Published : 29 Sep 2020 09:39 AM
Last Updated : 29 Sep 2020 09:39 AM
காபியின் வரலாறு காபியைப் போலவே சுவையானது. மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த சூஃபி அறிஞர் நூரூதீன் அபு அல் ஹசன் என்பவர் எத்தியோபியா நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கே ஒரு மரத்திலுள்ள பழங்களைச் சாப்பிட்ட பறவைகள் மிகவும் உற்சாகமாக இருந்ததைக் கவனித்தார். அந்தப் பழத்திலுள்ள கொட்டைகளைத் தானும் தின்றுபார்த்தார். அவருக்கும் உற்சாகமாக இருந்தது. இதன் பிறகே காபி அருந்தும் பழக்கம் தொடங்கியது.
கிழக்கிந்திய கம்பெனி (பிரிட்டிஷார்) வருவதற்கு முன்பாகவே இந்தியாவில் காபி அறிமுகமாகிவிட்டது. பாபா புடான் என்னும் சூஃபி துறவி, அதை இந்தியாவுக்குக் கொண்டுவந்தார். கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர் குன்றுப் பகுதியில்தான் காபி முதலில் பயிரிடப்பட்டது. கடந்த ஆண்டு சிக்மகளூர் சென்றிருந்தபோது, அங்கே காபி எஸ்டேட் வைத்திருக்கும் சுமீத் குல்கர்னி என்பவர் காபி குறித்த மேலும் பல சுவையான விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தமிழகமும் காபியும்
“என் அப்பா இங்கே 40 வருடங்களுக்கு முன் வந்தார். காபி எஸ்டேட் தொடங்கினார். நானும் அதில் ஈடுபட்டுவருகிறேன்.
முன்பெல்லாம் எவ்வளவு காபிக் கொட்டை விளைந்தாலும் அவற்றையெல்லாம் காபி வாரியத்துக்குத்தான் விற்க முடியும். 1992இல் இந்த நிலை மாறியது. தனியாருக்கும் காபிக் கொட்டையை விற்கலாம் என்கிற நிலை வந்தது. தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு மட்டும்தான் காபிக் கொட்டை ஏற்றுமதியாகிவந்தது. நாடு விடுதலை பெற்ற பிறகும் இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு காபிக் கொட்டை ஏற்றுமதியான நிலையில், பதிலுக்கு பல்வேறு இயந்திரங்கள் ரஷ்யாவிடமிருந்து இங்கே இறக்குமதி ஆகின.
தொடக்கத்தில் இருந்தே பிரேசில்தான் காபி உற்பத்தியில் முதலிடத்தில் இருந்துவருகிறது. உலகின் காபி உற்பத்தியில் சுமார் நாற்பது சதவீதம் பிரேசிலில்தான் நடைபெறுகிறது. அங்கேதான் உலக காபியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் அமேசான் காடுகளில் தீ பரவியது. காபி பூ மலரும் நேரம் அது. இதனால் காபி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இந்தியாவில் காபியை முக்கிய பானமாகக் கொண்டிருப்பவர்கள் தமிழக மக்கள் மட்டுமே. கர்நாடகத்தில்கூட வடக்குப் பகுதியில்தான் காபியை அதிகம் குடிப்பார்கள். தெற்கு கர்நாடகம் உட்பட இந்தியாவின் பிற பகுதிகளில் அதிகம் குடிக்கப்படுவது தேநீர்தான். என்றாலும், இளைய தலைமுறையினர் மெதுவாக என்றாலும் சீராக காபிக்குப் பழகி வருகிறார்கள். கபே காபி டே போன்ற நிறுவனங்களும் இதற்கு முக்கியக் காரணம்.
சிக்கரி கலப்படம் இல்லையா?
கடல் மட்டத்துக்கு மூவாரயிரம் அடிக்கு மேலே ‘அராபிகா’ என்ற காபிக் கொட்டை வகை பயிரிடப்படுகிறது. இது கொஞ்சம் மிருதுவானது. சுமார் இரண்டாயிரம் அடி உயரத்தில் ‘ரொபஸ்டா’ என்ற காபிக் கொட்டை வகை பயிராகிறது. இது கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கும். கூடவே, காபித் தோட்டங்களில் மிளகும் ஆர்கானிக் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.
என்ன காரணத்தாலோ சிக்கரி என்பதும், காபியின் ஒரு அங்கமாகிவிட்டது. சிக்கரி என்பது ஒருவகை வேர் (கிழங்குகளைப் போல்). இது குஜராத்திலுள்ள ஜாம் நகரில்தான் அதிகம் பயிரிடப்படுகிறது. பலரும் காபிப் பொடி - சிக்கரியை 80-20 என்ற விகிதத்தில் கலந்து டிகாக்ஷன் உருவாக்கிக் குடிக்கிறார்கள். காபியில் சிக்கரி கலப்பதற்கு எதிராகப் பல காபி எஸ்டேட் உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தது உண்டு. சிக்கரி கலப்பது கலப்படத்துக்கு ஒப்பானது என்றெல்லாம் வாதிட்டார்கள். ஆனால், சிக்கரி உரிமையாளர்களின் ‘லாபி’ மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கவே அதெல்லாம் எடுபடவில்லை.
எதிர்காலம் இருக்கிறதா?
அசாமிலிருந்து வந்து பல தொழிலாளர்கள் இங்கே வேலை செய்கிறார்கள். வங்கதேசத்திலிருந்து வந்தவர்களும் உண்டு. காபி எஸ்டேட்டுகளில் வேலை செய்ய வருங்காலத்தில் ஆள் கிடைப்பார்களா என்பது சந்தேகம். இப்போது அங்கே வேலை செய்துவருபவர்கள் தங்கள் அடுத்த தலைமுறையினர் வேறு வேலைகளுக்குச் செல்ல வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். முக்கியமாக, காபி எஸ்டேட்டில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு எளிதில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காது. இதற்காகவாவது, குறைந்த ஊதியமென்றாலும்கூட நகரங்களில் பணிபுரிய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இப்போதெல்லாம் காபித் தோட்டம் வைத்திருப்பது முன்பைப் போல் லாபகரமாக இல்லை. பலரும் மலைச்சரிவுகளில் தங்கள் நிலத்தில் காட்டேஜ்களை கட்டி, அவற்றைச் சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்குவிட்டு வருமானம் பார்க்கிறார்கள். வருங்காலம் குறித்து இப்போதைக்குத் தெளிவாக எதுவும் புலப்படவில்லை” என்றார் சுமீத் குல்கர்னி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT