Last Updated : 06 Oct, 2020 09:46 AM

 

Published : 06 Oct 2020 09:46 AM
Last Updated : 06 Oct 2020 09:46 AM

டிரெண்டிங் உலகம்: கட்டம் கட்டும் உடைகள்!

இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் மிஸ் மேட்ச் உடை கடந்த சில ஆண்டுகளாகவே டிரெண்டிங் உடையாக இருந்துவருகின்றன. ஆனால், அண்மை காலமாக அந்த இடத்தை ‘ஜிங்ஹாம்’ (Gingham) ஆடை பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதென்ன ஜிங்ஹாம்?

நமக்கெல்லாம் ஏற்கெனவே பரிச்சயமான கட்டம் போட்ட செக்டு, ஸ்டிரைப் டிசைன் கொண்ட ஆடைகளைத்தான் ஜிங்ஹாம் என்று அழைக்கிறார்கள். பழைய ஃபேஷன் சுழற்சி முறையில் மீண்டும் டிரெண்டிங்காக உருவெடுப்பதைப் போல், இந்த ஆடையும் இப்போது இளையோரை ஈர்த்துவருகிறது. அந்த ஆடையை நவீன ஸ்டைலுக்கு ஏற்ப அணிந்து ஃபேஷன் உலகைக் கலக்கிவருகிறார்கள் இளையோர்.

ஆண்களின் விருப்பம்

கட்டம் போட்ட சட்டை என்றாலே, அது பழைய ஃபேஷன் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், இப்போதும் இந்த செக்டு சட்டைகளும் பேன்ட்களும்தான் ஃபேஷன் உலகில் டிரெண்டாக இருந்துவருகின்றன. முன்பு ஒரு சில வண்ணங்களில் மட்டுமே செக்டு உடை வந்துகொண்டிருந்தது. ஆனால், தற்போது பல வண்ணங்களில் ஜிங்ஹாம் டிசைன் வந்துவிட்டது. ஜிங்ஹாம் பேன்டுகள் கறுப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம், பச்சை, சிவப்பு எனப் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன.

ஆன்லைன் விற்பனையிலும் இந்த வகையான ஆடைகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த ஜிங்ஹாம் பேன்ட்களை அணியும்போது அதற்கு மேட்சாக வெள்ளை நிற டிஷர்ட் அல்லது சட்டையை அணியலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள் ஃபேஷன் உலகினர்.

பெண்களின் விருப்பம்

பொதுவாக ஜிங்ஹாம் ஆடைகளை ஆண்களே விரும்புவார்கள் என்று நினைப்பவர்கள் அதிகம். ஆனால், உண்மையில் ஜிங்ஹாம் வகை ஆடையை அணிவதில் ஆண்களைவிடப் பெண்களே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும், ஆண்களைவிடப் பெண்களுக்கு வெவ்வேறு வடிவங்களில் ஜிங்ஹாம் ஆடை கிடைக்கிறது.

அதிக வெப்பம் கொண்ட பருவநிலைக்கு ஏற்ற வகையில் பருத்தித் துணியில் கிடைப்பதும், இவற்றுக்கு வரவேற்பு கிடைக்க ஒரு காரணம். பார்ப்பதற்கு எளிமையாகவும் சௌகரியமாகவும் உணரும் வகையில் இந்த ஆடை வடிவமைக்கப்படுகிறது.

மேல் கோட், மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டாப், பென்சில் ஸ்கர்ட் எனப் பலவகையான ஜிங்ஹாம் ஆடை பெண்களுக்காகக் கொட்டிக்கிடக்கிறது. ஒருவேளை இந்த ஆடையை நீங்கள் அணிய விரும்பினால், ஜிங்ஹாம் ஸ்கர்ட்டையும் டாப்ஸையும் சேர்த்து அணியக் கூடாது என்பதை நினைவில்கொள்ளுங்கள். இது உங்களுடைய ஆடை அணியும் முறையைத் தவறாக எடுத்துக்காட்டிவிடும்.

ஜிங்ஹாம் வகையைப் போலவே ஸ்டிரைப் வகை ஆடையும் பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. உயரம் குறைவாக உள்ளவர்கள் செங்குத்தான கோடு போட்ட ஆடை அணிந்தால், பார்ப்பதற்கு உயரமாகத் தெரிவார்கள். ஒருவேளை நீங்கள் உயரமானவராக இருந்தால், எல்லா வகையான ஸ்டிரைப் ஆடையையும் அணிந்து வலம்வரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x