Published : 04 Sep 2015 11:59 AM
Last Updated : 04 Sep 2015 11:59 AM
சென்னை தினத்தையொட்டிய பதிவுகளும் பாராட்டுகளும் எஃப்.எம். ஸ்டேஷன் முதல் எஃப்.பி பக்கம் வரை அனைத்தையும் ஆக்கிரமித்திருந்தன. ட்ராஃபிக், கூவம், ஜன சந்தடி எனச் சென்னை பற்றிய அத்தனை குறைகளையும் மறந்து சென்னையின் பிறந்த தினத்தை எல்லோரும் கொண்டாடினார்கள். 376 வயதைத் தொட்டாலும், பேரிளமையுடன் மின்னும் சென்னையைக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடாமல் இருப்பார்களா?
‘தெறிக்கும் சென்னை 2015’ என்ற பெயரில் ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னையின் பிறந்த தினத்தைக் கொண்டாடித் தீர்த்துள்ளார்கள் கோயம்பேடு புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள். நுழைவு வாயிலில் தொடங்கி முதல்வர் அறை வரை அத்தனை பகுதிகளிலும் சென்னையின் அடையாளங்கள் நிறைந்திருந்தன.
சென்னையை மையமாகக் கொண்டு இசை, கவிதை, மினியேச்சர், ஒளிப்படம் எனத் தங்களது திறமைகள் அனைத்தையும் பதிவுசெய்திருந்தார்கள் மாணவர்கள். பாரதிராஜா, பாலசந்தர், அப்துல் கலாம் ஆகியோரின் ஓவியங்களும், மீன் விற்கும் பெண், பழக்கடை வண்டிக்காரர், அதிகாலை மெரினா போன்ற ஒளிப்படங்களும் சென்னை என்னும் பெருங்கடலின் துளிகளாகப் பார்வையாளர்களை வரவேற்றன.
சென்னைக்கும் பாடல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கானா ஆனாலும் கர்நாடக சங்கீதம் ஆனாலும் இரண்டின் உச்சங்களையும் சென்னையில் காணலாம். சென்னை தினக் கொண்டாட்டங்களிலும் இசையின் தாக்கம் இல்லாமல் போகுமா? ‘தெறிக்கும் சென்னை 2015’ என்னும் வீடியோ பாடலைக் கல்லூரி மாணவர்களே உருவாக்கியிருக்கிறார்கள்.
‘உழைப்பைக் கொடுத்துப் பார் உயர்த்தும் சென்னை’ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் மெரினா, ரோட்டுக்கடை என ஒட்டுமொத்த சென்னையின் வாழ்வியலை 4 நிமிடங்களில் விளக்கிச் செல்கிறது.
“சென்னை ஒரு மாநகரம், நவீன உலகின் அடையாள நிலம் என்பதே சென்னை பற்றிய பலரின் பார்வை. ஆனால் சென்னை என்பதே அழகிய வாழ்க்கையின் அடையாளம்” என்கிறார் மூன்றாமாண்டு மாணவர் செல்வகுமார் ருத்ரன். அவர் சென்னை, வண்ணாரப்பேட்டையில் வசிக்கிறார். தெறிக்கும் சென்னை பாடலுக்கான வரிகளை அவர்தான் எழுதியுள்ளார். யூடியூப்பில் அந்தப் பாடலைப் பதிவேற்றியிருக்கிறார்கள். தான் கண்ட சென்னையை அந்தப் பாடலில் கொண்டுவர முயன்றுள்ளதாகக் கூறுகிறார் அவர்.
“திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பதை இப்போது சென்னை ஓடி திரவியம் தேடு என்று சொன்னால் மிகையாது” என்று பூரிக்கிறார் தெறிக்கும் சென்னை பாடலுக்கு இசையமைத்த செரின் பால். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் மகிழ் திருமேனி, “சென்னையை மீட்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
அண்ணா சாலையில் ஆங்கிலேயர்கள் அமைத்த டி ஏஞ்சல்ஸ் ஓட்டலின் கட்டிடம் பழுதடைந்துள்ளது. சென்னையின் ஜீவநதியான கூவம் மாசுபட்டுள்ளது. சென்னையின் பெருமையையும் பழமையையும் மீட்க வேண்டியது நமது கடமை” என்று மாணவர்களிடம் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT