Published : 11 Sep 2015 01:26 PM
Last Updated : 11 Sep 2015 01:26 PM
இத்தனை வாரங்களாக ஐ.டி. ஊழியர்கள் அலுவலகத்துக்குள் அல்லல்படும் கதைகளைப் பேசினோம். இது கொஞ்சம் வித்தியாசமானது, அலுவலகத்துக்குத் துளியும் தொடர்பில்லாத ஆட்கள் ஒற்றைத் தொலைபேசி அழைப்பில் ஒட்டுமொத்தமாகக் காலி செய்துவிடுகிற கதை இது.
“xxxx பேங்க்லேர்ந்து பேசுறோம்”
‘சொல்லுங்க மேடம்’
“உங்களோட கிரெடிட் லிமிட் 1 லட்ச ரூபாய் இருக்கு சார். கிரெடிட் கார்டு வாங்கிக்கோங்க”
“இல்ல மேடம் யோசிச்சு சொல்றேன்”
“உங்களுக்கு குட் சிபில் வேல்யூ சார். இப்போ நீங்க கிரெடிட் யூஸ் பண்ணீங்கனா, எங்க சைட் இன் ஃபியூச்சர்ல நிறைய பெனிஃபிட்ஸ் தருவோம் சார்”
“ம்ம்ம்ம்.. சரி மேம். ஓ.கே.”
மேற்கண்ட அந்த உரையாடலில் 50-க்கும் குறைவான வார்த்தைகளே உள்ளன. ஆனால், ஐ.டி.யில் பணிபுரியும் ஒருவரின் வாழ்க்கையை அழித்தொழிப்பதற்கு அந்த வார்த்தைகளே போதுமானவை.
இன்றைக்குக் காசு இல்லாதவர்களைக்கூடப் பார்க்கலாம். ஆனால், கார்டுகள் இல்லாதவர்களைப் பார்க்கவே முடியாது. ரேஷன் கார்டு, விசிடிங் கார்டு, ஐ.டி. கார்டு என்றிருந்த கார்டுகளின் காலம் இன்று டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு என்று கழுத்தை நெறிக்கத் தொடங்கிவிட்டது.
அதிலும், இந்த கிரெடிட் கார்டு தொல்லை மோசனமாது. கிரெடிட் கார்டு என்பது நவீன உலகில் உள்ள வசதி என்று நாம் நினைக்கலாம். வாழ்க்கையில் ஒரு கிரெடிட் கார்டு வாங்குவதில் என்னதான் சிக்கல் இருக்கிறது என்று பார்ப்போம்.
“100 பேரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்குவதும் ஒரு தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு வாங்குவதும் ஒன்று என்று புலம்புகிற அளவுக்குப் பல ஐ.டி. ஊழியர்களின் வாழ்க்கையை கிரெடிட் கார்டுகள் தேய்மானத்துக்கு இழுத்துச் சென்றிருக்கின்றன” என்று சொல்கிறார் கிண்டியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அரவிந்தராஜ்.
“சென்னை ஈ.சி.ஆர் பக்கம் சென்று பார்த்தால், ஒவ்வொரு ஐ.டி. நிறுவன வாசலிலும் மஞ்சள் குடை நட்டு வங்கி ஆட்கள் உட்கார்ந்திருப்பார்கள். கழுத்தில் பிரபல நிறுவனங்களின் அடையாள அட்டையோடு யாராவது வந்தால் போதும், ஆளை அப்படியே அமுக்கி, உலகில் ‘யாமறிந்த கார்டுகளிலேயே கிரெடிட் கார்டு போல் இனிதாவ தெங்கும் காணோம்’ என்று அதானி சொன்னார், அம்பானி சொன்னார் என மேற்கொள்களைச் சொருகி கிரெடிட் கார்டைத் தலையில் கட்டிவிடுவார்கள்” என்று வேடிக்கையாக சொல்கிறார் அரவிந்தராஜ்.
“கிரெடிட் கார்டு ஆரம்பத்தில் இனிக்கும். எப்போதாவது கிரெடிட் லிமிட் தாண்டிவிட்டால், அதற்காகவே காத்திருந்தது போல், ஒரு வங்கி அழைப்பு வரும். கிரெடிட் மற்றும் இதர கணக்கு வழக்குகளில் இல்லாமல், தனியே ஒரு குறிப்பிட்ட தொகையைக் கடனாகத் தருகிறேன் என்பார்கள். நமது தேவை 10 ஆயிரம்தான். ஆனால், அவர்களோ சார் ஐ.டி.யில இருக்கீங்க, உங்க சிபில் வேல்யூ நல்லா இருக்கு, 40 ஆயிரம் எடுத்துக்கோங்க என்பார்கள்” என்று தந்திரமாக மீண்டும் சுமையைத் தலையில் ஏற்றுவதை சொல்கிறார்.
அந்தக் கடனால் என்ன தொல்லையென்று கேட்டபோது, “வங்கியின் இதர பரிவர்த்தனைக்குள் அடங்காத கடனை இஎம்ஐ வழியாகத் திருப்பிச் செலுத்தலாம் என்று ஒரு மாதம் முடிந்த பின் காத்திருந்தால், அடுத்த மாதம் அதற்கான பில் எதுவுமே அனுப்பப்படாது. இரண்டாவது மாதமும் அதே நிலைமைதான். மூன்றாவது ஒரு இமெயில் வரும். அதில், “ கடந்த இரண்டு மாதங்களாக நீங்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தவில்லை. எனவே, உங்கள் கணக்கிலிருந்து அபராதத் தொகையோடு இவ்வளவு ரூபாய் எடுக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்” என்று சொல்கிறார்.
“2 மாதங்கள் இஎம்ஐ கட்டாததற்கு அவர்கள் பில் அனுப்பாததே காரணம். முதல் மாதம் கட்டாமல் இருந்தபோதே அதைத் தெரியப்படுத்தியிருக்கலாம். ஆனால், இரண்டாவது மாதமும் விட்டுவிட்டு, மூன்றாம் மாதத்தின் முதல் வாரத்தில் (சம்பளம் வந்த சில நாட்களில்) கணக்கிலிருந்து கணிசமான தொகையை எடுக்கிறேன் என்றால் இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை” என்று வேதனைப்படும் அவர், அந்த மாதத்துக்கு வாடகை, மற்ற இஎம்ஐ என மற்ற திட்டமிட்ட செலவுகள் எதையும் செய்ய முடியாமல் போகும்” என்கிறார்.
சம்பளக் கணக்குள்ள வங்கிகளிடம் தங்கள் நிறுவனங்களும் சுமூகமான ஒரு தீர்வை ஏற்படுத்தித் தருவதில்லை என்கிறார்.
“இன்ஸ்டண்ட் லோன், ஜம்போ லோன் என்ற ஏமாற்று வேலைகளும் ஆஃபர் என்ற பெயரில் ஐ.டி. ஊழியர்கள் மீது திணிக்கப்படுகின்றன. ஒரு கிரெடிட் கார்டையோ லோனையோ தருவதற்கு ஒரு தொலைபேசி அழைப்பிலேயே காரியத்தை முடிப்பவர்கள். அவற்றை வேண்டாம் என்று கேன்சல் செய்ய மட்டும் வங்கிக்கு வாருங்கள் என்கிறார்கள். அலுவலகம் செம்மஞ்சேரியில் இருந்தால், வங்கிக் கிளை வடபழனியில் இருக்கும். வேலைப்பளுவில் அங்கு போவதற்கு நேரமிருக்காது. அதை வைத்தும் சுரண்டலாம் என்பது வங்கிகளின் எண்ணம்.
வங்கிகள் மட்டுமன்றி, எங்களது கிரெடிட் கார்டுகளைக் குறிவைத்து எம்எல்எம் போன்ற செயின் பிசினஸ் கோஷ்டிகளும் செயல்படுகின்றன. தமிழர்கள் அதில் உஷாராகிவிட்டாலும், ஆந்திர ஊழியர்கள் பலர் லட்சக்கணக்கில் இழந்திருக்கின்றனர். இதனால் எத்தனையோ பேர் திணறி வாங்குகிற சம்பளத்தை அப்படியே வங்கிகளுக்குக் கொடுத்துவிட்டு, நூறுக்கும், இருநூறுக்கும் அல்லல்பட்டு நிற்கிறார்கள்” என்கிறார் ஐ.டி. ஊழியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சீத்தாராமன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT