரர்களுக்கு எளிதாகக் கிடைத்துவிடாது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள், முதல்தர பேட்டுகளை அள்ளிக்கொண்டு சென்றுவிடும். உள்ளூர் வீரர்களுக்குத் தரமான பேட்டுகள் சொற்ப அளவிலேயே கிடைப்பது வழக்கம்.
உள்ளூரிலேயே தரம்
திருச்சியைச் சேர்ந்த அனுபம் சுனில், கிரிக்கெட் பேட் கிடைப்பதில் நிலவும் ஏற்றத்தாழ்வைப் போக்க நினைத்தார். அதன் எதிரொலியாக அவரே சர்வதேச தரத்திலான பேட்டுகளை தயாரித்துத்தரும் பணியைச் செய்துவருகிறார்.
“சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விருப்பத்தைப் பொறுத்து ஒருவருடைய உயரம், எடை, கைப்பிடி போன்றவற்றுக்கு ஏற்ப பேட், கிளவுஸ் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான வீரர்களுக்கு இதுபோலத் தரமாகவோ விருப்பப்படியோ கிரிக்கெட் பேட்டுகள் கிடைப்பதில்லை. தற்போது மகளிர் கிரிக்கெட்டும் பிரபலமடைந்துவருகிறது. அவர்களுக்கென பிரத்யேக பேட்டுகளும் உபகரணங்களும்கூடக் கிடைப்பதில்லை. அதற்காகத்தான் கிரிக்கெட் உபகரணங்களை தயாரித்து வழங்கும் பணியைத் தொடங்கினேன்.” என்கிறார் அனுபம் சுனில்.
கிராமங்களிலும்கூட...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அதே தரத்திலான பேட்டுகளை திருச்சியில் இருந்தபடியே உருவாக்கிக் கொடுத்துவருகிறார் அனுபம் சுனில். பேட்டின் பிளேடு நீளம், ஹேண்டில் வடிவம், நுனிப்பகுதியின் அளவு, எடை, கூடுதல் பிடிமானம், மெழுகுப் பூச்சு என உள்ளூர் கிரிக்கெட் வீரரின் விருப்பப்படி பேட்களைத் தயாரித்துத் தருகிறார். இதற்காக பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பேட் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து கிராமங்கள்வரை சர்வதேச கிரிக்கெட் பேட்டுகளை அவர் கொண்டுபோய் சேர்த்துவருகிறார். பேட் மட்டுமல்ல, சர்வதேச தரத்திலான கை கிளவுஸ், எல்போ கிளவுஸ், பேட்டிங் பேட்ஸ், பந்து உள்ளிட்டவற்றையும் உள்ளூரில் கிடைக்குமாறு செய்திருக்கிறார்.
“சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் கிரிக்கெட் உபகரணங்கள் உள்ளூர் வீரர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம். அந்த அடிப்படையில் லாப நோக்கம் அல்லாமல் உள்ளூர் வீரர்கள் விரும்பும் வகையில் தயாரித்துக் கொடுக்கிறேன். உள்ளூரிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு நம் இளைஞர்கள் அதிகம் செல்ல வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்துவருகிறேன்” என்கிறார் அனுபம் சுனில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT